1416திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மணம் இசைகிலா ராயினமையின், உயிரில்லாத பண்டம்போலக் கொண்டுபோய் - வைத்தனர் என்ற குறிப்பும் காண்க. ஆயின் அவ்வுயிர் என்ன நிலைமை பெற்றதென்னின்? அதுபற்றியே மேல் இப்பாட்டிற் சிவத்தை மேவினாள் என்றருளுதல் காண்க; மாதர்கள் கன்னிமாடத்திருந்து சிவத்தை எண்ணியே வாழும் நிலை முன்னாளிற் சைவத்தில் வழக்கிலிருந்தது. இதுபற்றி நம்பிகள் சரிதத்தில் சங்கிலியார் வரலாறு கருதுக; இந்நிலை இந்நாளில் கிறித்தவர் முதலிய புறச் சமயிகளிடம் வழங்குதலும் காண்க. உடல் பற்றிய குறித்த நாயகனிடம் சேராத போது அவ்வுயிர் ஆன்ம நாயகனிடம் சேர்தல் முறை என்ற குறிப்பும் காண்க. காரைக்காலம்மையார் உடலின் ஊனை உதறி இறைவரிடம் போந்த வரலாறும் ஈண்டுக் கருதத் தக்கது.
சிவத்தை மேவினாள் - சிவம் - நித்திய மங்கலமாம் பெருவாழ்வாகிய சிவத்தன்மை. இங்குப் பெற்றெடுத்த தந்தையா ரிசைந்தும் மற்றொருபா லிசையாமையின் மனவிசைவினாலும் மணம்பெற்ற நிலை நிகழாதொழிந்தது; ஆதலின், மண நிகழா நிலைமையினும், "எந்தையுமெம் மனையுமவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள், அந்தமுறை யாலவர்க்கே யுரியதுநா னாதலினால், இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்பன்" (1297) என்று திலகவதியார் துணிந்து பின் ஒழுகிய நிலையின் தன்மை இங்குக் கூடாதாயிற்று; இனி, அக்காரணம் பற்றியே, மண நிகழாமற் றடையுண்ட நிலையினும், "அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமண மழியுஞ், செயலானிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும், உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற், பெயராது" (223) என்றபடி மணப்பந்தரில் ஆளுடைய நம்பிகளை மணமகனாகக் கொள்ளப்பெற்றும் மணம் நிகழாமற் றடுக்கப்பட்டும் நின்ற சடங்கவி சிவாசாரியாரின் மகளாரின் நிலையும் இங்கு ஒருபாலிசையாமையாகிய அக்காரணம் பற்றியே பூம்பாவையார்பாற் கூடாதாயிற்று. ஆதலின் பாவையார் பிள்ளையாரை நாயகராக உணரும் நிலையின்றி, எல்லாவுயிர்க்கும் எப்பிறவியினும் உயிர்க்குயிராய் நின்றருளும் ஆன்ம நாயகராகிய சிவத்தையே நினைந்திருந்து அவரையே மேவினார் என்க; மேல் "எவ்வுயிர்க்குங் காவலனார்" (3016) என்னும் குறிப்பும் காண்க. சிவத்தை மேவுதலைப் புரிவிக்கும் குருநாதராகவே பிள்ளையாரைக் கொண்டு வழிபட்டு நின்றமை கருதிக்கொள்ளப்படும்.

1117

வேறு

3016
தேவர்பிரா னமர்ந்தருளுந் திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முத லெவ்வுயிர்க்குங்
காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார்

1118

3017
தொழுதுபுறம் போந்தருளித் தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப் பதியிலமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர் முதற்றானம் பலவிறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தா ரப்பதியின் மருங்ககல்வார்;

1119

3018
திருத்தொண்ட ரங்குள்ளார் விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தமகன் றிடமதுர மொழியருளி விடைகொடுத்து,
நிருத்தருறை பிறபதிகள் வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடுந் திருவான்மி யூர்பணிய வணைவுற்றார்.

1120