[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1297

2919
திருந்தியவின் னிசைவகுப்புத் திருக்கண் ணப்பர்
  திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
  பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி,
யருந்தவர்க ளெம்மருங்கு மிடைந்து செல்ல
  வாளுடைய பிள்ளையா ரயன்மா றேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
  மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.

1021

2918. (இ-ள்) வந்தணைந்த....தாழ்த்து - எதிர்கொண்டு வந்து அணைந்தவர்களாகிய திருத்தொண்டர்கள் பிள்ளையாரை வணங்கித் தாழ்ந்து நின்று; மறை வாழ்வே!..என்ன - வேதங்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுட் சிறந்தவரே! எதிரே தோன்றுகின்ற இந்தத் திருமலைதான் முன்னை நாளில் காளன் என்னும் பாம்பும் யானையும் தம்முள் மாறுகொண்டு தம்மைப் பூசை செய்யும்படி இறைவனார் எழுந்தருளியுள்ள கெடுதலில்லாத சிறப்பினையுடைய திருக்காளத்தி மலையாகும் என்று சொல்ல; அவனிமேல்... மகிழ்ச்சி வர - நிலத்தின்மேலே வீழ்ந்து வணங்கி எழுந்து கைகளைச் சிரமேற் குவித்து மனத்துள் மிகுந்த மகிழ்ச்சி வருதலாலே; திருவிராகம்...செல்வார்-"வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பினில் பாடியபடி மேற்செல்வாராகி;

1020

2919. (இ-ள்) திருந்திய...பாடி - திருந்திய இனிய பண்ணமைதியின் வகுப்பினாலே திருக்கண்ணப்ப தேவரது திருத்தொண்டினைச் சிறப்பித்து விளங்கும்படி பாடியருளி; பொருந்தும்..போகி - பொருந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து துதிக்க எழுந்தருளி வந்து பொன்முகலியாற்றின் கரையினை அணைந்து தொழுது போய்: அருந்தவர்கள்...செல்ல - அருந்தவர்களாகிய திருத்தொண்டர்கள் எல்லாப் பக்கமும் நெருங்கிச் செல்ல; ஆளுடைய பிள்ளையார்...தாழ்ந்தார் - ஆளுடைய பிள்ளையார் பிரம விட்டுணுக்கள் தேடிக் காணமுடியாத மருந்தாகிய இறைவர் வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக்காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து நிலமுறத் தாழ்ந்து வணங்கினர்.

1021

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
2918. (வி-ரை) வந்தணைந்த மாதவத்தோர் - வந்து - எதிர்கொள்ள வந்து; மாதவத்தோர் - திருத்தொண்டர்கள்.
மறைவாழ்வே! - சைவ சிகாமணியே! - வேதநெறி தழைத்தோங்கவும் சைவ நெறி விளங்கவும் அவதரித்து அவ்விருநிலைகளையும் முற்ற நிலையிட்டருளினாராதலின் இவ்வாறு போற்றி விடைகூறத் தொடங்கினர் - பெரியார்களிடம் விடை கூறுமுன் இவ்வாறு பெருமைபட விளித்துப் பின் கூறுதல் மரபு.
காளனோடு....வழிபாடு செய - காளன் - காளம் - பாம்பு. பாம்பும் யானையும் தம்முள் இகலிப் பூசை செய்த வரலாறு தலபுராணத்துட் காண்க; இகலுதல் - ஒன்றொடொன்று போரிட்டு மேற்செல்லுதல்; தலவிசேடம் (II - பக்கம் 1060) பார்க்க. காளனோ டத்தி தம்மில் இகலி வழிபட்ட செயலை உவந்தேற்று இறைவர் எழுந்தருளியிருக்கும் நிலை சிவகோசரியாரும் கண்ணப்ப நாயனாரும் இகலி வழிபட்ட சரிதக் குறிப்புத் தருவது காண்க. இனம் பற்றி சீ என்ற சிலந்தி வழிபட்ட சரிதமும் உடன் கொள்க.