|
3050 | மாளிகையி னுள்ளணைந்து மறையவர்கட் கருள்புரிந்து தாள்பணியும் பெருங்கிளைக்குத் தகுதியினாற் றலையளிசெய் தாளுடைய தம்பெருமா னடியவர்க ளுடனமர்ந்து நீளவரும் பேரின்ப மிகப்பெருக நிகழுநாள்; | |
| 1152 |
3051 | காழிநா டுடையபிரான் கழல்வணங்கி மகிழ்வெய்த ஆழியினு மிகப்பெருகு மாசையுடன் றிருமுருகர் வாழிதிரு நீலநக்கர் முதற்றொண்டர் மற்றெனையோர் சூழுநெடுஞ் சுற்றமுடன் றோணிபுரந் தொழுதணைந்தார். | |
| 1153 |
| 3050. (இ-ள்) மாளிகையின்...அருள்புரிந்து - தமது திருமாளிகை யினுள்ளே எழுந்தருளித், தம்மைக் காணவந்த மறையவர்களுக்கெல்லாம் அருள்விடை கொடுத்து; தாள் பணியும்...தலையளி செய்து - தமது திருவடிகளை வணங்கி நின்ற பெரிய தமர்களாகிய சுற்றத்தார்களுக்குத் தகுதிக்கேற்றவாறு தலையாகிய கருணையினைச் செய்து விடை கொடுத்தருளி; ஆளுடைய....அமர்ந்து - தம்மை ஆளுடைய பெருமானது அடியவர்களுடனே விரும்பி எழுந்தருளியிருந்து; நீளவரும்...நிகழுநாள் - நீண்டு பெருக வரும் பேரின்பமானது மேன்மேலும் மிகப் பெருகும்படி நிகழ்ந்துவரும் நாள்களிலே; |
| 1152 |
| 3051. (இ-ள்) காழிநாடு....மகிழ்வெய்த - காழி நாட்டின் தலைவராகிய பிள்ளையாரது திருவடிகளை வணங்கி மகிழ்வடையக் கருதி; ஆழியினும்...ஆசையுடன் - கடலினும் மிகவும் பெருகுகின்ற ஆசையுடனே; திருமுருகர்...தொழுதணைந்தார் - திருமுருக நாயனார் வாழ்வு தரும் திருநீலநக்க நாயனார் முதலாகிய தொண்டர்களும் மற்றும் ஏனையோர்களும் தம்மைச் சூழ்ந்த நீண்ட சுற்றத்தாருடனே போந்து திருத்தோணிபுரத்தினைத் தொழுது பிள்ளையார்பால் வந்தணைந்தார்கள். |
| 1153 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3050. (வி-ரை) மறையவர்கள் - இவர்கள் பிள்ளையார் தில்லையில் எழுந்தருளியமை கேட்டு அங்குச் சென்று வணங்கித் தொடர்ந்து உடன் வந்த "புகலிப் பூசுரரு மாதவரும்" (3041), மற்றும் சீகாழியில் பிள்ளையாருடன் கூடிக் கும்பிட்ட மறையவர்களுமாம். இவர்களே முதலில் விடை கொடுத்தருளத் தக்கார்கள். |
| தான் பணியும் பெருங்கிளை - இவர்கள் சீகாழி, திருநனிபள்ளி முதலிய பதிகளினின்றும் போந்து பிள்ளையாரைச் சூழ்ந்து வணங்கி யருள்பெற்ற சுற்றத்தார்கள்; பிள்ளையாரது தாள் பணியப்பெற்றதனால் பெருங்கிளை என்றார்; தலையளி செய்து - பெருங்கருணை நோக்கம் வைத்து. |
| ஆளுடைய....அமர்ந்து - அருள் புரிந்து - விடை கொடுக்கப்பெற்ற மறையவர்களும், தலையளி செய்து - விடை கொடுக்கப்பெற்ற பெருங்கிளையும் போலன்றி அடியவர்களே எஞ்ஞான்றும் உடனிருக்கும் பெற்றி வாய்ந்த பெரியவர்கள் என்ற உண்மையினைக் கைக்கொண்டு ஒழுகி உலகுக் கறிவுறுத்தியருளினர் பிள்ளையார். ஆதலின் உடன் அமர்ந்து என்றார். "அன்பரொடு மரீஇ"(போதம் - 12 - சூத்) என்பது ஞானசாத்திரம். அதனாலாகிய இன்பம் உலகிறந்த சிவானந்தமேயாம் என்பார் நீள வரும் பேரின்ப மிகப் பெருக என்று மேற்கூறினார்; அமர்தல் - விரும்புதல். |
| நீளவரும் பேரின்பம் மிகப் பெருக - நீள வருதல் - எல்லையில்லாது வளர்ந்து வருதல்; மிகப் பெருகுதல் - வகையினால் மேன்மேலும் பெருகுதல். அடியவர்களுடனிருக்கும் சிவானந்தப் பெருவாழ்வின் இயல்புபற்றி முன் (2421) உரைத்தவை பார்க்க. |