[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1309

இடிய குரலா லிரியு மடங்க றொடங்கு முனைச்சாரற்
கடிய விடைமேற் கொடியொன் றுடையார் கயிலை மலையாரே.

(1)

போரார் கடலிற் புனலசூழ் காழிப் புகழார் சம்பந்தன்
காரார் மேகங் குடிகொள் சாரற் கயிலை மலையார்மேற்
றேரா துரைத்த செஞ்சொன் மாலை செப்பு மடியார்மேல்
வாரா பிணிகள் வானோ ருலகின் மருவு மனத்தாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- பொடி கொளுருவர், மங்கை தெரிய வுருவில் வைத்துகந்த தேவா பெருமானார், நஞ்சமுண்ட முதல்வர், ஒன்றும் பலவுமாய வேடத்தொருவர் என்றின்ன பல தன்மைகளா லறியப்படும் இறைவர் கயிலைமலையாரே.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) பொடி - திருநீறு; பொடிகொள் உருவர் - பொடி மூடிய தழல்போலும் உருவினையுடையார்; கொன்றை கலந்த நீற்றர் - கறை சேர் கண்டத்தர் - பொன்மை - வெண்மை - கருமை மூன்றும் தோன்ற நின்றது மார்பின் இடம்; மடங்கல் - ஆளி - சிங்கம்; இடிய - இடிபோல முழங்கும்; கடிய - கடிதாக நடந்து இடிக்கும். "நடக்கிற் படிநடுங்கும்...உருமேறோ?" (அற். அந் - 100) என்ற அம்மை திருவாக்குக் காண்க. மேற்சொடி - மேலே பொறித்த; ஒன்று - ஒப்பற்றது;- (2) மங்கை.....உகந்த - "மங்கையுடன்.....வீற்றிருந்தார்" (2924); கிளி - கிளிமொழி. சேர் - உவமவுருபு; தெரிய - விளங்கும்படி; பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த - கயிலைமலை - என்று கூட்டுக; அரவு - பெருமலைம்பாம்பு; மலைப்பாம்புகள்யானைகளையும் விழுங்கும் தன்மையுடையன; இவை யானைகளைச் சுற்றிப் பிணித்து எலும்புகளை நொறுக்கிக் கொன்று விழுங்குவன என்பது பிராணிகளின் சரித நூலோர் கண்டவுண்மை; "குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பு" (திருக்கோவை - 21); இனி விழுங்கி என்பதற்கு விடத்தினால் அவியச் செய்து என்றலுமாம். மழுங்க - கிடக்க; இருள் கூர்ந்த - மலை - மரங்களின் செறிவினாலடர்ந்த இருள் மிகுந்த மலை. கரிய - செய்ய - முரண்அணி;- (3) மா - யானை; விளைவர் - உலகம் மீளச் சிருட்டிப்படுதற்குக் காரணமானவர்; (இறைவர் - என்பதும் பாடம்); திரங்கல் - சுருங்குதல். திரங்கல் விளைப்பது திரை (நரை - திரை); திரங்கள் முகவன் - தோல் சுருங்கிய முகமுடைய குரங்கு;- (4) முந்நீர் சூழ்ந்த நஞ்சம் - முந்நீர் - கடல்; சூழ்ந்த - சுழற்றப்படலால் விளைந்த; இங்கு மந்தரத்தாற் கடையப்பட்டமை குறித்தது; சூழ்ந்த - பரவி எழுந்த என்றலுமாம்; நீர் உருவம் நீர் - நீர்மை - அழகு; கல்லறை - கற்குகை; மலை முழை. உழுவை - புலி;- (5) தென்றி - இனம் பிரிந்து; தென்றி....சேர் - "இனத்தினிற் பிரிந்த செங்கணேறென வெருக்கொண் டெய்தி" (820); இனம்பிரிந்த யானை திகைத்துச் சாரல் நெறி ஓடிக் கன்றும் பிடியும் அடிவாரம் சேர் என்றது கழல் சேர்வார் நன்று நினைந்து நாடி நன்னெறி வழியே ஓடி உரியாருடன் கூடித் திரண்டு திருஅடியின் வாரம் சேர்வார் என்று முன் இரண்டடிகளிற் கூறிய பொருளை உள்ளுறைக் குறிப்பாலுணர்த்தும் இறைச்சிப் பொருள் பயப்பது காண்க. நாடற்குரியார் - அன்பர். நாடற்குரியார் - இறைவர் என்று கொண்டு ஒருவர் - உரியார் என முடித்தலுமொன்று; முன் பொருளில் அடிவாரஞ் சேர் என்றதனை கழல் சேர்வார்க்கும், கரிக்கும் கூட்டுக. "தாயினேரிரங்கும்" (கருவூர் - கோயில் - 3) என்ற திருவிசைப்பாவுள்ளும் இவ்வாறு இறைச்சிப் பொருள் வருவது காண்க;- (6) போதார் - சிருட்டியின் தொடக்கத்தும் ஒடுக்கத்தினிறுதியிலும் அவ்வக் காலத்து மலர்ந்து குவியும் போதுபோல என்க. பனிமல்கு