[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1381

மாடத்து வைத்து உபசரித்து வந்து, அவர் வந்து சாரும்போது அக்குடத்தைப் பாவையாராகவே அவர்வசம் கொடுத்தல் கருதியமையாலும், பெண்களின் மணப்பருவமாகத் தமிழ் இலக்கணம் வகுக்கும் நிலையிற் பன்னிரண்டாண்டு அளவு சார்கின்றமையாலும் சடையாரின் கருணையின் பெருமையினாலே அவ்வுடலிலே மீளப் புனருற்பவம் நிகழ்கின்றமையாலும், பிறவாற்றாலும் இடைப்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சியினளவும் பெற்றுப் பன்னிரண்டாண்டளவு அணைந்தனர் என்பதாம்.
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிட - தொடுத்த - பதிகங்களிற் பத்தாவது பாட்டிற் பரசமய நிராகரிப்புச் கூறும் நிலை தொடுத்த என்க. தொடுத்தல் - மேற்கொள்ளுதல். தொடுத்த - பாட்டு - என்று கூட்டுக. தொடுத்த வெஞ்சமண் என்று கூட்டி சைவத் திறத்தை இழித்தல் செய்வதனைத் தொழிலாகக் கொண்ட பகைமை தொட்ட கொடிய சமண் என்றுரைத்தலுமாம். சமண் பாட்டு - முன்பாட்டிலுரைத்தவை பார்க்க.
சமண் பாட்டினிற் றோன்றிட - சமண் பாட்டாகிய பத்தவாது பாட்டு அருளியவுடன் குடத்தினின்றும் வெளிப்பட. பாட்டுக்கள் தோறும் வரிசைப்பட ஐப்பசி முதலாக அவ்வம்மாதங்களையும் அவற்றில் நிகழும் நல்விழாப் பொலிவுகளையும் கூறியருளினாராதலின் அம்முறையிற் பத்துப் பாட்டுக்களுக்குப் பத்துமாதங்கள் சென்று முறைபட்டன. பத்துமாதங்க ணிறைவுற்றகாலைக் குறித்த பத்துப் பாட்டுக்களும் நிறைவாயின போது குடமுடைந்து பாவையாரும் எழுந்து தோன்றினார் என்ற உள்ளுறையாகிய, தகுதியும் கண்டுகொள்க.
கண்டு - முன்னர் (2983) என்பு நிறைந்த மட்குடத்தைக் கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதிப் பதிகமருளிய பிள்ளையார், அதனிறுதியில் இப்போது தோன்றிடக் கண்டு என்க. பின்னர்க் கண்ணுதல் கருணைவெள்ள மாயிர முகத்தாற் கண்டார் (3007) என்பதும் காண்க.
விடுத்த வேட்கையர் - வேட்கை - விருப்பு; வேட்கை விட்டவர் என்க. "வென்றவைம் புலனான் மிக்கீர்" (401) என்புழிப்போலக் காண்க. பிள்ளையார் இவ் வருட்செயலை எவ்வாறாயின வேட்கையும்பற்றிச் செய்தாரல்லார் என்பது குறிப்பு. பின் நிகழ்ச்சியும் காண்க. வேட்கை விட்டார் என்னவே வெறுப்புமிலர் என்பதும் பெறப்படும். "வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்" (குறள்) என்ற கருத்தும் குறிக்க. "வேட்கைவிட் டார்நெஞ்சின், மூடத்து ளேநின்று முத்தி தந்தானே" - (திரு மந்.. 8 - 493); "ஆராவியற்கை யவாநீப்பி னந்நிலையே, பேராவியற்கை தரும்" (குறள்)
திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் - பதிகப் பயன் கூறிப் "பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழால் - நலம் புகழ்ந்த பத்து" என்று பதிகம் நிறைவாக்கியருளினார். விரித்தல் - நிறைவாக அருளுதல்.
விதித்தார் - என்பதும் பாடம்.

1091

திருமயிலை "தேனமர் பூம்பாவைப் பாட்டு"
திருச்சிற்றம்பலம்

பண் - சீகாமரம்

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

(1)