|
| "அண்டங்க ளோரேழு மம்பொற் பதியாக" (திருமந் - 9 - 101) என்பது மதலியவை பார்க்க. |
| ஆனந்தத்துள் அலைந்து - ஆனந்தமாகிய பெருவெள்ளத்தினுள் அகப்பட்டு அலைந்து; ஏகதேச உருவகம். அலைந்து - அலைதலால். சிவானந்த நிறைவிலே தாம் ஒன்றுபட்டுத் தம்மை வேறு காணாராய் அதுவேயாகி நின்றமையால் என்க. |
| கண்ட பேரின்பத்தின் கரையில்லா நிலை - கண்ட - அனுபவத்திற் கண்ட; "அதிசயம் கண்டாமே"; "அந்தமிலா வானந்தம் அணிகொடில்லை கண்டேனே" முதலிய திருவாசகத் திருவாக்குக்கள் காண்க. கரையில்லா நிலை - எல்லை காண முடியாத; இன்னபடி என்று அளக்கலாகாத. "அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்,....சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமா றெங்ஙனே" (திருமந்திரம்); இந்நிலைகள் முன் (2057 - 2062) உரைக்கப்பட்டமை காண்க. ஆளுடைய பிள்ளையார் தில்லையில் திருநடங் கும்பிட்ட மூன்றாவது முறை இது. முதன் முறையில் திருவம்பலத்தின் இயல்பும், அவர் தரிசித்த ஆநந்த ஒருபெருந் தனிக்கூத்தி னியல்பும், அதனை அவர் கண்டு கும்பிட்டவாறும் விளக்கியருளிய ஆசிரியர், அவ்வானந்த நடனதரிசனத்தை முடிந்த பயனாய் முடித்துக் காட்டிய திறம் கண்டு களிக்கற்பாலது. |
| 1140 |
3039 | அந்நிலைமை யடைந்துதிளைத் தாங்கெய்தாக் காலத்தின் மன்னுதிரு வம்பலத்தை வலங்கொண்டு போந்தருளிப் பொன்னணிமா ளிகைவீதிப் புறத்தணைந்து போதுதொறும் இன்னிசைவண் டமிழ்பாடிக் கும்பிட்டங் கினிதிருந்தார். | |
| 1141 |
| (இ-ள்) அந்நிலைமை அடைந்து திளைத்து - முன்பாட்டிற் கூறிய அந்நிலைமையினை அடைந்து அவ்வனுபவத்தில் மூழ்கியிருந்து; ஆங்கு....போந்தருளி - அங்குத் தங்காத காலத்திலே, நிலைபெற்ற திருச்சிற்றம்பலத்தினை வலமாக வந்து புறத்திற் சென்றருளி; பொன்னணி...புறத்தணைந்து - பொன்னாலணியப்பட்ட மாளிகைகளையுடைய திருவீதியின் புறத்தில் சேர்ந்து; போதுதொறும்...இனிதிருந்தார் - காலந்தோறும் இனிய இசையுடன்கூடிய வண்மையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடியருளிக் கும்பிட்டுக்கொண்டு அங்கு இனிதாக எழுந்தருளி யிருந்தனர். |
| (வி-ரை) அந்நிலைமை அடைந்து திளைத்து - அகரம், முன்பாட்டிற் கூறிய அந்த என முன்னறிசுட்டு. அக்கரங்களுள் அகரம்போல நிறைந்த சிவானந்த நிலைமையினில் நிறைந்தாராகும் நிலை என்ற குறிப்புப்பெற அந்நிலைமை - அகரத்தின் நிலை - என்றுரைத்தலுமாம். |
| எய்தாக் காலம் - வழிபாட்டுக்குரியதல்லாக் காலம். திருக்கதவம் திருக்காப்பிடுகின்ற உச்சி - திருவத்தயாமம் முதலிய காலங்களின் பின் உள்ள காலம். "காலமெல்லாந் துதித்திறைஞ்சி" (2062); மேல் போதுதொறும் என்பதும் காண்க. |
| மாளிகை வீதி - தில்லைவாழந்தணர்களின் மாளிகைகள் நிறைந்த திருவீதி; மாடவீதி. "குன்றனைய மாளிகைக டொறுங்குலவும் வேதிகைகள்" (1064). |
| இன்னிசை வண்தமிழ் - இப்பதிகங்கள் கிடைத்தில! |
| கும்பிட்டு அங்கு இனிதிருந்தார் - கும்பிடுதலே பிறவிப் பயனாம் என்பதை உலகுக்கு அறிவுறுத்தி உபதேசித்தருளிய ஞான ஆசாரியராதலின் அவ்வாழ்வு பெற்றமையின் இனிது இருந்தார் என்க. "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே...வழிபடுமதனாலே"(திருவலஞ்சுழி) என்றருளிய பிள்ளையாரது திருவாக்கு ஈண்டுச் சிந்திக்கற் பாலது. |