|
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மலையினார் பருப்பதம் - சீபற்பதம். கலைமடப்பிணை - பெண்மான்; துணை - ஆண்மான். கணமயில் - மயிற் கூட்டம். எழில் கொள்வது இயல்பு - வசீகரித்துத் தம்வயமாக்குதல் அவர் தன்மை; - (2) குவளை - மதிமுகத் துலவுதல் - முகத்தில் குவளை போன்ற கண்கள் பிறழ்தல்;- (3) காலன் - காலை உடையவன்; காலத்தைச் செலுத்துபவன் (காலம் - கால தத்துவம்); - (4) சிலம்ப - எதிர்ஒலி செய்ய; கலை - கலைமான்; - (6) அடியவர்க்கு - உண்பிலான் - பலி திரிதல் தம்பொருட்டன்றி அடியவர்க் கருளும்பொருட்டேயாம். "அடியார் இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்தானே" (திருமந்); - (9) கிளர் மழை தாங்கினான் - "குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்" (திருவாய்மொழி); திருமால்; உளமழை - உள்ளத்தினின்று மழைபோல் வெளிப்படும்; உளம் அழை - உள்ளத்துள் நின்று அழைப்பவன் - (Inner voice) "உள்ளத்தினுள நின்ற கத்தாம்" (தான் - கருகாவூர்) கத்து - இடித்துக் கூறுதல் என்றலுமாம். (வ.சு.செ.);- (11) நந்தியார் - இறைவர்; நான்மறை நாவன் - மறையவர் குலம் குறித்தது; மறையினையே தம் வாக்கினாற் றமிழ் பாடுவர் என்றதும் குறிப்பு; "நற்றமிழ்க் கின்றுணை" என உடனருளிய கருத்துமிது. "வண்டமிழ்செய் தவநிரம்ப" (1921) என்றவிடத் துரைத்தவை பார்க்க. |
| தலவிசேடம் :- திருவிலம்பையங் கோட்டூர் - தொண்டை நாட்டின் 13-வது பதி. இது அரம்பை முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற பதி. அரம்பையங் கோட்டூர் என்று அக்காரணத்தால் போந் பெயர் மருவி இலம்பையங் கோட்டூர் என வழங்கலாயிற்று. சுவாமி - சந்திர சேகரர்; அம்மை - கோடேந்துமுலையம்மை; பதிகம் 1. அம்மை பெயருடன் சேர்த்துக் கோட்டூர் என்று வழங்கியதுபோலும். |
| இது கடம்பத்தூர் நிலையத்தினின்றும் தெற்கே மட்சாலை வழி 7 நாழிகையில் அடையத் தக்கது. இவ்வழியில் திருவிற்கோலம் என்னும் கூவம் 5 நாழிகையளவில் உள்ளது. வழி கடினம்; இடையில் கூவம் ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில் குறுக்கே ஏரி வழியாய்ச் சென்றால் ஒரு நாழிகையளவில் அடையலாம். குறிப்பு: - இவ்வூர் இப்போது கிறித்தவர்களால் மிகவும் குடியேறப்பெற்றுள்ளது. அருச்சகர் முதலியவர் கூவத்தின்று வந்து தான் வழிபாடு நடைபெற வேண்டும். அரிய திருப்பதிகத்தினால் அரிய பண்ணில் மிக அரிய பொருள்கள் காட்டிப் பிள்ளையார் போற்றிய இப்பதியை நாட்டுக்கோட்டை நகரத்தார் பலர் முயற்சியால் திப்பணி செய்து 1948-ல் குடிமுழக்கு விழா நடந்தேறியது. |
| திருவிற்கோலம் |
2903 | திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து பொருட்பதிகத் தொடைமாலை புரமெரித்த படிபாடி அருட்புகலி யாண்டகையார் தக்கோல மணைந்தருளி விருப்பினுடன் றிருவூறன் மேவினார் தமைப்பணிந்தார் | |
| 1005 |
| (இ-ள்) திருத்தொண்டர்...பாடி - திருத்தொண்டர்கள் பலரும் தம்மைச் சூழ்ந்து வரச் சென்று திருவிற்கோலப் பதியினையும் பணிந்து மெய்ப்பொருள் காட்டும் திருப்பதிகத் தொடைமாலையினை இறைவர் திரிபுரமெரித்த நிலைபற்றித் துதித்துப் பாடியருளி; அருட்புகலி ஆண்டகையார்.....பணிந்தார் - அருளினையுடைய சீகாழி ஆண்டகையார் தக்கோலப் பதியினை அணைந்து விருப்பினுடனே அங்குத் திருவூறலிற் கோயில்கொண்டு பொருந்தி யெழுந்தருளிய இறைவரை வணங்கியருளினார். |