1276திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

விற்கோலம் - கோயிலின் பெயர்; "கூக மேவிய திருவிற் கோலத்தை" (11) என்பது காண்க. கூகம் என்பது கூவம் என மருவி வழங்குவது ; - (7 - 8) சித்தவன் - அருள்நகை; நாளும் வாளுங் கொடுக்கும் நகை; - (9) ஆற்றலால் உருத் தெரியலன் - தமது தற்போத முனைப்பினால் தேடி யறியவொண்ணாதவர்; - (10) சீர்மையில் - சிறப்பில்லாத; நீர்மை - உண்மை.
தலவிசேடம் : - திருவிற்கோலம். தொண்டை நாட்டின் 14-வது திருப்பதி; இது கூவம் என வழங்கப்படுகிறது. கூகம் என்பது கூவம் என மருவிற்று; கூகம் பதியின் பெயரும், விற்கோலம் திருக்கோயிலின் பெயருமாக அறியப்படும். பதிகத்துள் "கூக மேவிய - திருவிற் கோலத்தை" என்பது காண்க. திரிபுர சங்கார காலத்தில் இங்கு இறைவர் வில்லையேந்திய கோலத்துடன் வீற்றிருந்தருளியமையால் திருப்பதி விற்கோலம் எனப் பெயர்பெற்றது; அதுபோழ்து தேரின் கூவரம் (ஏர்க்கால்) சிதைந்தமையால் கூவம் எனலாயிற்று என்பது புராணம்; சுவாமி யம்மையாரின் பெயர்கள் பதிகப் பாட்டுக்களும் (2 - 3 - 6 - 7 - 9) புரமெரித்த வரலாறுபற்றி எழுந்த நிலையும் கருதுக; சுவாமி தீண்டாத் திருமேனி; அதிக மழை, மழையின்மை, போர் முதலிய செய்திகளின் நிகழ்ச்சிகள் அவ்வப்போது சுவாமியின் திருமேனியிற் காணப்படும் நிறத்தினின்றும் அறியப்படும். இதனைப் பதிகத்துள் "ஐயனல் லதியசன்" என்று குறிப்பிடப்பட்டமை காண்க. சுவாமி - திரிபுராந்தகேசுவரர்; அம்மை - திரிபுராந்த நாயகி; பதிகம் 1. ஐயனும் அம்மையும் கூடியே திரிபுரமெரித்தருளினர் என்பது இருவர் பெயர்களாலும் பதிகம் 1 - 2 - 3 பாட்டுக்களாலும் அறிக.
இது கடம்பத்தூர் நிலையத்தினின்றும் தெற்கில் மட்சாலை வழி 5 நாழிகையளவில் அடையத் தக்கது. இதன் தென்மேற்கில் 2 நாழிகையளவில் திருவிலம்பையங்கோட்டூர் உள்ளது.
திருவூறல்
தொழுதுபல முறைபோற்றிச் சுரர்குருவுக் கிளையமுனி
வழுவிறவம் புரிந்தேத்த மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப் பதிகவிசை புனைந்தருளி
முழுதுமளித் தவரருளாற் போந்தனர்முத் தமிழ்விரகர்.

1006

(இ-ள்) தொழுது பலமுறை போற்றி - வணங்கிப் பலமுறையும் துதித்து; சுரர் குருவுக்கு.....தமை - தேவ குருவாகிய வியாழனுடைய தம்பி சம்வர்த்த முனிவர் குற்றமில்லாத தவம்செய்து போற்றியிட எழுந்தருளியிருந்த இறைவரை; மலர்ந்த....புனைந்தருளி - அன்பினால் மலர்ந்த பழுதில்லாத செழுமையுடைய தமிழ்மாலையாகிய திருப்பதிக இறையினைச் சாத்தியருளி; முழுதும்...தமிழ் விரகர் - எல்லாவற்றையும் படைத்த இறைவரது திருவருள்விடை பெற்றுச் சென்றனர் முத்தமிழ் விரகராகிய பிள்ளையார்.
(வி-ரை) சுரர் குருவுக்கு இளைய முனி - வியாழனுக்குத் தம்பியாகிய சம்வர்த்த முனி. சுரர்குரு - வியாழன்.
வழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் - சம்வர்த்த முனிவர் இங்கு தவம் புரிந்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.
மலர்ந்த - அன்பினால் மனத்தினின்றும் வெளிப்பட்ட; மாலை என்பதற்கேற்ப மலர்ந்த என்றார்.
இசை புனைதலாவது - இசையுடன் கூடிய பதிகத்தை அருளித் துதித்தல்.