| |
| இப்பாட்டினால் மணத்தில் வெவ்வேறுவகைப் பணி செய்யப்பெற்றமையால் அந்நிலையில் உடனிருக்கப்பெற்ற மாதர்களைக் கூறுகின்றார். |
| மேல்வரும் பாட்டில் தவநிலையினாலும், வழிபாட்டு நிலையினாலும், மற்றும் தெரியலாகாவகையில் சிவனது அருள்நிலையினாலும் மணத்தில்வந் தணைந்தார்களைக் கூறுவார். |
| அணிதாங்கிச் சென்றோர் - மாலைபுனை மடவார் - பணி முற்றும் எடுத்தார் - பரிசனம் - என்று அவ்வவர் செய்த பணிகள் பற்றி உடம்பொடு புணர்த்திக் கூறியவாற்றால் அவ்வவரும் அவ்வப் பணிகள் காரணமாக வரும் தொடர்பினால் மணத்திற் சார்ந்து அப்புண்ணிய மேலீட்டினால் சோதியிற் புகப் பெற்றனர் என்பது குறிப்பு. |
| அணிதாங்கி என்றதனால் அணி என்பது ஈண்டு முத்துச் சின்னங்களும் முத்துக் குடை - முத்துப் பந்தர் முதலியனவும் ஏனை விருதுகளும் என்ற பொருளில் வந்தது. அணிதல் - முத்தினா லணியப்படுதல். |
| முத்தமாலை புனை மடவார் - புனை - அலங்கரிக்கும் பணி செய்த என்றதாம்; முத்துமாலைக ளணிந்த பெண்கள் என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள். ஈண்டுப் பெண்கள், அலங்கரிக்கும் பணி செய்தனர்; மணமகளாரை அணி புனைதலும் ஏனை மணவணி செய்தலும் அவர்களுக்குரியது என்பதாம். 3121 - 3127; 3128 - 3129 முதலியவை பார்க்க. |
| மங்கலம் பெருகும் பணி மூற்றும் எடுத்தார்கள் - இவை அட்டமங்கலம் எனப்படும் விளக்கு, நிறைகுடம், கண்ணாடி, கவரி, தோட்டி, முரசு, பதாகை, இணைக்கயல் என்பவையும், சிவபெருமானுக்குச் சிறப்பாக ஆகமங்களுள் எடுத்தோதும் பிறவுமாகிய எல்லாம்; முற்றும் என்றதன் குறிப்புமது. |
| பரிசனங்கள் - அட்டிற்றொழில் முதலாக ஏனை எல்லாவகைப் பணிகளையும் செய்யும் ஏவலாட்கள், "அமுது சமைத்தளிக்கும் பரிசனம்" (3329 = ஏயர் - புரா - 175) "திருமடத்தி லமுதாக்குவார்" (2465). |
| வினைப்பாசம் துணிவித்த உணர்வினராய் - வினையின் காரணமாய் வரும் பிறவியும், அதனால் வரும பற்றுக்களும், அவற்றுக்கெல்லாம் மூலகாரணமாகிய பாசம் என்னும் மூலமலம் (ஆணவம்) ஆகிய எல்லாவற்றையும் அறவே ஒழித்துவிட்ட உணர்வு ஒன்றே கொண்டவர்களாகி; இது முன்கூறிய அனைவர்பாலும் கூட்டநின்றது. |
| தொழுது - பிள்ளையாரையும் இறைவரையும் தொழுதுகொண்டவாறே; பாசந் துணிவித்தபோது இறைவர் சார்பொன்றே நிகழ; "மெய்ஞ்ஞானத் தோணுவினோடத்துவிதம்" சார்ந்து என்க. தொழுது - தொழுதமையால் என்று காரணப்பொருள்பட வுரைத்து இதுவரை பிள்ளையாருக்கும் தேவியாருக்கும் ஏவற்பணி செய்து வழிபட்ட காரணத்தினால் உடன்புக்கனர் என்றலுமாம். |
| உடன் புக்கு - சிவாத்துவிதானந்த நிலையில் உடனாகச் சோதியினுள்ளே புகுந்து. ஒடுங்கினார் - மாசங்காரத்தில் உயிர்கள் சங்கார காரணனாகிய சிவனுள்ளே மாயை பற்றுக்கோடாக ஒடுங்குவன என்பது ஞானநூல் முடிபு. "ஒடுங்கி" என்பது இறைவருக்குப் பெயராய் வருவதும் காண்க(போதம் - 1). |
| 1251 |
3150 | ஆறுவகைச் சமயத்தி லருந்தவரு மடியவருங் கூறுமறை முனிவர்களுங் கும்பிடவந் தணைந்தாரும் வேறுதிரு வருளினால் வீடுபெற வந்தாரும் ஈறில்பெருஞ் சோதியினு ளெல்லாரும் புக்கதற்பின், | |
| 1252 |