| |
| வேள்வி வேட்ட பின்பே இடப்பாகம் சார்வது விதி; இடப்பாகம் பெண்மைக்குரிய பாகம்; உமையம்மையாரது தவம் முதலிய வரலாறுகளெல்லாம் இக்கருத்தை விளக்குவன; அம்மை இடப்பாகத்தில் இடங்கொண்டனர் என்பதுமிக் கருத்து; நற்றவக் கொழுந்தனார் என்ற குறிப்புமிது. "பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை யென்பார்" (171); "நங்கையென் னோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற் கென்பார்" (திருவிளை. புரா - திருமணம் - 120) முதலியவை காண்க. |
| நற்றவக் கொழுந்தனார் - "நற்பெரும்..பூங்கொம் பன்னார்" (3120). "பெருந்தவக் கொழுந்து" (1128) என்று அம்மையாரது தவக் குறிப்பும், அவர் போல்வார் என்ற குறிப்பும் காண்க. |
| வெள்ளை மேகமோ டியைந்த மின்னுக் கொடி என - வினையும் உருவும்பற்றி எழுந்த உவமை. மேகத்தில் மின்னற்கொடி இசைதல் இயற்கையாதலும் காண்க; இயைந்த மின் - "மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை" என்ற பழமொழிப்படி மின் இசைதல் மழைகாட்டுமாதலின் மேலால் ஞானோபதேச மழை பெய்தலும், முத்திப் பரபோகமாக விளைவு விளைதலும் சேரும் என்ற குறிப்பினாற் பயன்பற்றிய உவமமாதலும் கருதத் தக்கது; கார்மேகத்தினும் சூல்கொண்ட வெண்மேகம் பெரும் பயன்றரும் என்பது "ஒளிகொண் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளம்"(தேவா) என்றதனாலுமறிக. மழைபொழிந்த பின் மேகமும் மின்னும் மறைதலும் குறிப்பு. |
| வெள்ளை மேகம் - பிள்ளையாருக்குத் திருநீற்றுப் பொலிவு, முத்தணிகளின் வெண்மைக் கோலம், ஞானப் பிழம்பாகிய வொளி என்றவற்றால் உவமையாயிற்று. |
| மாகமார் சோதி - மாகம் - விண். |
| விளங்க வைத்தார் - முன்னரே அமைந்திருந்த தன்மை வெளிப்பட விளங்கும்படி அமர்த்தினர். |
| 1237 |
3136 | புனிதமெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக் குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பனா ருடனே கூட நனிமிகக் கண்ட போதி னல்லமங் கலங்கள் கூறி மனிதருந் தேவ ரானார் கண்ணிமை யாது வாழ்த்தி. | |
| 1238 |
| (இ-ள்) புனித மெய்க்கோலம்....தம்மை - தூய்மை செய்யும் மெய்க்கோலம் நீடிய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரை; குனிசிலை... கண்டபோதில் - வளைந்த வில்லைப்போன்ற புருவங்களையுடைய மெல்லிய பூங்கொம்பு போன்ற தேவியாருடனே கூட மிக்க ஆர்வத்துடன் கண்டபோதில்; நல்ல...கூறி - நல்ல மங்கலவாழ்த்துக்களைச் சொல்லி; மனிதரும்...வாழ்த்தி - கண்ணிமைக்காமல் பார்த்து வாழ்த்திய வகையினாலே மனிதர்களும் தேவர்களாயினார்கள். |
| 1238 |
| (வி-ரை) புனித மெய்க்கோலம் - புனிதம் - தூய்மையாகிய தன்மையுமாம். மெய் - அழிவில்லாத - நித்தியமான; புனிதம் - முத்தணி - தாமரை மாலை என்றிவற்றையும், மெய் - திருநீறு கண்டிகைகளையும் குறித்து நின்றதும் காண்க. |
| குனிசிலைப் புருவம் - வில், வளைந்த அளவும் பயன்றருவதுபோல ஈண்டு அம்மையாரின் கண்ணும் புருவமும் வளைந்துகாட்டிய நிலையின் அருட்பார்வை செய்து யாவர்க்கும் முத்திப் பயனளிக்கும் தன்மை வாய்ந்தது என்பதனைக் குறிப்பாலுணர்த்துவார் குனிசிலை போன்றதென்ற உவமைமுகத்தாற் கூறினார். |
| வேந்தர் தம்மைக் - கொம்பனா ருடனேகூடக் கண்டபோதின் - வாழ்த்தித் - தேவரானார் என்க. மணமக்கள் ஒருசேர வீற்றிருக்க முதலிற் காணும் மங்கலக் |