|
| ஏற்றையொடு - தன் ஏறாகிய (கடுவன்) ஆண்குரங்குடன்; உழிதரும் - (வாளையின் செருச் செய்கை கண்டு அஞ்சி மந்தி ஏற்றினொடு) அலையும்; நீர்ச்சிறப்பும் மலைவளமும் கூறிய நிலை; ஏனையவும் இவ்வாறே கண்டுகொள்க; - (3) காதலர் - விரும்பி ஆடுவர்; நிலமை - நிலத்தின் தன்மை; நானம் - கத்தூரி - மான்மதம்; மஞ்ஞை - ஏனம் - பிணை - குறிஞ்சிக் கருப்பொருள்கள்; - (4) கடம் - யானைத்தோல்; தேன் அட்டும் - தேன் உண்ணும்; - (5) கொடியர் - கொடியினையுடையவர்; நிழல் - ஒளி; செழும்புன லனையன - செம்புனலின் ஒழுக்குப் போன்று செறிந்து திரண்ட செவ்வாழையின் குலை; - (6) பெரியவர் - சிவஞானிகள்; குரவம் - குராமரம்; - (7) வேல் - இங்குச் சூலம் குறித்தது; நூலர் - வேதாகம ஞானநூல் ஓதுவர்; நூல்களால் ஓதப்படுபவர்; புரிநூலினை அணிந்தவர் என்றலுமாம். கவர்தலை அரவு - ஐந்தாகப் பிரிந்த தலையுடைய அரவு ஆரணங்கு - உமையம்மை; - (8) கொன்றையந் திருமலர் - சிறப்பாகிய திருவடையாள மாலையாதல் குறிப்பு; - (9) ஒன்று - கபால ஓடு; பழியிலர் - பலஇல்லம் பலி ஏற்பினும் அதனாற் பழிப்பிலர்; முழவதிர - முழவு போல முழங்க; இலவங்கம் - ஏலம் - ஏலம்; குறிஞ்சிக் கருப்பொருள்; - (10) ஓரா அருமைய (ராயினும்) - அடியவர்க் கணியருமாவர் என்க. அணியரும் - அயனரிக்கும் அரியராவதுடன், அடியவர்க்கு அணியரும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; - (11) மடை - மதகுகள். சடைச்சுரம் - சடைக் காடு; சுரம் - காடு; அண்ணல் சரிதைகள் பரவிநின் றுருகு சம்பந்தன் - "திருந்துமனங் கரைந்துருக" (3026) என ஆசிரியர் இந்நிலையினை விளக்குதல் காண்க. |
| தலவிசேடம்: - திருவிடைச்சுரம் - தொண்டை நாட்டின் 27-வது பதி; மலைகள் விரவிய இடையிலே கற்சுரமாகிய நாட்டின் பகுதியில் உள்ளதனால் இப்பெயர் பெற்றது; இன்றும் இவ்வாறு விளங்குதல் காணப்பெறும். இதன் கற்சுரத்தில் மலைகளினின்றும் யானை-காட்டுப்பன்றி முதலிய கொடுவிலங்குகள் திரிவனவும் காணப்பெறும்; பதிகம் பார்க்க. சனற்குமார முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற பதி. மூலலிங்க மூர்த்தியின் வடிவு ஒளிவண்ணமுடைய மரகதத் திருமேனி; முன் உள்ளபொருள்களின் சாயை இலிங்கத் திருமேனியில் எதிரொலி காட்டக் காணலாம். இவரது வண்ணங் கண் டதிசயித்துருகி ஆளுடைய பிள்ளையார் "இவர்வணமென்னே" என்று பதிகமருளிய வரலாறு புராணத்தும் பதிகத்தும் காண்க. சுவாமி - இடைச்சுர நாதர்; அம்மை - இமய மடக்கொடி; பதிகம் 1. |
| இது, செங்கற்பட்டு நிலையத்தினின்றும் திருக்கழுக்குன்றம் செல்லும் கற்சாலையில் 3 நாழிகையளவில் வடக்கில் திருப்போரூர் மட்சாலை வழி 2 நாழிகையில் வடக்கில் திருப்பிச் சென்று 1/2 நாழிகையளவில் அடையத் தக்கது. சிரமமான பாதை; பகல் வேளையிற் சென்றடைவது நலம். |
| திருக்கழுக்குன்றம் |
3028 | சென்றணையும் பொழுதின்கட் டிருத்தொண்ட ரெதிர்கொள்ளப் பொன்றிகழு மணிச்சிவிகை யிழிந்தருளி யுடன்போந்து மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டு மின்றயங்குஞ் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்; | |
| 1130 |
3029 | திருக்கழுக்குன் றத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப் பெருக்கவளர் காதலினாற் பணிந்தெழுந்து பேராத கருத்தினுடன் "காதல்செயுங் கோயில்கழுக் குன்"றென்று திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தைநிறை மகிழ்வுற்றார். | |
| 1131 |