| |
3117 | படர்பெருந் தொங்கல் பிச்சம் பைங்கதிர்ப் பீலிப் பந்தர் அடர்புனை செம்பொற் பரண்டி லணிதுகிற் சதுக்க மல்கக் கடலின்மீ தெழுந்து நிற்குங் கதிர்நிறை மதியம் போல வடநிரை யணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார். | |
| 1219 |
| (இ-ள்) படர் பெரும்....பந்தர் - பரவிய பெரிய குஞ்சங்களும், பிச்சங்களும், பசிய நிறமுடைய மயிற்பீலியால் அமைந்த கூட்டங்களும்; அடர்புனை...சதுக்கம் - நெருங்க அலங்கரித்த சிவந்த பொன்தகட்டா லியன்ற வட்ட அமைப்புக்களையுடைய அழகிய துணிகளாலமைந்த மேற்கட்டிகளும்; மல்க - நெருங்க; கடலின் மீது....குடை நிழற்ற - கடலின்மேல் வந்து எழுந்து நிற்கும் கலைகள் நிறைந்த சந்திரன் போல முத்து வடங்களின் வரிசைகளா லலங்கரிக்கப்பட்ட முத்துக் குடை மேலே நிழல் செய்ய; வந்தார் - (பிள்ளையார்) எழுந்தருளி வந்தனர். |
| (வி-ரை) தொங்கல் - குஞ்சம்; பிச்சம் - வெண்குடை. பைங்கதிர்ப் பீலி - பசிய நிறம் விளங்கும் மயிற்பீலி; பந்தர் - பந்தர்போன்று பரந்த தொகுதி. |
| அடர்புனை....சதுக்கம் - சதுர வடிவில் அமைந்த துணிகளாலமைந்த மேற்கட்டிகள்; அத்துணிகள் வட்டமாகிய பொற்றகடுகளால் உள்ளால் அடரப் புனைந்து அணி செய்யப்பெற்றன; இந்த மேற்கட்டிகள் எழுச்சியின் கூடவே ஏந்தி வரப்பெற்றன. இவை நிலையாகவே தெருக்களில் சிறப்பின் பொருட்டு அமைக்கப்படுவனவும் உண்டு. |
| கடலின் மீது...குடை நிழற்ற - பெரிய முத்து வெண்குடை பரந்து நெருங்கியனவாகிய முன் சொன்னவற்றுக்கெல்லாம் மேல் எழுந்து பிள்ளையாரது சிவிகையின்மேல் பரந்து நின்று நிழல் செய்தல் பரந்த கடலினிடையே மேல் எழுந்து விளங்கும் வெள்ளிய ஒளியுடைய முழு மதிபோல இருந்தது என்க. தொங்கல் - பீலி - சதுக்கம் முதலியவற்றின் நெருங்கிய பரப்புக் கடல்போலவும், முத்து வெண்குடை அவற்றிற்கெல்லாம் மேல் எழுந்து விளங்கும் முழுமதி போலவும் கொள்வது உவமம்; விளையும் உருபும்பற்றி வந்தது. மீது எழுந்து - ஏனையவை நிலத்தில் செல்லும் மக்கள் ஏந்த அவ்வுயர்ச்சி யளவில் பரவிச் சென்றன; முத்துக்குடை மக்களால் பொறுக்கப்பட்ட சிவிகையின் மேல் அவ்வுயரத்தில் வருதல் கருத்து; வடநிரை - முத்து வடங்களின் வரிசை. |
| மணிக்குடை - முத்துக்குடை; இஃது திருவரத்துறை இறைவரா லருளப்பட்டது. |
| வந்தார் - எழுச்சியில் எழுந்தருளி வந்தார்; பிள்ளையார் என்ற எழுவாய் தொக்கு நின்றது. |
| 1219 |
3118 | சீரணி தெருவி னூடு திருமணஞ் செல்ல, முத்தின் ஏரணி காளஞ் சின்ன மிலங்கொளித் தாரை யெல்லாம் பேரொலி பெருக முன்னே பிடித்தன "மறைக ளோடு தாரணி யுய்ய ஞான சம்பந்தன் வந்தா" னென்று. | |
| 1220 |
| (இ-ள்) சீரணி....செல்ல - சிறப்புப் பொருந்திய அணியுடைய தெருவினிடையே திருமணம் இவ்வாறு எழுந்து செல்ல; முத்தின்...எல்லாம் - முத்தினாலாய அழகு சிறந்த எக்காளமும், திருச்சின்னமும், விளங்கும் ஒளியுடைய தாரையும் ஆகிய இவைகளெல்லாம்; "மறைகளோடு....வந்தான்" என்று - வேதங்களுடனே உலகம் உய்யும் பொருட்டுத் திருஞான சம்பந்தன் வந்தான்" என்று எடுத்துக் கூறி; பேரொலி...பிடித்தன - பெருஞ் சத்தம் முன்னே பெருகும்படி பிடித்தூதின. |