|
| (வி-ரை) நலமலியும் திருவீதி - நலமாவது மாதவப்பயன்; மலிதல் - செய்து தருதல்; மிகுதியும் உளவாக்குதல். "மாதவங்கள், நல்குந் திருவீதி நான்கும் தொழுது" (2063). |
| நற்றவர்தம் குலம் நிறைந்த திருவாயில் - நற்றவர் - அடியார்கள்; குலம் - கூட்டம்; நிறைதல் - நெருங்குதல். |
| குவித்த செங்கையொழு தாழ்ந்து - கைகளைச் சிரமேற் கூப்பியவாறே தாழ்ந்து. |
| தமனிய மாளிகை - பொன்னம்பலம்; பொன்மன்றம். |
| ஓங்கிய பேரம்பலம் - மிகவுயர்ந்த பேரம்பலம் என்னும் மன்று; பொன்னம்பலத்தினை அடுத்துத் தனியே உள்ள பெருமன்றம். |
| திருஎல்லை - (மதில்) வாயில் - திருவீதி - திருவாயில் - பேரம்பலம் என்ற இவற்றையெல்லாம் முறையே தனித்தனி வணங்கிய பின்னரே பொன்னம்பலத்தைச் சார்தலும் வழிபடலுமாம் என்ற குறிப்பும் காண்க. |
| 1138 |
3037 | வணங்கிமிக மனமகிழ்ந்து, மாலயனுந் தொழும்பூத கணங்கண்மிடை திருவாயில் பணிந்தெழுந்து, கண்களிப்ப அணங்குதனி கண்டருள வம்பலத்தே யாடுகின்ற குணங்கடந்த தனிக்கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவோர், | |
| 1139 |
3038 | தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதிறைஞ்சி மண்டுபெருங் காதலினா னோக்கிமுக மலர்ந்தெழுவார் அண்டமெலா நிறைந்தெழுந்த வானந்தத் துள்ளலைந்து கண்டபே ரின்பத்தின் கரையில்லா நிலையணைந்தார். | |
| 1140 |
| 3037. (இ-ள்) வணங்கி....எழுந்து - (திருப்பேரம்பலத்தை) வணங்கி மனம் மிக மகிழ்ந்து மாலும் அயனும் தொழுகின்ற சிவ பூதகணங்கள் நெருங்கிய திருவணுக்கள் றிருவாயிலைப் பணிந்து எழுந்து; கண்களிப்ப - கண்கள் களிகூர; அணங்கு...ஆடுகின்ற - சிவகாமியம்மையார் தனியே கண்டருளும்படி திருவம்பலத்தில் ஆடல் புரிகின்ற; குணங்கடந்த.... கும்பிடுவார் - குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில் தனிக் கூத்தரது பெரிய திருக்கூத்தினைக் கும்பிடுவாராய்; |
| 1139 |
| 3038. (இ-ள்) தொண்டர் மனம்...தொழுது இறைஞ்சி - திருத்தொண்டர்களுடைய மனத்தினின்றும் பிரிதலில்லாது விளங்கும் திருக்களிற்றுப்படியினைத் தொழுது வணங்கி; மண்டு...மலர்ந்தெழுவார் - செறிவுடைய பெருங் காதலினாலே நோக்கி முகம் மலர்ச்சி பெற்று எழுவாராகிய பிள்ளையார்; அண்டமெலாம்...அலைந்து - அண்டங்களெங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள்ளே அலைந்து; கண்ட... அணைந்தார் - அனுபவத்துட் கண்ட பேரின்பத்தினிற் கரையற்ற நிலையினை அணைந்தருளினர். |
| 1140 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3037. (வி-ரை) மால் அயனும் தொழும் பூதகணங்கள் - பூதகணங்கள் பிரம விட்டுணுக்களாலும் தொழப்படும் தன்மை வாய்ந்தவைகள். தேவர்கள் பசு வர்க்கத்துட்பட்டுப் பிறவியில் வருவோர். சிவபூதகணங்கள் அவ்வாறன்றிச் சிவத்துவம் விளங்கப்பெற்ற முத்தான்மாக்கள்; அன்றியும் தம்மை வழிபடுவோர்களைச் சிவன்பால் வழிப்படுத்தி உய்யச் செய்யும் கருணையும் ஆற்றலும் உடையவர்கள்; இவர்களால் விடுக்கப்பட்டபோதன்றித் தேவர்கள் திருவாயிலிற் புகும் உரிமையிலர்; ஆதலின் |