|
| (வி-ரை) திருவிற்கோலம் - இது கூவம் என வழங்கப்படுகின்றது. |
| பொருட் பதிகத் தொடைமாலை - பொருள் - உண்மைப் பொருள். பொருட் பதிகம் - உண்மைப் பொருள் காட்டுதலை உட்கிடையாகக் கொண்ட பதிகம். இப்பதிகத்தின் உட்கிடையாவது புரமெரித்தபடியினைப் பாடுதலாம். முப்புரமெரித்தல் - உயிர்களுக்கு மும்மலஞ் சிதைத்தல் என்பர் திருமூல தேவர். |
| புரமெரித்தபடி பாடி - படி - நிலைமையினை - படியினை - இரண்டனுருபு விரிக்க. புரமெரித்தல் - பதிகக் குறிப்பும் தலவிசேடமும் பார்க்க. |
| தக்கோலம் - பதியின் பெயர்; வழக்கில் உள்ளது. |
| திருவூறல் - இறைவர் திருக்கோயில் கொண்ட இடம். |
| விருப்பினுடன் திருவூறல் மேவினார் - திருவூறலின்கண் எப்பொழுதும் விளங்கப் பொருந்தியருளும் இறைவர்; இங்குக் கங்காதரேசுவரர் கோயிலைச் சுற்றிலும் எப்போதும் நீரூற்றுப் பெருகி ஓட இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் நிலை குறித்தது. "அமர்ந்த பிரான்" (பதிகம் 7) என்ற குறிப்பு; தலவிசேடம் பார்க்க. ஆண்டகையார் - விருப்பினுடன் - பணிந்தார் - என்று பிள்ளையார்பால் கூட்டி உரைக்கவும் நின்றது கவிநயம். |
| 1005 |
| திருவிற்கோலம் (கூவம் = கூகம்) |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை |
| உருவினா ருமையொடு மொன்றி நின்றதோர் திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய செருவினா னுறைவிடந் திருவிற் கோலமே. | |
| (1) |
| சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில் உற்றதோ ரெரியின னொருச ரத்தினால் வெற்றிகொ ளவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவ னுறைவிடந் திருவிற் கோலமே. | |
| (2) |
| கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய செடன செழுமதிற் றிருவிற் கோலத்தை நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன் பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே. | |
| (3) |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகப் குறிப்பு :- உமையொரு பங்கன் - ஒரு சரத்தினால் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் - செருவினான் - உறைவிடம் திருவிற்கோலமே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) உருவினார் - உருவத்தால் நிறைந்த; செருவினான் - போர்க் கோலத்துடன் நிற்பவர்; இத்தலப் பெயர்க் குறிப்பும் தலவரலாற்றுக் குறிப்பும் காண்க. 2 - 3 - 6 - 7 - 9-வது பாட்டுக்களும் பிறவும் பார்க்க;- (2) வெற்றிகொள் - அதுவரை வெற்றிகொண்டிருந்த; - (3) அதிசயன் - இன்னதென் றறியவாராத பெருந்தன்மைகளை யுடையவர்; ஐயன் - பெரியவர்; தலவிசேடம் பார்க்க; - (4) விதைத்தவன் - வித்தை புகட்டியவன்; விதை - பகுதி; உளதாதற் பொருட்டு வித்திடுதல்; முனிவர்க்கு அறம் முதலியவற்றை உளவாக்கியவன்; - (5) மூவர் - அயன், அரி, அரன்; கூகம் - பதியின் பெயர்; |