[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1311

கீழோர்;- (11) அடி வந்தணுகு - பாடியருளிய திருக்காளத்தியினின்று இங்கு ஆகாய ஒலியலைகளின் மூலம் வந்து சேரும்; காளத்தியிலிருந்து பாடிய வரலாற்றின் அகச்சான்று.
குறிப்பு :- இப்பதிகம் முடுகிய சந்தமுடன் வழியெதுகை யாப்பின் அமைந்தது; பொருள் முற்ற அனுபவமுடைய தமிழறிந்த பெரியோர்பால் கேட்டுணரத் தக்கது. மேற் சில குறிப்புக்களே தரப்பட்டுள்ளன.
தலவிசேடம் :- திருக்கயிலாயம் - III - பக். 626 பார்க்க.
திருக்கேதாரம்
திருச்சிற்றம்பலம்
 

பண் - செவ்வழி - 2-ம் திருமுறை

தொண்டரஞ் சுகளி றும்மடக் கிச்சுரும் பார்மலர்
இண்டைகட் டிவழி பாடுசெய் யும்மிட மென்பரால்
வண்டுபா டமயி லாலமான் கன்றுதுள் ளவ்வரிக்
கெண்டைபா யச்சுனை நீலமொட் டலருங்கே தாரமே.

(1)

வாய்ந்தசெந் நெல்விளை கழனிமல் கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க் கோட்டிமை யோருறை கின்றகே தாரத்தை
ஆய்ந்துசொன் னவருந் தமிழ்கள்பத் தும்மிசை வல்லவர்
வேந்த ராகியுல காண்டு வீடுகதி பெறுவரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- தொண்டர்கள், விண்ணோர், முனிகள், குதிரைம்முகத்தார், ஒருகாலர்கள், ஊழியுணரும் யோகிகள் முதலிய பலதிறப்பட்ட வகையினரும் வந்து வழிபட இறைவர் திருவருள் செய்யவுள்ள இடம் திருக்கேதாரமே.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) அஞ்சு களிறும் - அஞ்ச - ஐந்தாகிய மதயானை போன்ற புலன்கள்; முற்றும்மை. இண்டை கட்டும் பணிவிடையின்போது பலன்களைப் புற விடயங்களிற் போகவிடாது சிவ சிந்தனையோடு இருத்தல்வேண்டுமென்பது விதி; "அன்பு நாரா வஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க வலர்தொடுத்தே, யென்புள்ளுருக்கு மடியார்" (ஏயர். புரா - 226); அடக்கி - இண்டை கட்டி என்க. அடக்கி வழிபாடு செய்யும் என்று கூட்டியுரைப்பினு மமையும்; வண்டு.....நீலமொட்டலரும் - கேதாரத்தின் உயர்ச்சியின் நீர்வளம் குறித்தது; "ஏய்ந்த நீர்க் கோட்டு" (11) என்பதும், "மலர்வாவி" (2924) என்றதும் காண்க:- (2) பதினெட்டு - மாபுராணங்கள்; ஆறு - வேதாகமங்கள்;- (3) புரோதாயம் - நீராடலின் ஒரு விசேடம்; "நீராண்ட புரோதாய மாடப்பெற்றோம்" (அரசுகள்) (III - பக். 120 - பார்க்க);- (4) குதிரைம்முகத்தார் - ஒருகாலர்கள் - இயக்கர்களின் வகையினராகிய தேவச்சாதியினார்; ஒருகாலர் - ஒருகாலுடையவர்கள். "கொம்பைப் பிடித் தொருக்காலர்களிருக்கான்மலர் தூவி" (நம்பி - கேதா - 3) என்று நம்பிகளும் இப்பதிகப் பதிகத்தில் அருளுதல் காண்க. பயில்வ - பயில்வனவற்றை; அகரவீற்றுப் பலவறிசொல்;- (5) ஊழியூழி யுணர்வார்கள் - ஊழிபலவும் அறியும் உணர்வுடைய சிவயோகிகள்; "தப்பிலா மன்றிற் றனிக்கூத்துக் கண்டபின், ஒப்பிலெழு பதுகோடி யுகமிருந்ததேனே" (திருமூலர் திருமந் - பாயி - 74); உழுவார்கள்போல - கிளைக்க - வினைபற்றிவந்த உவமம். கேழல் - பன்றி; தேரிய - தேரும்பொருட்டு; தேடுதற்கு.