|
| கோதில்....விண்ணப்பஞ் செய்தார்கள் - "குற்றமற்ற வேதநெறியின்கண் கூறப்படும் சடங்குகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதற்கு உரிமை பெறும்பொருட்டு ஒரு கன்னிகையைத் தேவரீர் திருமணஞ் செய்தருள வேண்டு"மென்று விண்ணப்பம் செய்தார்கள். |
| (வி-ரை) நாட்டு மறை முறை ஒழுக்கம் - அந்தணர் முதலிய மூவருணத்தாரும் பிரமசரியத்தின் பின் கிருகத்த நிலையில் ஒழுகுக என்க வேதநெறி விதித்த ஒழுக்கம். |
| ஞானபோனகருக்கும் கூட்டுவது - அவ்வொழுக்கம் ஏனையோராகிய சாமானிய உலகினருக்கேயன்றி முற்றிய சிவஞானமுடைய பிள்ளையார் திறத்துப் பொருந்தாது என்பதுணர்த்துதற்குச் சிறப்பும்மை கொடுத்தோதினார். |
| மறைநெறிச் சடங்கு காட்ட வரும் வேள்வி பல புரிவதற்கு ஒரு கன்னிதனை வேட்டு - பிரமசாரிக்குச் சமிதா தானமேயன்றி ஒளபாசனத்தில் அதிகாரமின்மையால், இல்லொழுக்கத்தில் ஒளபாசன முதலிய நித்தியங்களும், கிருது முதலிய நைமித்திகங்களும் செய்யவேண்டுதலின் அதற்காக ஒரு கன்னியை மணந்து என்றார்; சடங்கு காட்ட வரும் வேள்வி - மறை விதித்திட்ட சடங்குகளுடனே செய்யப்படுவன வேள்வி என்றதாம். காட்ட - செய்ய; காட்ட - என்றது, நீர் வேள்வி செய்வது உமக்காகவன்றி உலகினர்க்கு நிகழ்த்திக் காட்டும் ஆசாரியத் தன்மைக்காக என்றதும் குறிப்பு. |
| மறையொழுக்கம் - கூட்டுவது மனங்கொள்வார் - என்றது மறைகளில் விதத்த ஆச்சிரமங்களுள் இல்வாழ்க்கையாகிய ஆச்சிரமத்தில் பிள்ளையாரைப் பொருத்துவதே அவர்கள் கருதினார்கள் என்க. அதனில் இன்றியமையாத சிறந்த பகுதி "மனையறத்தினின்பமுறு பகப்பெறுவான் விரும்புவார்"(1917) என்று சிவபாதவிருதயர் தாம் கருதிய நன்மக்கட் பேறேயாம்; ஆனால் அதனை அவ்வாறு கூறாது பிள்ளையாரது திருவுள்ளத்துக் கிசையுமாறு "வேள்வி புரிவதற்குக் கன்னியை வேட்க" என வேண்டினர் மறையோர்; பிள்ளையார் இசையாது கூறியருளிய பின்னும் அவர் மாறாத வண்ணம் அவர்கள் இதனையே மற்றுமொரு வகையால் மேலுங் கூறுதல் (3056) காண்க. |
| மணங் கொள்வார் - என்பதும் பாடம். |
| 1156 |
3055 | மற்றவர்த மொழிகேட்டு மாதவத்தின் கொழுந்தனையார் சுற்றமுறு பெரும்பாசத் தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப் பெற்றமுயர்த் தவரருண்முன் பெற்றதனா லிசையாது, "முற்றியதா யினுங்கூடா" தென்றவர்முன் மொழிந்தருள; | |
| 1157 |
3056 | அருமறையோ ரவர்பின்னுங் கைதொழுதங் கறிவிப்பார் "இருநிலத்து மறைவழக்க மெடுத்தீர்நீ ராதலினால் வருமுறையா லறுதொழிலின் வைதிகமா நெறியொழுகுந் திருமணஞ்செய் தருளுதற்குத் திருவுள்ளஞ் செய்யு"மென; | |
| 1158 |
3057 | மறைவாழ வந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும் துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி யுடன்படலும் பிறைவாழுந் திருமுடியிற் பெரும்புனலோ டரவணிந்த கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார். | |
| 1159 |