|
| (வி-ரை.) இதனால் இது கண்ட விண்ணோர் மண்ணோர் செய்திகள் கூறப்பட்டது. |
| தேவரு முனிவர்தாமும் - இவர்கள் இந்நிகழ்ச்சி காண்பதற்கு விசும்பிடை வந்து நெருங்கியவர்கள் (2982). |
| திருவருட் சிறப்பு நோக்கி - குடத்தினின்று எழுந்த பாவையாரைத் திருவருட் சிறப்பாகவே நோக்கினார்கள் என்பது. |
| பூவரு விரைகொள் மாரி - பூவரும் - பூவினாலாக்கப்படும்; பூசினின்று வரும். பூ - மந்தாரம், கற்பகம் முதலிய தேவருலகப் பூக்கள். |
| ஒழிந்த மண்ணோர் - தேவரும் முனிவரும் முன்பாட்டிற் கூறிய திறந்தவர்களும் ஒழிந்த ஏனைப் பண்புடைய உலகினர்கள். |
| வீழ்ந்தார் - நிலமுற விழுந்து பணிந்தனர். |
| 1093 |
2992 | அங்கவ ளுருவங் காண்பா ரதிசய மிகவு மெய்திப் பங்கமுற் றாரே போன்றார் பரசம யத்தி லுள்ளோர்; "எங்குள செய்கை தான்மற் றென்செய்த வாறி" தென்று சங்கையா முணர்வு கொள்ளுஞ் சமணர்தள் ளாடி வீழ்ந்தார் | |
| 1094 |
| (இ-ள்.) அங்கு அவளுருவம்....பரசமயத்தினுள்ளோர் - அவ்விடத்தில் அவளுடைய முன் கூறியவாறுள்ள உருவத்தைக் காண்போராகிய ஏனைப் பரசமயத்திலுள்ளோர்கள் மிக்க அதிசயமடைந்து இச்செய்தியினால் தத்தம் சமயங்களை நிகராகரிக்கப்பெற்று அவ்வவரும் தோல்வியடைந்தவர்களோபோ லாயினர்; எங்குள.....செய்கை தான் ...தள்ளாடி வீழ்ந்தார் - மற்று இச்செய்கைதான் எங்குள்ளது? எவ்வாறு செய்யப்பட்டது? என்று அறிந்து துணியமாட்டாது ஐயங்கொண்ட அமணர்கள் தள்ளாட்டமடைந்து நிலத்திற் றடுமாறி வீழ்ந்தனர். |
| (வி-ரை.) பங்கம் - பழுது; கேடு. பங்கமுற்றாரே போன்றார் - பங்கம் சேறு என்று கொண்டு தமது பரசமயச் சேற்றில் விழுந்தவர்கள் போலாகிய நிலையினை அறிந்தனர் என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள். சேற்றில் விழுந்தோம் என்ற அறிவு பெற்றபோது அவர்கள் அதினின்றும் மேலேற முயற்சிப்பார்களாதலின் அது போல இவர்களும் உண்மைதெரிந்து ஈடேற முயற்சிப்பார்கள் என்று விசேட உரையும் கண்டார்கள். |
| பரசமயத்திலுள்ளோர் - பங்கமுற்றாரே போன்றார்; சமணர் தள்ளாடி வீழ்ந்தார் - என்க. |
| பரசமயத்தார் - என்றது சமணருள்ளிட்ட பரசமயத்தார்களை எல்லாம் பொதுவில் உணர்த்திற்று. முன் நன்றியில் சமயத்தினுள்ளோர் (2982) என்ற கருத்து; அவருள் சமணர் தமது சமயக் கொள்கையின் பிடிவாத முடையவர்களானமையாலும், அந்நாளில் அவர்களே மிகுந்து வலிமையும் பெற்றிருந்தமையாலும் தமது சமயத்துக்குப் பங்கம் வந்ததென்ற நிலை கண்டபோது மேலும் உணர்வழிந்து தள்ளாடி வீழ்ந்தனர் என்பார் அவர்களை வேறு பிரித்தும் கூறினார். |
| மண்ணோர் (அறிவுடையார்) இறைஞ்சி - வீழ்ந்தார்; சமணர் (உண்மை அறிவு பெறாமையின்) தள்ளாடி வீழ்ந்தார் - என்ற நயமும் காண்க. |