|
| திங்கள்புனை...போல - தானங்கள்தோறும் நேரே சென்று சென்று வணங்கிப்பாடும் வழக்கம்போலவே இங்கு நின்றபடியே மனத்துள்ளே கண்டு வணங்கிப் பாடியருளினார்; "சமாதியான் மலங்கள் வாட்டிப், பொருந்திய தேச கால வியல்பகல் பொருள் ளெல்லாம், இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே" (சித்தி - அளவை - 13) என்றதனால் ஞானயோகக் காட்சியினால் ஓரிடத்து இருந்தவாறே, ஏனையோர்க்குள்ள காலமும் இடமுமாகிய எல்லைகளின் அளவுகடந்து எல்லாம் நேரே கண்டு அறியும் நிலை கூடும் என்பது அறியப்படும். "எனதுள் நன்று மொளியான் - நாடிய தமிழ்க்கிளவி" (தேவா) "எந்தையடி வந்தணுகு சந்தமொடு" (தேவா - 11) என்ற கருத்தும் காண்க. போல - பயனும் வினையும் பற்றி உவமம் விரித்துக்கொள்க. "ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை" (தேவா) என்றதுமிக்கருத்தினைப் பெறவைத்து ஏனையோர்க்கும் புலப்பட உபதேசித்ததாம்; ஈண்டு ஞானயோகக் காட்சியால் இங்கு நின்றவாறே அவ்வத் தானங்களையும் பிள்ளையார் நேரே கண்டு அப்பதிகங்களை அருளினார் என்பதும் அவ்வப் பதிகங்களால் அறிந்து கொள்க. அரசுகளும் இங்குப் பயிற்சியால் நெடந்தூர முள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காணும் நிலைகள் ஈண்டுக் கருதத்தக்கன. |
| வானவர்கள் போற்றிசைப்ப - வடகயிலை - என்பது அங்குத் தேவர்களது வழிபாடுமட்டும் நிகழ்வதேயன்றி மனிதர்கள் எண்ணி வணங்குவதல்லாமல் நேரே சென்று வணங்கும் நிலையில்லை என்றருளியபடி. "கயிலை மால்வரை யாவது காசினிமருங்கு, பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ?" (1630) என்றதும், திருமலைச் சிறப்பிலும் (11-22), அரசுகளுக்குத் திருவையாற்றிற் கயிலைக் காட்சியருளிய இடத்தும் (1640 - 1644) உரைத்தவையும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. |
| வடகயிலை - திருக்காளத்தியாகிய தென்றிசைக் கயிலை மனிதர்களும் தேவர்களும் உடன் வழிபடவுள்ளது. இங்குத் தேவர் வந்து வணங்குதல் "கடவுண்மால் வரையி னுச்சி யதிர்தரு மோசை யைந்தும்" (750); "வான்மிசை யரம்பையர் கருங்குழற் சுரும்பு" (1089) என்பனவற்றாலு மறியலாம். வடகயிலை அவ்வாறன்றிவானவர்கள் மட்டும் நேரே போற்றிசைப்ப உள்ளதென்ற குறிப்புத் தர வடகயிலை என்று பிறிதினியைபு நீக்கிய அடைமொழி தந்து பிரித்துணர்த்தினார். |
| மங்கை - உமையம்மையார்; "மங்கை தெரிய வுருவில் வைத்து கந்த" (தேவா - கயிலை) |
| செங்கமல மலர்வாவி - "கெண்டை பாயச் சுனைநீல மொட்டலரும்", "நீர்க்கோட்டு" (தேவா) என்ற பதிகக் குறிப்புக் காண்க. |
| திருந்த - பதிகப் பாட்டுக்களிற் கண்டவாறு வழிபாடுகள் பலவற்றாலும் முயன்று மக்கள் திருந்தி வீடுபெறும்படி. "உலகாண்டு வீடுகதி பெறுவார்களே" (11) என்று பதிகப் பயன் அருளியதும், 2 முதல் 7 வரை பாட்டுக்களில் வழிபடும் நிலைகளை உரைத் தருளியவையும், சிறப்பாய் முதற் பாட்டில் உரைத்தவையும் கருதுக. பண் செவ்வழி என்ற குறிப்பும் காண்க. "செவ்வழிநற் பண்பாடும்" (தேவாரம்). |
| 1026 |
| I திருக்கயிலாம் (திருநொடித்தான்மலை) |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - தக்கேசி |
| பொடிகொ ளுருவர் புலியி னதளர் புரிநூ றிகழ்மார்பிற் கடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர் | |