[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1545

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாம நமச்சி வாயவே.

(5)

மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேற்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாம நமச்சி வாயவே.

(6)

நரக மேழ்புக நாடின ராயினம்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரத னாம நமச்சி வாயவே.

(7)

நந்நி நாம நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாச மறுக்கவல் லார்களே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - மாயிரு ஞானலமுய்ய வழியினை அருளிச் செய்வார், ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் சிவனாமமாகிய நமச்சிவாயச் சொல்லேயாகும் என்றது ஆசிரியர் காட்டியருளியபடி (3145 - 3146).
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காதலாகி...ஓதுவார் - திருவைந்தெழுத்தை ஓதிப் பயன் பெற விரும்புவோர் மன மொழி மெய்கள் என்ற மூன்றானும் நிற்கும்நிலை கூறப்பட்டது. காதலாகி - மனநிலை; கசிந்து கண்ணீர் மல்குதல் - மெய்யின்நிலை ஓதுவார் - வாக்கின் நிலை. நன்னெறி - சிவநெறி; "நன்னெறி யாவது"(தேவா); சிவநெறியாவன சரியையிற் றொடங்கிச் சிவஞானமீறாக வருவன. உய்த்தல் - துணையாய் நின்று செலுத்துதல்; "நற்றுணை யாவது"(தேவா). வேத நான்கினு மெய்ப்பொருள் - வேதங்களின் இருதயமாக உள்ளது சிவநாமம். மெய்ப்பொருள் - மெய் - தன்னியல்புணர்த்திய அடைமொழி; செஞ்ஞாயிறு - மெய்யடியார் என்புழிப்போல. நாதன் - இறைவன். இறைமைக் குணங்கள் எட்டினையும் உடைய முதல்வன்; நாதனாதலின் ஆட்கொள்ளும் கடப்பாடுடையவன் என்பது. நாமம் - திருவைந்தெழுத்தாவது நாதனுடைய நாமமேயாம்; "ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கு மஞ்செழுத்தின் நாமத் தான்காண்"; "சிவனெனு நாமந் தனக்கே யுடைய"; நமச்சிவாயவே - இதனால் ஓதுமுறையும் பயனும் பெயரும் வந்த வழியும் கூறப்பட்டன. காதலாகி என்றதனால் நாமங் கேட்ட அளவால் அன்பு பெருகிக் காதலாய் விளைதல் குறிக்கப்பட்டது; "முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்" (தேவா) என்ற திருவாக்கின் கருத்து முழுமையும் ஈண்டு வைத்துக் கண்டுகொள்க. கசிந்து - மனமுருகுதல்; தொடக்கம். கண்ணீர் மல்குதல் - கசிதலின் விளைவாகிய மெய்ப்பாடு; நாமங் கேட்டலால் கசிதலும் கண்ணீர் மல்குதலும் என்னை? எனின், தலைவனது பெருமையும் தனது சிறுமையும், அவனது பேரருளும், அவன் எளியனாய் வந்து "ஈர்த்தீர்த்தென் னென்புறுக்கி" என்றபடி வலிய ஆட்கொள்ளும் தண்ணளியும், தன்னைக் கட்டி நின்ற பாசவிருளின் வலிமையும், அதனை நீக்கி அவன் அளித்த பேரின்பமும் ஆகிய