| "வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்" (875) என்றும், "காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்" (1917) என்றும் வந்தவை காண்க. இவை அரனை நோக்கிச் செய்யப்பட்டன. விட்டுணுவுக்கும் மகப்பேறு தந்தது சிவபெருமானை நோக்கிச் செய்து தவமே என்ற வரலாறும் கருதுக. |
| அரன்...செய்த - ஈண்டு அருச்சனையாவது அடியார்களை அமுதூட்டியும் அவர்களுக்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும் வழிபடுதல். |
| தவம் புரிந்து - செய்த - அந்நலத்தால் - அரன் பூசையும் அடியார் பணியும் என்றிரண்டுமே பெறத்தக்க உறுதியாவன என்பது வேத உள்ளுறையாம்; அவையே மண்ணினிற் பிறந்தார் பெறும் பயனாவன. இம்மை மறுமை வீடு என்ற பயன்களையும் தரவல்லன; இவையன்றி வேறில்லை எனச் சூளுறவு கூறி எடுத்துக்காட்டுவது மேல்வரும் இப் பரவையின் வரலாறாகும்; ஆதலின் அவ்விளைவுக் கேற்றவாறு வரும் இம்மகவு அவ்விரண்டன் காரணமாகவே வருதல் தகுதியாதல் காண்க. |
| அடியார்க்குரிய அருச்சனை - இவை இளையான்குடி மாறநாயனார் - குங்குலியக்கலய நாயனார் - அப்பூதி நாயனார் முதலியோர் சரிதங்களுள் விரிக்கப்படுதல் காண்க. |
| உலப்பில - அளவுபடாதவற்றை; அகரவீற்றுப் பலவறி சொல்; இரண்டனுருபு விரிக்க. |
| அந்நலத்தால் - அகரம் - முன்னறிசுட்டு; பண்டறிசுட்டு என்றலுமாம். |
| வயிறெனும் கமலத்துப் - பூமகளெனக் - கொடி - மனைவியார் வயிறு கமலமாகவும், அதில் வரும் பெண்கொடி அப்பூவின் மகளாகவும் உருவகம் செய்தார். பூம்பாவை எனவரும் பெயர்த்தகுதியைக் காட்டுதல் கருத்து. 2942 பார்க்க. |
| உரிய - பூவினுக்கு உரிமையுடைய; கொடி - கொடி போன்றவன். |
| 1040 |
2939 | நல்ல நாள்பெற வோரையி னலமிக வுதிப்பப் பல்பெ ருங்கிளை யுடன்பெரு வணிகர்பார் முழுதும் எல்லை யிற்றன முகந்துகொண் டியாவரு முவப்ப மல்ல லாவண மறுகிடைப் பொழிந்துள மகிழ்ந்தார். | |
| 1041 |
| (இ-ள்.) நல்ல....உதிப்ப - நல்லநாள் பெறவும், அந்நாளில் ஓரையின் நலமும் மிகப் பெறவும், அவ்வாறு பிறக்க; பல்பெருங் கிளையுடன்....உவப்ப - பல பெரிய சுற்றத்தார்களோடும் பெருவணிகராகிய சிவநேசர் அளவற்ற செல்வங்களை முகந்தெடுத்துக்கொண்டு உலக முழுதும் எல்லாரும் மகிழும்படி; மல்லல்...பொழிந்து - செழிப்புடைய கடைவீதியில் பொழிந்து; உளம் மகிழ்தார் - மனமகிழ்ந்தனர். |
| (வி-ரை.) நல்ல...உதிப்ப - முன் கூறியபடி உளதாகிய பெண்கொடி நல்ல நாளும் நல்ல ஓரையும் வாய்யக்கப்பெற்றுப் பிறக்க; உதிப்ப - முன் பாட்டில் உதித்தாள் என்றபடிவந்த பெண் இவ்வாறாகிய நன்னாளில் நல்வேளையில் பிறக்க என்றபடி; ஓரை - வேளை; "பேணியநல் ஓரை எழ" (1920) என்றதன் உரை பார்க்க. |
| பெருங் கிளையுடன் - பெருவணிகர் - தனம் முகந்துகொண்டு - அப்பெருவணிகரேயன்றி அவரது பெருங் கிளைஞரும் மகிழ்ந்து தாமும் தனம் முகந்து பொழிந்தனர் என்க. பெருங் கிளைஞர் - பெரு வளமுடைய சுற்றத்தார். இவரே இவ்வாறு தாமும் தனம் பொழியவல்லார். |
| பெருவணிகர் - வணிகருட் சிவநேசர் சார்ந்த உட்பிரிவாகி மரபு. "சீர்ப்பெருவணிகர்" (2931). |