1316திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தனல்ல
ஒண்சொலி னிவைமாலை யுருவெணத் தவமாமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- நாகம் அரைக்கசைத்தான், எருதேறி, விடமணி மிடறுடையான், புலித்தோலுடையான் என்றின்ன தன்மைகளா லறியப்படும் இறைவன் எழுந்தருளியுள்ள நெடுங்கோட்டுப் பருப்பதம் பரவுதுமே.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) சுடுநாகம் - மணியுமிழ் நாகம் என்று தனித்தனி கூட்டுக; இடுமணி - யானைகளின் பக்கங்களில் இடும் இரட்டை மணிகள். "படுமணி யிரட்டு மருங்கில்" (முருகு); யானை ஏறலன் எருதேறி - "கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே, இடபமுகந் தேறிய வாறு" (திருவா); "அயிரா வணமேறா தானே றேறி" (தேவா); ஏறி - பெயர்; ஏறியவர். நெடுங்கோட்டுப் - பருப்பதம் - நெடுங்கோடு - நீண்ட உயரமாகிய மலை. மலையின் மேலே 40 நாழிகையளவு ஏறிச்சென்று சேரவேண்டிய நிலை குறித்தது. நெடுங்கோட்டுப் படுமணி - மலைபடு மணிகளாகிய முத்து அரதனம் முதலியவை என்றலும் அமையும்;- (2) திரைய - திரையுண்டாக; திரை - தோலின் சுருங்குதல. உள்கும் - நினைக்கும்; உள்கும் - தமக்குள் வரும் நாள்களை எண்ணலுறும்; தோற்றம் - யோனிபேதம்;- (3) துனி - நோய்; தோன்றி - பிறவியில் வந்து; ஓர்....ஆதல் - ஓர்ந்து செய்யும் நல்வினையினால் வரும் பயனைப் பெறவேண்டுமானால்; இரண்டு மனம் வையேல் - இரண்டாவதாக ஒன்று உண்டு என்று எண்ணாதீர்கள்; "ஒன்றியிருந்து நினைமின்கள்" (தேவா) என்ற கருத்து என்றலுமாம்;- (5) துறை பல சுனை - பெருமலை யாதலின் பல சுனைகளையும் பிற நீர்நிலைகளையும் உடையது; வானவர் மகிழ்ந்தேத்த - வானமளாவ வுயர்ந்த பெருமலை யாதலின் இங்கும் தேவபூசை பேசப்படும்; திருநந்தி தேவர் வரம்பெற்று இம்மலையுருவாய் இறைவரைத் தாங்கி நிற்பதால் வானவர் ஏத்த என்றலுமாம்; பறைபடு - பறைபோல முழங்கும்;- (6) சீர்கெழு.....மனம் வையேல் - 3-ம் பாட்டுப் பார்க்க;- (7) புகை - தூபம்; விரை - சாந்தமும் சுகந்த மலர்களும்; "விரையிரண்டாந் தளராத விலேபனமுந் தயங்குசுகந் தமுமென்ன" (பேரூர்ப் புராணம் - மருதவரை - 32); கமலம் - தாமரை; மறையவர்க்குரிய திருவடையாள மாலை; இறைவர் மறையவர் என்ற குறிப்பு. தாமரை சிவபெருமானது அருச்சனைக்குச் சிறப்பாய்க் கொள்ளப்படும்;- (8) நெடுங் கிணறு - நினைப்புக்கள் பலவும் பலதுறையும் ஆழ்ந்து செல்வதாலும் இறைக்க இறைக்க மேலும் ஊறுவதாலும் கிணறு எனப்பட்டது; "ஆழ முகந்தவென்னை". மனத்தினை....அடையாமை - வலித்து -வற்புத்தி உலகச் சார்பினின்றும் இறைவன்பால் திருப்பி;- (9) அடையாமல் - பரவுதுமே என்று முடிக்க;- (10) சடம் கொண்ட - ஞானமின்றிப் பருப்பொருள் கொண்ட; சடம் - சித் அல்லாதது; மடங்கொண்ட விரும்பியர் - அறியாமையால் பொய் பலவும் விருப்பம் கொண்டவர்கள்; பேய்த்தேர்ப் பின்....செல்வார் - பேய்த்தேர்ப்பின் - (குறித்து) நீர்பெறப் போதலாகிய வீண்செயல் போல; செல்வார் - செல்பவர்களே; விளிவேற்றுமை. போதுமின் - அதனைவிட்டு இங்குப் போதுங்கன்; படம் - உரிவை;- (11) வெண் செந்நெல் - நெல்லின் சிறந்த வகை; இசை முரல் - தேவகானங்களும் தேன்வண்டுகளி னிசைகளும். உரு எண -குறித்த பொருளை உருவெளிப்படும்படி அழுந்தி அறிய; தவம் - சிவபூசை - தவப்பயன்.