[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1521

இனி, அதன் பலனாக முத்திப்பேறும் ஆவதாம். ஆதலான் முன்னைத் தவத்தின் நன்மை நந்தும் என்றார். முன்னைப் பெருந்தவத்தா னன்றி இவை நிகழா ஆதலின் "முன் செய் மாதவம்" என்றார்; நன்மை - நற்பயன்.
பொற்பாதம் - நம்பி - விளக்கி என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
கந்தவார் குழலினார் - நம்பாண்டார் நம்பிகளது மனைவியார். கந்தம் - உத்தம சாதிப் பெண்களின் கூந்தல் இயல்பாகவே நன்மணமுடைய தென்பவாதலின் இன்ன மணம் என்னாது வாளா கந்தவார் குழல் என்றார்; இவ்வாறு பொதுப்படக் கூறினும் இங்கு நீர் வார்த்து மணமகனார் பாதத்தை விளக்கும் உரிமையுடையவர் மனைவியாரே யாதலின் அதுபற்றி அவ்வா றுரைக்கப்பட்டது.
புந்தியால்...உன்னி - இச்சடங்குக்குரிய பாவனை கூறப்பட்டது. மணமகளைச் சிவனாகப் பாவித்து மணச் சடங்குகள் செய்தல் வேண்டுமென்பது விதி. தியானம் - அழுந்தியறிதல்; தியானத்தின்கண் - உன்னி என்று கூட்டுக.
பொற்கரக நீர் - பொன்னாலாகிய கமண்டல நீர்; கரகம் - மூக்குடைய சிறு பாத்திரம்; சிறு தாரையாக இடையறாது விழும்படி அமைக்கப்படுவது.
குழலினார் நீர் வார்ப்ப - மணமகன் பாதத்தைப் பால்கொண்டு நீர் வார்த்து விளக்குதல் மணமகளைப் பெற்ற தாயார் செய்வது மரபு. ஈண்டு மணமகனார் என்றதனோடு அமையாது வழிபடு குருவாகவும் கொண்டமையால் நம்பாண்டார் மனைவியார் கரகநீர் வார்க்க இச்சடங்கினைத் தாமே செய்தனர். "எம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்; வம்மின்"(3065) என முன்கூறியது காண்க.
உன்னி - விளக்கி - பூரித்தார்; தெளித்தனர் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

1233

3132. (வி-ரை) மிக்க புனித நீர் - ஞானபோனக ராதலின் பிள்ளையாரது பாதம் விளக்கிய நீர் மிகுந்த தூய்மையுடையது என்பதாம். அந்த நீர் என்க.
தலைமேற் கொண்டு - தலையின்மேற் றெளித்துக் கொண்டு; உயிர் வாழும் மாடமாகிய உடலின் உத்தமாங்கமாகிய மாடத்தின் உள்ளும் புறம்பும் தெளித்தனர்.
உருப்பொலி...பூரித்தார் - உடலின்மேற் றெளித்தல் முன் கூறினார்; மாடத்தின் உள்ளே தெளித்தல்போல் உடலின் உள்ளே நிறைத்தல் ஈண்டுக் கூறுகின்றார். பூரித்தல் - நிறைத்தல்; உருப் பொலிதல் - அழகுடைத்தாதல். உதரத்தககு அழகாவது தூய பண்டங்களால் நிறைவாதல்.
உவகை பொங்கி - பிள்ளையாரது திருப்பாதம் விளக்கிய தூயநீரினைப் பெற்ற பேற்றினைக் கருதி மிக மகிழ்ந்தனர்; உவகை பொங்கித் - தெளித்தனர் என மேலும் உரைக்க நின்றது.
கிளைஞர் - சுற்றத்தார்; உபலக்கணையால் உயிர்ச் சுற்றமாகிய தொண்டர்களையும் குறித்து நின்றது.
அருப்பு - அரும்பு என்பது அருப்பு என வலிந்து நின்றது. அரும்புதல் - மயிர் முகிழ்த்தல்; பெருமகிழ்ச்சியும் அன்புங் காரணமாக மயிர்முகிழ்த்தல் உளதாம்.

1234

3133
பெருகொளி ஞான முண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக் கரகமுன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின் றங்குலஞ் செப்பி "யென்றன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க் களித்தே" னென்றார்.

1235