[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1343

செந்நின்று - நேரே நிமிர்ந்து நின்று; வழிபாட்டில் உடல் நிற்கவேண்டிய நேர்நிலை; செம்மையுள் நின்று என்ற குறிப்புமாம்.

1052

2951. (வி-ரை.) சுற்றம் நீடிய கிளை எலாம் கேட்ப - சுற்றத்தாரும் நீடிய கிளைஞரும் ஆகிய எல்லாரும் கேட்கும்படி உறுதிகூறும் பேரொலியினாலே; இன்பத்துன்பங்களுள் விடாது சுற்றிச் சூழ்தலால் சுற்றம் எனவும், ஒரு மரத்தினின்றும் வெவ்வேறாகக் கிளைக்கும் பல கிளைகள் போல வருதலிற் கிளை எனவும்படும்; வமிச் விருட்சம் (Geneological tree) வழக்கும் காண்க. எலாம் - பலதிறப்பட்ட எல்லாரும் என்க.
சுற்ற நீடிய கிளை எலாங் கேட்ப - மொழிந்தது என்னையோ? எனின், இவர்பாற் பெண்ணை மணம்கொள்ள உரிமையுடையவர்கள் சுற்றத்தார்; ஆண்மகவு இன்றி இவர் "குடிக்கு ஒருபுதல்வி யாதலினால்" பெண்ணோடு நிதியும் பெற எதிர்ப்பார்க்கும் நிலையினரும் அவருள் இருத்தல் கூடும்; ஆண்மக வில்லாமையால் இவரது அருநிதிக்குப் பின் உரிமைத் தாயத்தார்களாகிய கிளைஞர்களும் பலர்; ஆதலின் இவர்கள் கேட்ப "இவர் எனது உண்மைசசுற்றமும் கிளையுமல்லர்; இவை பாசக்கூட்டமே; ‘உறவாவா ருருத்திரபல் கணத்தினோர்கள்' (தேவா); ‘சுற்றம் மாசிலா வீச னன்பர்' (திருவிளை. புரா) என்றபடி காழிநாடுடையவரே எனது குருவும் சுற்றமும் ஆளுடைய நாயகருமாவர் என்று கண்டேன்; எனது பெண்ணையும் நிதியையும் என்னையும் அவருக்கே கொடுத்தனன்" என்று சுற்றமும் கிளையும் கேட்ப மொழிந்தனர். மொழிந்த பொருள் யாவரும் அறிய விளம்பப்பட்டதோடு அவர்களும் அறிவுறுத்தப்பட்டனர் என்க. என்னையும் (அடிமையாகக்) கொடுத்தனன் - என்பதாம்.
முற்றும் என்னையும் - "அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமும், குன்றே யனையா யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ?" (திருவா) என்ற நிலை காண்க. எனது உயிர் உடல் பொருள் இவையும் இனிக் காழிநாடுடையவரது உரிமையாயினமையின் இனி இவற்றைப்பற்றியும் உடற் சுற்றமாகிய உங்களுக்கு ஒரு பற்றில்லை என்று சுற்றத்தார்க்குச் சொல்லியவாறு.
கற்ற மாந்தர் வாழ் நாடு - "பாமருவுங் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே, காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே" (பிள் - மேகரா - 9); "கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்" (பிள் - மேகரா 11) முதலாக வரும் பிள்ளையாரது திருவாக்குக்கள் காண்க. கற்ற - சிவனையும் சிவனடியாரையும் வழிபடுதலே பிறவிப் பயனாகிய உறுதிப்பொருள் என்று கற்றுத் தெளிந்து அவ்வழி ஒழுகக் கற்ற. "கற்றதனா லாய பயனென்கொல் வரலறிவன், நற்றா டொழஅ ரெனின்" (குறள்).
காழி நாடு - காழிப்பதி; இவ்வாறு பெரியோர் வாழும் பதியை நாடென்று கூறுதல் மரபு.

1053

2952
எல்லை யில்பெருங் களிப்பினா லிப்பரி சியம்பி,
முல்லை வெண்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையு மறையவர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனுஞ் சிந்தையான் மகிழ்ந்தார்.

1054

(இ-ள்.) எல்லையில்....இயம்பி - அளவுகடந்த களிப்பினாலே இவ்வாறு சொல்லி; முல்லை.....வளமையும் - முல்லையரும்பு போன்ற கூரிய வெள்ளிய பல் வரிசையினையும்