1514திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மன்னிய...சிவிகை நின்றும் - மன்னிய - இதுவரையும் பிள்ளையார் அச்சிவிகையில் ஊர்ந்து செல்ல நிலைபெற்றிருந்து இப்போது அதினின்றும் நீங்கிப் பாவாடைமீது எழுந்தருளிப்போந்து, இனி இறைவரைச் சார்ந்தருளுவதனால் மேல் அதனை ஊர்வதில்லை யாகும் என்ற குறிப்புப்பட மன்னிய என்று இறந்தகாலத்தாற் கூறினார். முன் இழிந்தருளி என்ற சொல்லாற்றற் குறிப்பும் அது.
பன்மலர்...பாவாடை மீது - வந்தார் - பாவாடை - பாவுதல் - ஒழுங்குபெறப் பரப்புதல்; பாவிய - பரப்பிய - ஆடை; சிறப்புக்களிற் பெரியோர்கள் நிலத்தில் நடக்காது பாவாடைமீது நடந்து வரும்படி ஆடை பரப்பி அமைத்தல் மரபு; இஃது இந்நாளிலும் காணலாம். இங்குப் பாவாடைமீது மலரும் நறுந் துகளும் இட்டுவைத்தது மேலும் சிறப்புச் செய்ததன்றிப் பிள்ளையாரது திருவடிகளில் நிலத்தின் வன்மை உறுத்தாதபடி செய்யுமுறையும், வழிபாட்டு முறையுமாம்.
முன் இழிந்தீருளி வந்தார் - பாவாடைமீது முன் இறங்கி எழுந்தருளி வந்தனர்.
மூவுலகுய்ய வந்தார் - வந்தார் - வந்தவராகிய பிள்ளையார்; வினைப்பெயர். பிற்சரித விளைவு நோக்கி இக்குறிப்புற வைத்தது தெய்வக் கவிநலம். இரண்டும் வினைமுற்றாகக் கொண்டு எழுவாய் வருவித்துரைத்தலுமாம்.

1226

3125
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்க ணிரைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை நறுஞ்சுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி உடனெதி ரேற்று நின்றார்.

1227

(இ-ள்) மறைக்குல...எல்லாம் - மறையவர் குலத்னிராய் இல்வாழ்க்கை நிலையின் வாழும் மங்கலம் பொருந்திய பெண்கள் எல்லாம்; நிறைத்த நீர்...ஏந்தி - நிறைத்த நீரினையுடைய பொற்குடங்களையும், வரிசையாகிய அழகிய விளக்களையும், தூபங்களையும், தேன் பொருந்திய நல்ல மலர்களாலான மாலைகளையும், நல்ல ஒளி பொருந்திய முளைப் பாலிகைகளை வைத்த பொற்றட்டுகளையும், உறைத்தலினால் அழகு பொருந்திய கலவைச் சாந்தினையும் ஏந்திக் கொண்டு; உடன்...நின்றார் - ஒருங்குடனாக மணமகனாராகிய பிள்ளையாரை நல்வர வெதிர்கொண்டு நின்றார்கள்.
(வி-ரை) மங்கல மகளிர் எல்லாம் - ஏந்தி - உடன் எதிர் ஏற்று நின்றார் - என்க. இது சுமங்கலிகளான மறையோர் மகளிர் மணமகனாரை மணமனையில் எதிர் வரவேற்ற நிலை கூறியது; மறைக்குல மைந்தர்களும் மறையவரும் மனையின் முன்பு பந்தரின் முன் சென்று வரவேற்ற நிலை முன் 3122-ல் கூறப்பட்டது. அதன்பின் பூம்பந்தரிற் சார்ந்து பாவாடைமீது மணமனையில் வந்தபோது மங்கல மகளிர் நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களை ஏந்தி வரவேற்பது மரபு வழக்குமாம்.
நிறை குடம் - விளக்கு - தூபம் - மலர்மாலை - முளைப் பாண்டில் - கலவை - இவற்றைப் பெண்கள் ஏந்தி வருதல் வழக்கு; இவை மங்கலப் பொருள்கள்.
நறைக்குல மலர்சூழ் மாலை - நறை - தேன்; குலமலர் - நல்லவகை மலர்கள்; சாதி - மல்லிகை - முல்லை முதலியன. சூழ்மாலை - மலர்களைச் சுற்றி வைத்துக் கட்டிய இண்டை பிணையல் முதலிய மாலைகள்.
நறுஞ்சுடர் முளைப் பொற்பாண்டில் - சுடர்முளை - முளைப் பாலிகைகள்; மணத்திருநாளுக்கு முன் ஏழாநாளில் முளை பூரித்தாராதலின் (3071) முளைகள் வளம்பெற வோங்கி வளர்ந்து விளங்கின; இவற்றின் வளமும் விளக்கமும் நற்குறிகளாக எண்