|
| இரண்டுணர்வு மில்லாதவர்கள்; உள்கலாகாததோ ரியல்பு - நினைக்கவும் எட்டாத இயல்பு. கமல மாமதிபோல் - ஆய - கமலம்போன்ற அழகும் மதிபோன்ற தண்மையும் உடையர்; ஆதியும் ஈறும் ஆய - "அந்தமாதி"; - (11) மை - நீலநிறம்; பொய்கையிற் றவளைவாய் நிறையக் குவளைமலர் கிழிய - என்க. பச்ச இற - புதிய தேன்; இறால்போல எறி. இறால் - தேன்கூடு. கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன் - "கொன்றையா னடியலாற் பேணா, வெம்பிரான் சம்பந்தன்" (திருத்தொண்டத் தொகைக்குரிய அகச்சான்று). |
| தலவிசேடம் : - திருஅச்சிறுபாக்கம் - தொண்டை நாட்டின் 20-வது பதி; பாண்டிய நாட்டு அரசன் ஒருவன் தனது நாட்டில் தலத்தைத் தாபித்தலின் பொருட்டுக் கங்கையினின்றும் மணல் முதலியவற்றைக் கொணர்ந்த வண்டிகள் இத்தலத்தின் அருகில் மேற்செல்லாது தடைபட்டு நின்றன என்றும், அவற்றை மேலே ஊக்கிச் செலுத்த அச்சுக்கள் முறிந்துவிட்டன என்றும், அதன்மேல் அசரீரியினால் அவன் உண்மையுணர்த்தப்பெற்று இப்பதியிற் றிருப்பணி செய்து போந்தனன் என்றும் வரலாறுகள் கேட்கப்படும். அச்சுமுறிந்த இடம் வண்டிக்குப்பம் என்று இன்றும் வழங்குகின்றது. வண்டிகளின் அச்சுமுறிந்த காரணத்தால் இத்தலம் இப்பெயர் பெற்றதென்பர். கோபுர வாயிலுக்கு நேராகப் பாண்டியன் தாபித்த இலிங்கமும்(உமையாட்சிநாதர்) அம்மை - மெல்லியலாளும் இருக்கின்றனர். திரிபுர சம்மாரத்தின்போது இறைவர் ஏறிய பூமித்தேர் அச்சு முறிந்த சரிதம் காரணமாகக் கூறுவாருமுண்டு. "தச்சு விடுத்தலுந்தாமடி யிட்டலு, மச்சு முறிந்தவா றுந்தீபற" (திருவாசகம்). திருமூலட்டான மூர்த்திகள் இரண்டு சந்நிதிகள் உண்டு. கௌதமர், கண்ணுவர் பூசித்ததென்பர். பதிகம் முதற்பாட்டில் "அன்றிரண் டுருவ மாயவெம் மடிகள்" என்பது இக்குறிப்பென்பாரு முண்டு. சுவாமி - ஆட்சிநாதர் (பதிகம் பார்க்க) - பாக்கபுரேசர்; அம்மை - சுந்தரநாயகி; தீர்த்தம் - தேவதீர்த்தம்; வடக்குச் சுற்றில் தலமரம் - கொன்றை; பதிகம் 1. சிங்க தீர்த்தம் (கிணறு) கோயிலுக்கு வடக்கே சிறுதூரத்தில் சங்கு தீர்த்தம் என்னும் நன்னீர்த் தாமரைக்குளம்; |
| இது அச்சிறுபாக்கம் (S.I.R.) நிலையத்தினின்றும் தென்மேற்கில் 1/2 நாழிகையளவில் உள்ளது. |
3033 | அரசிலியி லமர்ந்தருளு மங்கணர சைப்பணிந்து பரசி,யெழு திருப்புறவார் பனங்காட்டூர் முதலாய விரைசெய்மலர்க் கொன்றையினார் மேவுபதி பலவணங்கித் திரைசெய்நெடுங் கடலுடுத்த திருத்தில்லை நகரணைந்தார். | |
| 1135 |
| (இ-ள்) அரசிலியில்...பரசி - திருவரசிலியின்கண் விரும்பி எழுந்தருளும் அங்கண்மையுடைய அரசராகிய இறைவரைப் பணிந்து துதித்து; திருப்புறவார் பனங்காட்டூர்...வணங்கி - திருப்புறவார் பனங்காட்டூர் முதலாக மணமுடைய கொன்றை மலரை அணிந்த இறைவர் எழுந்தருளிய பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று; திரைசெய்....அணைந்தார் - அலைகளையுடைய நீண்ட கடல் சூழ்ந்த திருத்தில்லை நகரினை அணைந்தருளினார். |
| (வி-ரை) அங்கண் அரசு - அங்கண்மை - அளியுடைய அருட்டன்மை. பரசுதல் - பரவுதல்; போற்றுதல். எழு - மேன்மையுட னோங்கும் சிறப்புடைய. |