|
| லாலே வெல்பவர் என்று வேறாக உரைத்துக்கொள்க;- (8) மேவுவார் என்றலை மேலார் - திரு ஏகம்பரைப் பொருந்திய அடியவர்கள் எனது தலைவர்கள். தலை மேலார் - என்னால் வணங்கப்படும் தகுதியுடையோர்; மறையோதிய வாயான் - "மாகம்ப மறையோது மிறையானை மதிட்கச்சி, யேகம்ப மேயானை" (அரசு. தேவா - கச்சி); - (9) நாகம்...பெண் - பூணும், ஏறலும், தாரும், பெண்ணும் உடையவராய் என்க; "பாந்தள் பூணாரம்" என்ற திருவிசைப்பா (கருவூர் - சாட்டியக்குடி) இங்கு நினைவு கூர்தற்பாலது. இருவர் - அயனும் அரியும்; மாகம்பம் - பெரிய அழற்றூணாகிய நிலை;- (10) வாதியா - வாதியாமே;- (11) கந்தண்பூம் - கம் - மேகம்; மேகம் சூழ்தலின் குளிர்ந்த அழகிய சோலை சூழ்ந்த. கலிக்கோவை - பதிகம்; "கலிக்கோவை சொல்லே" (திருப்பாசுரம் - 8). |
| தலவிசேடம் :- திருக்கச்சியேகம்பம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத் திறுதியிற் பார்க்க. II- பக்கம் - 1537 பார்க்க. |
2896 | புறத்தணைந்த தொண்டருடன் போந்தமைந்த திருமடத்திற் பெறற்கரும்பே றுலகுய்யப் பெற்றருளும் பிள்ளையார் மறப்பரிய காதலுடன் வந்தெய்தி மகிழ்ந்துறைவார் அறப்பெருஞ்செல் வக்காமக் கோட்டமணைந் திறைஞ்சினார். | |
| 998 |
| (இ-ள்) புறத்தணைந்த....போந்து - தம்முடனேகூடத் திருக்கோயிற் புறத்திலே வந்தணைந்த திருத்தொண்டர்களுடனே சென்று; அமைந்த திருமடத்தில்....வந்து எய்தி - தாம் எழுந்தருளும் பேறுபெற அதற்கென்று அமைந்த திருமடத்தின்கண்ணே, பெறுதற்கரிய பேறாகிய சிவஞானத்தினை உலகமுய்தற்பொருட்டுப் பெற்று அவ்வாறே உலகுக்கு அருளும் பிள்ளையார் இறைவரை மறப்பிலாத பெருவிருப்பத்துடனே வந்து, சேர்ந்து; மகிழ்ந்துறைவார் - மகிழ்ச்சியுடன் தங்கியருள்பவர்; அறப் பெரும்...இறைஞ்சினார் - அறங்களெல்லாவற்றையும் வளர்த்து உமை அம்மையார் எழுந்தருளியிருக்கும் பெரிய செல்வம் பொருந்திய திருக்காமக் கோட்டத்தினை அணைந்து வணங்கியருளினார். |
| (வி-ரை) புறத்தணைந்த தொண்டருடன் - தம் பரவிப் புறத்தணைந்தது போலவே வழிபட்டுப் புறத்து அணைந்த என்க. |
| அமைந்த - பிள்ளையார் எழுந்தருளுதற்கு ஏற்ற தகுதியுடன் அமைந்த. அமைந்த என்னாது அமைந்த என்றது அத்திருமடம் அவ்வாறுள்ள தகுதியுடன் முன்னமே அமைந்துள்ளது என்றதாம். "நீடு வாழ்திருப் பாடியு மனேகம்"(1159) என்றும், "சுடர்மனக் குகையு ளேகம்பத், தோமொழிப் பொருளை யடக்கியா னந்த முறுநர்வா ழிடம்பல வுளவால்" (காஞ்சிப் புராணம் - திருநகர - 109) என்றும் வருவன காண்க. |
| பெறற்கரும் பேறு - ஏனை எவரும் பெறுதற்கரியதாகிய சிவஞானப் பேறு; உலகுய்யப் பெற்றவர் -இப்பேற்றினைத் தமக்கெனவன்றி உலகமுய்தற் பொருட்டே பெற்றவர். அருளும் - பெற்றவாறே உலகுக் கருள்செய்யும். |
| மறப்பரிய காதல் - மறத்தற் கருமையாவது எஞ்ஞான்றும் அகலவிடாது மனத்திற் கொண்டிருத்தல். "மறக்குமா றிலாத" அன்பு. பருகிய மெய்யுணர்வினொடும் புறத்தே அணைந்து திருமடத்தில் உறைபவர் அவ்வுணர்வினை மறவாதே கொண்டருளினர் என்க. |