| |
| பெற்றவர்....துன்னினார்கள் - குறித்த நல்வேளையில் மணமகளைப் பெற்றவரும் உடன் பிறந்தாரும் அழைத்து மணவறையினுள் மணமகனாரது வலப்பக்கத்தில் அமர வைத்தல் மரபு; உரிமைபற்றி இச்செயல் பெற்றவர் - உடன் பிறந்தார்களின்மேல் நின்றது; உடன்பிறந்தார் என்றதனால் ஈண்டுப் பிள்ளையாரின் தேவியாருக்கு உடன் பிறந்தார் உளராயினர் என்பது கருதப்படும். |
| பெருமணம் - வந்தணைந்தார்க்கெலாம் முத்திப்பேறு தரும் பெருமை குறித்தது; தலப்பெயர்க் குறிப்புமாம். |
| சுற்ற முன் சூழ்ந்து - பெற்றவர் உடன்பிறந்தார்களே யன்றி மணமகளாரின் சுற்றத்தார் முன்சூழ்ந்து போற்ற அணைந்தனர். |
| முன் துன்னினார்கள் - முன் - மணவறையாகிய ஆதிபூமியின் முன்பு. |
| பிணை - பெண்மான். |
| 1236 |
3135 | ஏகமாஞ் சிவமெய்ஞ் ஞான மிசைந்தவர் வலப்பா லெய்தி நாகமார் பணப்பே ரல்கு னற்றவக் கொழுந்த னாரை மாகமார் சோதி மல்க மன்னிவீற் றிருந்த வெள்ளை மேகமோ டிசையு மின்னுக் கொடியென விளங்க வைத்தார். | |
| 1237 |
| (இ-ள்) ஏகமாம்...எய்தி - ஒன்றாகும் மெய்யாகிய சிவஞானத்தைப் பெற்ற பிள்ளையாரது வலப்பக்கத்தில் பொருந்த வந்து; நாகமார்...கொழுந்தனாரை - நாகத்தின் படம்போன்ற அல்குலையுடைய நல்ல தவத்தின் கொழுந்து போல்வாராகிய அம்மையாரை; மாகமார்...கொடியென - ஆகாயத்தின் நிறைந்த ஒளிபொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்தினுடன் பொருந்தும் மின்னற்கொடி போல; விளங்க வைத்தார் - விளங்கும்படி அமரச் செய்தார்கள். |
| (வி-ரை) ஏகமாம் மெய்ச் சிவஞானம் - என்க. மெய்ச் சிவஞானம் - என்றும் மெய்யாகிய - சத்தாகிய - அழியாத - நிலைபிறழாத - சிவஞானம்; "தங்கழல் பேணும் ஒருநெறியில் வருஞானம்"(1963); "எண்ணரிய சிவஞானம்"(1966); "தாவில் தனிச் சிவஞானம்"(1967) என்று தொடக்கத்திற் கூறிவற்றை இங்கு நினைவுகூர்க. அந்த ஞானத்தின் பயன் ஈண்டு நிறைவுபெறும் நிலையாதலின் அத்தன்மையினை முடித்துக் காட்டியவாறு; இனிப், பிள்ளையார் பெற்ற ஞானத்தின் நிலைபற்றிப் பேசுகின்ற முடிந்த இடம் இதுவேயாதலும் காண்க. |
| ஏகமாம் மெய்ச் சிவஞானம் - ஏகம்ஆம் - என்புழி ஆம் என்னும் ஆக்கச்சொல் உண்மை குறித்து நின்றது. "நிர்க்குணனாய் நின்மலனாய்" (போதம் - 9-2 - உதா) என்புழிப்போல; "எட்படு நெய்யென வுயிருக் குயிராயெங்கும் ஏகமாம் பசுபதி தாளேந்துஞ் செய்யுள்" என்றவிடத்திற்போல ஏகமாஞ் சிவமெனவே, மாற்றாமற் சொற்கிடக்கை முறையே கொண்டு சிவனது மெய்ஞ்ஞானம் - சிவனையறிந் தனுபவித்தற்குரிய மெய்ஞ்ஞானம் - பெற்றவர் என்றுரைத்தலும் பொருந்தும். |
| ஞானமிசைந்தவர் - ஞானமே திருவுருவமாகப் பெற்றவர்; ஞானம் மிசைந்தவர் என்று பிரித்துச் சிவஞானத் தின்னமுதத்தை உண்டவர் என்றலுமாம்; மிசைதல் - உண்ணுதல். |
| வலப்பால் எய்தி - விளங்க வைத்தார் - என்று கூட்டுக; மண வேள்விச் சடங்கு நிறைவேறி எரிவலம் வரும்வரை மணமகள் மணமகனுக்கு வலப்பக்கத் திருக்க வைத்தலும், அதன்பின் இடப்பக்கத்து இருத்தலும் மரபு. பெண் நோன்பிருந்து தவஞ் செய்து உரிய மணமகனைப் பெறுகின்றாள் என்பது நூல்களின் உட்கிடையாதலின் |