| தல் நும்வசமில்லை; ஆதலின் அதன்முன் சேர்மின் என்றது; இக்கருத்தைப் பலவாற்றானும் ஐயடிகள் காடவர்கோனாயனார் க்ஷேத்திர வெண்பாவினும், பட்டினத்துச் சுவாமிகள் தமது அருள் நூல்களினும் இடித்துக் கூறுதல் காண்க. "நல்லச்சிற றம்பலமே நண்ணாமுன்"; "பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன்"; "ஐயாறு வாயாறு பாயாமுன்" (க்ஷேத்திர வெண்பா); உத்தமன் - எல்லாம் நன்மையே செய்பவன்; நம்பன் - நம்பி அடைதற்குரியவன்; நன்னகர் - நலங்கொள் - நகரின் நன்மையும், அடைந்தால் அது தரும் நற்பயனும் குறித்தன; சேர்மினே - ஏகாரம் தேற்றம்; (2) ஏவம் - எவ்வம் - குற்றம்; எதுகை நோக்கி முதனீண்டது. இசைந்து - மனவொருமையுற்று; தீபமாலை தூபமும் செறிந்த கையராசிக் - சேர்மின் - பதியினையே அருச்சித்து வழிபட்டுப் பின் உள்ளே அடைமின்; பிள்ளையார் இவ்வாறே செய்துகாட்டியருளினமை முன் "குழுமலர் நறுந்தீப தூபங்க ளுடன்றொழுது"(3047) என்று ஆசிரியர் காட்டியருளினமை காண்க; மன்னும் - ஊழியிலுமழியாது நிலைபெறும்; - (3) சோறு....துவண்டு - செல்வ நீங்கிய நல்குரவு நிலை; துவளுதல் - ஏறுசுற்றம் - நெருங்கிய சுற்றமும்; சிறப்பும்மை தொக்கது. எள்குதல் - இகழ்தல்; தூரமாய் - எள்க - என்று கூட்டுக. தூரமாதல் - அணுகாது விலகிப்போதல்; - (4) நச்சி...கேட்பதன் முனம் - ஒரு பொருளை விரும்பி ஒருவர் வாசலின் நடந்து செல்ல, அவர் உம்மை விரும்பாது நாளை உச்சிப் போதில் வா என்று சொல்லக் கேட்கவரு முன்னே; நடந்து செல்ல - என்றதனால் வறுமையும், நாளை உச்சி வம் எனும் உரை - என்றதனால் அவர் ஈயாது நாள் கழித்தலும் குறிக்கப்பட்டன; "நச்சிவந்த நல்கூர் மாந்தர் தம், விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியி, னகமலர்ந் தீவார் போல முகமலர்ந், தினிது மொழிந்தாங் குதவுத லின்றி, நாளு நாளு நாள்பல குறித்தவர், தாளி னாற்றலுந் தவிர்த்து" (திருவிடை - மும் - 7); பேணுவார் இச்சை செய்யும் - பேணுவாரை இச்சித்தருளும்; - (5) கண்கள்... உய்த்தழிப்பதன் முன் - காண்பு - காணும் தன்மை; மேனி கன்றி - உடல் தளர்ந்து; உண்கிலாமை - உணவு உட்கொள்ள முடியாத நிலைமை; இதனால் நரை, திரை, மூப்பு, பிணி என்ற நிலைகள் வருமுன்னமே என்றதாம்; - (6) அவத்தம் - வீணே. பிணக்கு - பிறவியில் வரும் துன்பச் சூழல்கள்; - (7) பொய்ம் மிகுத்த வாயர் - வாக்கினால் வரும் குற்றம்; பொறாமை - மனத்தின் குற்றம்; ஐ மிகுத்த கண்டர் - உடலின் நிலை; ஐ - கோழை; - (8) காலினோடு...இகழ்ந்துரைப்பதன் முனம் - உடல் தளர்ந்தும் காமம் விடா நிலைமையில் பெண்கள் இகழ்வதாகும் நிலை குறித்தது. மதித்தவர்கள் - தற்போதத்தால் அறியப் புகுந்தவர்கள்; (10) நிலை வெறுத்த...புதல்வர்கள் - "இந்தக் கிழம் இன்னும் இறவாமல் இருக்குதே" என்று வெறுப்புடன் முனனமே நேசமில்லாத மக்கள்; முலை வெறுத்த பேர் - பால் குடித்தலை விட்ட புதல்வர்கள் முதுலாக; - (11) தக்கனார் தலையரிந்த சங்கரன் - முதன்மைபற்றி வீரபத்திரர் செயலை இறைவர்மே லேற்றப்பட்டது. அந்தி - மாலையின் செவ்வானம்; அம் - தீ - அழகிய தீ என்பது அந்தி என நின்ற தென்றலுமாம். |