| |
| இப்பாட்டினால் நிலத்தினிற் காணும் வகையால் மறையோர் மண மனையில் எதிர்கொண்ட சிறப்புக் கூறினார்; மேல்வரும் பாட்டினால் கண் காணா வகையில் விசும்பில் விண்ணவர் எதிர்கொண்டமையும் தென்றல் எதிர்கொண்ட வகையும் கூறுவார். |
| 1224 |
| 3123. (வி-ரை) விசும்பு ஒளி தழைப்ப - வானில் ஒளி மிகும்படி; மாரி - வீச என்க; மலர் - மந்தாரம் முதலிய தேவ தருக்களின் மலர்கள். |
| விசும்பொளி தழைப்ப - என்பதனை மந்தமாருதத்துடனும் கூட்டுக. மந்தமாருதமும் விசும்பு ஒளி தழைப்ப வீச என்க. மந்தமாருதம் - தென்றற் காற்று. உம்மை - விண்ணவர் வீசியதன்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை; மந்தமாருதம் - வீசுதல் - தென்றற் காற்று மெல்லிதாய் அசைதல்; கந்தம் - மலர்களின் மணத்தைத் தாங்கிக்கொண்ட நிலை. |
| கண் - கண்ணுதலால்; நெருங்குதலால். கண்ணுதல் - நெருங்குதல். |
| கண்ணுத(லால்) காமர் தோரணங்கள் ஒளி விளக்கம் மிக்க என்க. பலப்பல வகைகளால் அழகிய தோரணங்கள் நெருங்குதலால் நிறம் பலகொண்ட ஒளி மிகுந்தது என்பது. தோரணங்களூடு - தோரணங்களினிடையே சென்று. |
| புண்ணிய விளைவு போல்வார் - பிள்ளையார்; புண்ணியம் - சிவ புண்ணியம். விளைவு - பயன்; இனி முத்தி பெறும் பக்குவமுடைய கூட்டத்தினர்களினிடையே எழுந்தருளுகின்றா ராதலின் அவர்கள் செய்த சிவ புண்ணியங்களின் விளைவு என்றார். |
| பூம்பந்தர் - மணமனையின் முன்பு மணமகள் வருதற்கமைக்கும் பூக்களா லலங்கரிக்கப்பட்ட பந்தர். |
| மிக்கார் - என்பது பாடமாயின், மிக்கு - ஆர் - நிறைந்த, காமர் - அழகுடைய என்று உரைத்துக் கொள்க. |
| 1225 |
3124 | பொன்னணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி யார்ப்ப மன்னிய தரளப் பத்தி வளர்மணிச் சிவிகை நின்றும் பன்மலர் நறும்பொற் சுண்ணம் பரந்தபா வாடை மீது முன்னிழிந் தருளி வந்தார் மூவுல குய்ய வந்தார். | |
| 1226 |
| (இ-ள்) பொன்னணி....ஆர்ப்ப - பொன் அணிந்த சங்கங்களின் கூட்டம் அழகுடனே முழக்கம் செய்து பேரொலி எடுக்க; மன்னிய...நின்றும் - நிலைபெறப் பொருந்திய முத்தி வரிகைகள் பெருக ஒளிசெய்து விளங்கிய சிவிகையினின்றும்; பன்மலர்..மீது - பல மலர்களும் மணம் கமழும் பொற்சுண்ணமும் பரவியிருந்த பாவாடையின்மேல்; முன்...வந்தார் - முன்னே இறங்கி எழுந்தருளி வந்தார் மூவுலகமும் உய்யும்பொருட்டு வந்தார். |
| (இ-ள்) சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி - அனேக சங்கங்கள் அழகுடன் ஒன்றுபோலச் சேர்ந்து மங்கல முழக்கம் செய்ய; மணமகனார் வந்து மணமனை புகுதல் பெரு மங்கல நிகழ்ச்சியாதலின் அதுகுறிக்கச் சங்கங்கள் பலவும் கூடி மங்கல முழக்கம் செய்தன. இவ்வாறு பெரும் நிகழ்ச்சிகளிற் பல இயங்களும் ஒன்றுகூடிப் பேரொலி செய்தல் இந்நாளிலும் வழங்குகின்றது; சகல வாத்தியம் செய்தல் என்பர். |