| |
| ளிய. உறும் பொருள் - இதனை ஆசிரியர் "பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு"(3143) என்று உரை விரித்துக்காட்டி யருளினர்; வல்லாக்குப் பழிபாவம் அறும்; அவர் அவலமிலார் என்க. பழியும் அதன் காரணமான பாவமும்; இவை வினைப்பயன். வினைகள் நீங்கப் பிறவித் துன்ப நீக்கம் குறித்தது. முன் "வீடெளிதாம்" (10) என்றார். அதன் காரணம், ஈண்டும் மூலமலங்களும் அற்றுச் சிவானந்தம் பெறுதல் என மேல் அருளும் பதிகப் பயன் "பந்தபாச மறுக்க வல்லார்" என்று கூறும் வகையாலும் கூறியமை கண்டு பயன்கொள்க. |
| தலவிசேடம் : - திருநல்லூர்ப்பெருமணம் - சோழ நாட்டில் காவிரியின் வட கரையில் 5-வது பதி; ஒரு கற்பத்தில் பிரமதேவர் ஏனைத் தேவர்களுடன் சீகாழிக்கு வருகையில் இதன் பெருமையினை அறிந்து "நல்லூர்" என்றமையால் இப்பெயர் பெற்றதென்பது தல வரலாறு. நல்லூர் - பதியின் பெயரும், பெருமணம் - கோயிலின் பெயருமாம்; "போகத்தன் யோகத்தையே புரிந்தான்" என்றதனால் இத்திருக்கோயிலின் பெயர்க் கருத்துக் குறிப்புப் பெறவும், பிள்ளையார் திருமணச் சரித விளைவு இக்கருத்தை மேலும் விளக்கவுமுள்ள பெருமையுடைய பதி; இங்கு ஆளுடைய பிள்ளையார் தமது திருமணத்தில் மணங் காண வந்தோரும் தேவியாரும் தாமும் சிவச் சோதியிற் புக்குத் திருவடியடைந்த சரிதப் பெருமை புராணத்துட் காண்க; ஆளுடைய பிள்ளையார் நமச்சிவாயத் திருப்பதிகத்தினைக் கட்டளை யிட்டருளி அது கேட்ட அளைவரையும் ஒருங்கே வீடுபெறும் தகுதியுடையவர்களாக ஆக்கிய பெருமையுடைய பதி; பிள்ளையாரது தேவியாரது பதியாதலின் ஆச்சாள்புரம் (ஆச்சாபுரம்) என வழங்கப் பெறுகின்றது. இது கொள்ளிடம் நிலையத்தினின்றும் கிழக்கே மட்சாலைவழி 3 நாழிகையளவில் அடையத் தக்கது. "ஆச்சா" மரம் உள்ள தலம் என்றும் கூறுவர். |
| திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தாருக்குச் சொந்தமாக நன்கு பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. வைகாசி மூலத்தில் திருஞான சம்பந்தர் திருமண விழாச் சிறப்பும், திருஞான சம்பந்தர் தேவியாருடனுள்ள திருக்கோல மூர்த்திகள் காண்பதும் இத்தலத்துக்குரிய தனிச் சிறப்புக்களாகும். |
| சுவாமி - சிவலோகத் தியாகர்; அம்மை - திருவெண்ணீற் றுமையம்மை - (பதிகம் 7 பார்க்க); தீர்த்தம் (திருக்கோயிலின் முன்பு) - பஞ்சாக்கர தீர்த்தம்; எட்டுத் திக்குக்களினும் இருடிகள் கண்ட எட்டுத் தீர்த்தங்கள் உண்டு; தலப்பதிகம் 1-ம், பொதுப் பதிகம் 1-ம் ஆம். |
| நமச்சிவாயத் திருப்பதிகம் (பொது) |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - கொளசிகம் - 3-ம் திருமுறை |
| காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னாம நமச்சி வாயவே. | |
| (1) |
| இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தானினை வார்க்கினி யானெற்றி நயன னாம நமச்சி வாயவே. | |
| (4) |