[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1333

தனம் முகந்துகொண்டு - முகத்தலளவையாற் கூறியதுகொண்டு, பொழிந்த தனங்களினது அளவுமிகுதியும் தனத்தை எண்ணிக்கொள்வதுபோலன்றி எண்ணிக்கையில்லாது முகந்து பொழிந்த நிலையும் குறிக்கப்பட்டன. பார் முழுதும் - யாவரும் உவப்ப - என்று கூட்டுக. கடல்வாணிபமாதலின் எல்லாத் திசையினரு முவப்பக் காரணமாயிற்று.
ஆவண மறுகிடைத் தனம் யாவருமுவப்பப் பொழிந்தார் என்றது - இவர் கடல் மிசைக் கலம் பலவும் போக்கி அப்பொருட்குவை மனைப்பட மரக்கலம் கரைநிரைக்கும் வளத்தார் (2932) என்றதனால் கடற்றுறைமுகக் கரையில் ஆவணமறுகில் அமைந்த அகன்மனையினையுடையார் என்பது பெறப்படும். ஆதலின் இங்கு மீக்கூர்ந்த மகிழ்ச்சியினால் தனங்களை முகந்துகொண்டு யாவரும் உவப்ப அந்த ஆவணமறுகில் மழைபோலப் பொழிந்தனர் என்க. பொழிந்து - இன்னாருக்கு என்று குறியாமல் யாவரும் கொள்ளும்படி மழைபோலப் பொழிந்து; "அனைவருக்கு நவமணிக ளுந்துகிலு மம்பொனுஞ் சிந்தி யள்ளியு முவந்துவீசி" (46) என்ற திருத்தொண்டர் புராண வரலாறு இங்குச் சிந்திக்கற்பாலது. மேல், "அடியவர்க்குச் - செய்து...மறையவர்க்கு - அளித்து" என்பவை இன்னார்க்கு இவை என்று குறித்துச் செய்வனவற்றைக் கூறுதல் காண்க. இந்நாளினும் பெரு மகிழ்வுகளில் வீதியிற் காசு இரைத்தல் நிகழ்வது காண்க.
ஓரையு நலமிக - என்பதும் பாடம்.

1041

2940
ஆறு சூடிய முடியினா ரடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகளியா வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண் டினவெலா மளித்துப்
பேறு மற்றிது வெனும்படி பெருங்களி சிறந்தார்.

1042

(இ-ள்.) ஆறு...செய்து - கங்கைகையத் தரித்த சடையினையுடைய சிவபெருமானது அடியார்களுக்கு அன்பு மிகுதியினாலே எல்லையில்லாத பூசைகள் எல்லாவற்றையும் மிகவும் செய்தும்; மாறிலா...அளித்து - ஒப்பற்ற வேதியர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை யெல்லாம் அளித்தும்; பேறு...களிசிறந்தார் - இதுவே பெரும் பேறாகும் என்று கூறும்படி பெருமகிழ்ச்சியினிற் சிறந்தனர்.
(வி-ரை.) அடியவர்க்குப் பூசனைகள் யாவையும் மிகச் செய்து - அடியார்கக்கு அருச்சனை புரிந்த அந்நலத்தாற் பெற்ற பேறாதலின் அந்நன்றிக்கு அவர்க்கு முதலிற் பூசனைகள் முற்றச் செய்தனர் என்க. பெருமகிழ்ச்சிக் குறியாகக் காசு பொழிந்த பின்னர், முதலில் குறித்து வழிபட நின்றார் அடியவர்களேயாம் என்ற தகுதியும் காண்க; பூசனை யாவையும் - முன் (2938) கூறியவை பார்க்க. மிக - மேன்மேலும் மிகும்படி. அடியவரை முன்கூறியது சிறப்புப்பற்றி.
மறையவர்க்கு - வேண்டின எல்லாம் அளித்தல் - வேதியர்க்கு அவர் வேண்டும் பொருள்களை எல்லாம் தானம் செய்தல். மறையவர்க்கு வேண்டியன அளித்து என்றதனால் முன்கூறிய அடியவர்கள் வீடும் வேண்டா விறலினராதலும், அதுபற்றி அவர்கட்கு பூசை மாத்திரம் விதிப்படி செய்தாராதலும் குறிக்கப்பட்டன.
பேறு மற்று இது - பெண்மகப் பெற்றதே பெரும் பேறு என்னும் கருத்துப்படும்படி; உண்மை இதுவே பெரும்பேறாகப் பின்னர் விளையும் வரலாறு குறிக்க. அடியார் பூசை செய்தலும் மறையவர்க்களித்தலும் ஆகிய இவை செய்யப்பபெற்றதே பெரும் பேறு சொல்லும்படி என்றலுமாம்.