|
| பிரமன்பால் ஆண்டு - மனித வருடம்; நான்கு - எண்; முகம் - முகம். பிள்ளையார்பால் ஆண்டு - என்ற பெயர்மட்டில் அமைவது; ஆயிரம் - எண்ணிறந்தது; முகம் - வாயில். |
| எழிலின் வெள்ளம் - கண்ணுதல் கருணைவெள்ளம் - ஈரிடத்திலும் வெள்ளம் - பெருக்கு - என்று வரினும் முன்னர்ப் பிரமன் கண்ட பெரு வெண்ணினது அழிவுறும் மாயாவிலாச அழகினையும், பின்னர்ப் பிள்ளையார் கண்ட பெண்ணின் அணிநலத்தின் மேல் வைத்து அதனையன்றி இறைவனது அழிவில்லாத, மாயைக்கு அதீதமாகிய, கருணைப் பெருக்கினையும் குறித்தது. |
| கண்ணுதல்...கண்டார் - நியதி தத்துவத்துள் நின்று பாவையாரை முன்னர் மறக்கருணை செய்து அழித்தெரித்த அந்நிலையே, ஈண்டு அறக்கருணை செய்து முன்னர் நின்ற வளர்ச்சியுடன் மீள உற்பவிப்பித்தலால் ஈண்டுக் கண்ணுதல் என்ற பெயராற் கூறினார். நுதற்கண் காமனை எரித்தஆறே மீள உயிர்ப்பித்தருளியமை குறிப்பு. நெற்றிக் கண்ணின் கருணைத்திறம் பற்றி "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" (அரசுகள்); "வல்லிருளா யெல்லா, வுலகுடன்றான் மூடவிருளோடும்வகை நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர்" (நம்பி - கலய நல்லூர் - 4); "நெற்றியிற் றிகழ்ந்த வொன்றை நாட்டமும்....ஒள்ளிதின் விளங்க நாடக மாடுதி நம்ப" (கோயினான் - 12) முதலிய திருவாக்குக்கள் காண்க. |
| கருணைவெள்ளங் கொண்ட நுதற்கண்ணினால் இறைவர் கண்டமையால் பிள்ளையார் கண்டார் என்பதும் குறிப்பு. "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்" (போதம் - 11). |
| வேதாப் படைத்தவள் எழிலின்வண்ணம் நான்முகத்தாற் கண்டான் - பிரமன் ஒருகால் மிக்க அழகுடன் ஒரு பெண்ணைப் படைக்க எண்ணி அவ்வாறே திலோத்தமையைப் படைத்தான்; படைத்த பின் அவளழகினில் ஈடுபட்டுக் காமத்தின் மூழ்கி அவளைக் கண்டு தொடர, அவள் ஓடி மறைய, நான்கு முகத்தாலும் நான்கு திக்கினும் பார்த்தனன் என்பது பண்டைப் புராண வரலாறு; பெண் என்பது மாயை உருவம் என்றும் பாராது, தன்னாற் படைக்கப்பெற்றவள் தன் மகளாதலின் காமமூழ்கிப் பார்வை செய்தல் கூடாவொழுக்கமாம் என்றும் பாராது கண்டனன் எண்ணிலாண் டுற்ற தேவனாகிய பிரமன்; ஈண்டுப் பிள்ளையார் அவ்வாறன்றிப் பதினாறாண்டு பேர் பெறுபவர் கண்ணுதல் கருணைவெள்ளத்தையே கண்டார்; பிரமன் நான்முகத்தாற் கண்டான்; பிள்ளையார் ஆயிரமுகத்தாற் கண்டார் என்றிவ்வாறெல்லாம் பிள்ளையாரது பெருமையினைப் பலவாறும் உய்த்துணரவைத்த கவிநயம் காண்க; இறைவரது கருணைத் திறம் எத்தனை வகையானும் கண்டனுபவிக்கத்தக்க தென்பதுமாம்; இக்கருத்தையே பற்றிப் பின்னர் "மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முத லெவ்வுயிர்க்குங், காவலனார் பெருங்கருணை கைதந்த படியென்று" (3016) பன்முறையும் பணிந்தனர் என்றார். |
| அவளினும் நல்லாள் - பூம்பாவையாரின் அணிநலங்கள் பிரமன் படைத்த திலோத்தமையின் நலங்களைவிட மேன்மையும் நன்மையும் கொண்டன என்பதாம். என்னை? இது சிவஞானச் சிருட்டியாதலான். நன்மை - சிவனருள் விளைவு. |
| 1109 |
| வேறு |
3008 | இன்னணம் விளங்கிய வேர்கொள் சாயலாள் தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார் | |