|
| விளமையைத் தோற்றுவித்தற் காரணமான பெண்ணும் ஆணும். கூர்மை - பெருந்தகை - "சிறுமையொடு பெருமையுமாம் பேராளன்" (தேவா); மருந்து - பிறவி நோய் தீர்ப்பவனாதல் குறிப்பு; - (2) பாறு - கழுகு; மாறிலி - பெயர்; ஒப்பில்லாதவர்; - (5) துறை - தொழில் - உயிர் முயற்சிகள் செல்லும் துறைகளும் செயல்களும். அவன் - பற்றுக்கோடாகி இயக்குபவன்;- (8) மாதி - பெரியவன். |
| தலவிசேடம் :- திருமாற்பேறு - III - பக்கம் 553 பார்க்க. |
| திருவல்லம் |
2901 | திருமாற்பே றுடையவர்தந் திருவருள்பெற் றெழுந்தருளித் கருமாலுங் கருமாவாய்க் காண்பரிய கழறாங்கி வருமாற்றன் மழவிடையார் திருவல்லம் வணங்கித்தம் பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்பிணைய லணிவித்தார். | |
| 1003 |
| (இ-ள்) திருமாற்பேறு உடையவர்தம்....எழுந்தருளி - திருமாற்பேறுடைய இறைவரது திருவருள் விடைபெற்று அங்குநின்றும் எழுந்தருளிச் சென்று; கருமாலும்....வணங்கி - கரிய நிறமுடைய விட்டுணுவும் தாம் பன்றியிருவெடுத்துக் காண இயலாத திருவடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளமையுடைய இடபத்தினையுடைய இறைவரது திருவல்லம் என்றும் பதியினை வணங்கி; தம்பெருமாற்கு....அணிவித்தார் - தமது பெருமானுக்குத் திருப்பதிகமாகிய பெரிய மாலையினை அணிவித்தருளினர். |
| (வி-ரை) திருவருள் பெற்று - திருவருள் விடை பெற்று. |
| கருமாலும்....மழவிடையார் - கருமா - பன்றி; பன்னியுருவெடுத்துத் தேடிய போது இறைவரது கழல்கள் திருமாலுக்குக் காண்பரிதாயின. ஆனால் அத்திருமால் விடையாயினபோது காண்பது மட்டுமேயன்றித் தாங்கி வரு மாற்றலும் வந்தது என்பதாம். ஆணவம் முற்பட்டபோது வெளிப்படாத இறைவர் அடிமைத்திறத்தின் முன் வெளிப்படுவர் என்பது குறிப்பு; கருமாலும் ஆற்றல் பெற்ற மழவிடை என்று கூட்டிப் பொருள் கொள்க; உம்மை உயர்வுசிறப்பு. கருமாலும்....கழறாங்கி - இவ்வடி முற்றுமோனை. |
| திருவல்லாமீ வணங்கி - முதலிற் பதியினை வணங்கி; "திருவல்லம் கண்டு சென்று" (11) என்ற பதிகக் குறிப்பும் காண்க. |
| பெரும் பிணையல் அணிவித்தார் - பிணையல் - மாலை; பிணைத்தலால் வருவது பிணையல்; பிணையல் என்றதற்கேற்ப அணிவித்தார் என்றார். |
| மருவாற்றல் - என்பதும் பாடம். |
| 1003 |
| திருவல்லம் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - வியாழக்குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| எரித்தவன் முப்புர மெரியன்மூழ்கத், தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல், விரித்தவன் வேதங்கள் வேறுவேறு, தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே. | |
| (1) |
| கற்றவர் திருவல்லங் கண்டுசென்று, நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன, குற்றமில் செந்தமிழ் கூறவல்லார், பற்றுவரீவன்பொற் பாதங்களே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |