|
3025 | கண்டபொழு தேகலந்த காதலாற் கைதலைமேற் கொண்டுதல முறவிழுந்து குலவுபெரு மகிழ்ச்சியுடன் மண்டியபே ரன்புருகி மயிர்முகிழ்ப்ப வணங்கியெழுந் தண்டர்பிரான் றிருமேனி வண்ணங்கண் டதிசயித்தார். | |
| 1127 |
| (இ-ள்) கண்டபொழுதே கலந்த காதலால் - தம்பிரான் திருமுன்பு சேர்ந்து அவரைக் கண்ட அப்பொழுதே மனம் புகுந்து கலந்தெழுந்த பெருவிருப்பத்தினாலே; கைதலைமேல்....எழுந்து - கைகளைத் தலைமேலே கொண்டு நிலம் பொருந்த விழுந்து நிறைந்த பெரிய மகிழ்ச்சியுடனே பொங்கிய பேரன்பினாலே உள்ளுருகி உரோமம் புளகம் கொள்ள வணங்கி எழுந்து; அண்டர் பிரான்...அதிசயித்தார் - தேவதேவராகிய இறைவரது திருமேனியின் அழகிய வண்ணத்தைக் கண்டு அதிசயமடைந் தருளினர். |
| (வி-ரை) கண்டபொழுதே கலந்த காதல் - கண்ணாற் காணாது நினைந்து எழுந்தபோது காதல் உள்ளத்தினுள் நின்றது; கண்டபோது அது மிக்கு அவரிடத்துச் சென்று கலந்தது என்க; பொழுதே - ஏகாரம் தேற்றம். |
| கை...எழுந்து - கைகூப்பியவாறே நிலமுற விழுந்த அந்நிலையில் மகிழ்ச்சியும் அன்பும் பெருக மயிர் முகிழ்த்தல்; மனமுருகிக் கண்ணீர் பாய்தல் முதலிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தன; நிகழப் பன்முறையும் பணிந்து பின் எழுந்து என்க. |
| திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் - திருமேனியின் வண்ணமாவது ஒளியிம் நிறுமும் வடிவும் அழகும் ஏனைய உள்ளங் கவரும் மாண்புகளுமாகிய தொகுதி. அதிசயம் - உள்ளங் கவர்ந்தெழுகின்ற, இன்னதென்று பிரித்துணரலாகாத, இன்பமயமாகிய மெய்ப்பாடு. கண்டு அதிசயித்தார் - "அதிசயம் கண்டாமே"(திருவா); இதன் நிலை பதிகத்துட் காண்க; மேற்பாட்டில் விரிக்கப்படுதலும் காண்க: அதிசயிப்பார் - என்பதும் பாடம். |
| 1127 |
3026 | "இருந்தவிடைச் சுரமேவு மிவர்வண்ண மென்னே!" யென் றருந்தமிழின் றிப்பதிகத் தமிழ்மாலை கொடுபரவித் திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப் புச்சாத்திப் பெருந் தனிவாழ் வினைப்பெற்றார் பேருலகின் பேறானார். | |
| 1128 |
| (இ-ள்) "இருந்த...என்னே?" என்று - "சாரல் விளங்கவிருந்த திருவிடைச் சரத்தில் மேவிய இப்பெருமானது வண்ணந்தான் என்ன அதிசயம்!" என்று; அருந்தமிழின்...சாத்தி - அருந் தமிழாலாகிய இனிய திருப்பதிகத் தமிழ்மாலையினாற் றுதித்துத் திருந்தும் மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்தியருளி; பெருந்தனி...பேறானார் - பெரிய ஒப்பற்ற சிவானந்தப் பெருவாழ்வினிற் றிளைத்து நின்றார் பெரிய உலகவரின் பேறாக வந்தவதரித்த பிள்ளையார். |
| (வி-ரை) இருந்த - விளங்க இருந்த; திருவிடைச்சரம் எழில்திகழ் சாரலில் அணிபெற இருந்த அமைப்பு; பதிகம் பார்க்க. |
| இடைச்சுர மேவிய விவர்வண மென்னே! - பதிகத்தின் மகுடம். பதிகக் கருத்தும் குறிப்பும் எடுத்துக் காட்டியபடி. |
| அருந் தமிழ் - தமிழ் மாலை - தமிழ் - முன்னையது மொழியின் ஏற்றத்துக்கும் பின்னையது பொருளின் உயர்வுக்கும் வந்தன. (தமிழ்)இன் - இனிய. |