| |
| ணப்படுதலின் நறும் - சுடர் முளை என்ற அடைகொடுத்துச் சிறப்பித்து ஓதினார். பொற்பாண்டில் - பொற்றட்டு. நகுசுடர் - என்பதும் பாடம். நகு - மகிழும். |
| உறைப்பொலி கலவை - புனுகு, கத்தூரி முதலிய வாசனைப் பண்டங்களை நன்கு உறைத்துக் கூட்டிய கலவைச் சாந்து. பொலி - நயமும் மணமும் நிறமுமுடைய. |
| உடன் - ஒழுங்குபட; மணமகனார் வந்தவுடனே என்றலுமாம்; மைந்தர்கள் வரவேற்ற நிலையினுடனே மகளிரும் ஏற்றவாறு என்ற குறிப்புமாம். |
| 1227 |
3126 | ஆங்குமுன் னிட்ட செம்பொ னணிமணிப் பீடந் தன்னில் ஓங்கிய ஞான வெள்ள முண்ணிறைந் தெழுவ தென்னத் தாங்கிய முத்தின் பைம்பூண் டண்ணில வெறிப்ப வேறிப் பாங்கொளி பரப்பி நின்றார் பரசம யங்கள் வீழ்த்தார். | |
| 1228 |
| (இ-ள்) ஆங்கு...தன்னில் - அவ்விடத்தில் முன்னரே இட்டுவைத்த செம்பொன்னாலியன்ற அழகிய மணிகளை அழுத்திய பீடத்தில்; ஓங்கிய....ஏறி - எல்லாவற்றுக்கும் மேலோங்கிய சிவஞானப் பெருக்கானது உள்ளே நிறைந்து மேல் எழுந்து பொழிவதுபோல அணியாகப் பூண்டருளிய முத்து நல்அணிகள் குளிர்ந்த ஒளியினை வீச ஏறி; பாங்கொளி பரப்பி நின்றார் - பக்கங்களில் ஒளிபரப்பி நின்றருளினார்; பசரமயங்கள் வீழ்த்தார் - பரசமயங்களை வென்றழித்தவராகிய பிள்ளையார். |
| (வி-ரை) ஆங்கு...பீடம் - இப்பீடம் மணமனை வாய்தலின் முன்னர்ப் பந்தரின் கீழ், மணமகனாரை நிறுத்தி நீர்சுற்றிச் செய்யும் நீராஞ்சனம் முதலிய மங்கல வினைகள் செய்வதற்காக இடப்படுவது; திருமணவறையினுள் இடும் தவிசு வேறு; 3129 பார்க்க. |
| ஏறி - நின்றார் - இப்பீடத்தில் மணமகனாரை நிறுத்தி மங்கலம் செய்தல் மரபு. |
| ஓங்கிய...எழுவதென்ன - உள்ளே நிறைந்ததாகிய சிவஞானப் பெருக்குப் பொங்கி மேல் எழுவதுபோல என்பது. திருவடி முதல் திருமுடி வரை முத்தணிகளாலணியப் பெற்ற பிள்ளையாரது திருக்கோலம் இருந்தது என்க. |
| தாங்கிய முததின் பைம்பூண் தண்ணிலா எறிப்ப - திருமேனி முழுதும் முத்துக்களாலான அணி புனைந்த நிலைமையினை ஈண்டு முடித்துக் காட்டியவாறு; 3108 முதல் 3113 வரை பார்க்க. |
| ஞான வெள்ளம் உண்ணிறைந் தெழுதல் - உவமானம்; முத்தின் பூண்கள் தண்ணிலா வெறித்தல் உவமேயம். வினையும் மெய்யும்பற்றி வந்த உவமத் தற்குறிப்பேற்றவணி. ஞானம் - அறிவொளியாதலின் சத்துவத் தன்மைபற்றி வெண்ணிறமுடையதாகக் கூறுதல் மரபு. |
| ஓங்கிய ஞான வெள்ளம் - ஓங்குதல் - ஏனைய எல்லாவற்றினும் சிறத்தல்; வெள்ளம் - நீர்ப் பெருக்கின் குறிப்பினால் மிகுதியுணர்த்திற்று. "உண்ணிறைந்து பொழிந்தெழுந்த உயர்ஞானத் திருமொழியால்" (1972) என்று முதற் பதிகம் எடுத்த நிலை கூறியது இங்கு நினைவு கூர்தற்பாலது. ஈண்டு, இனி, அந்தச் சிவஞான வெள்ளமே பஞ்சாக்கரப் பதிகத்துடன் இறுதியாகப் பதிக நிறைவாக்கும் குறிப்புப் பெற அக்கருத்தையே பற்றிக் கூறிய தெய்வக் கவிநயமும் கண்டுகொள்க. |
| பாங்கு ஒளி பரப்பி நின்றார் - உள்ளொளியாகும் சிவஞான நிறைவாகிய ஒளியேயன்றிப் புறவொளியாகிய முத்தணி நிலவும்கூடி எம்மருங்கும் உள்ளும் புறம்புமாக ஒளிபரப்பி என்க; நின்றார் - அங்குப் பீடத்தின் நின்ற தன்மையன்றி என்றும் உள்ள நிலைபேறும் குறித்தது. |