| |
3151 | காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலங் கொண்டருளித் தீதகற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியத னுட்புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார். | |
| 1253 |
| 3150. (இ-ள்) ஆறுவகை...அருந் தவரும் - சைவ நெறியின் அகச் சமயங்களாகிய அறுவகைச் சமயநெறியினும் நின்ற அருந் தவத்தார்களும்; அடியவரும் - திருத்தொண்டர்களும்; கூறுமறை முனிவர்களும் - வேதவிதி யொழுகும் முனிபுங்கவர்களும்; கும்பிடவந் தணைந்தாரும் - கும்பிடும் கருத்துடன் வந்து கூடியவர்களும்; வேறு...வந்தாரும் - முன் சொன்னவாறுள்ள எக்காரணமும் அறிய முடியாதவாறு திருவருள் வசத்தாலே வீடு பெறுதற்கு வந்தணைந்தவர்களும்; ஈறில்...புக்கதற்பின் - ஈறு இல்லாத பெரிய சிவச் சோதியினுள்ளே அனைவரும் புகுந்த பின்னர், |
| 1252 |
| 3151. (இ-ள்) காதலியை...வலங்கொண்டருளி - தேவியாரைக் கைப்பிடித்துக் கொண்டவாறே அப்பெருஞ் சோதியினை வலமாக வந்தருளி; தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் - உலகில் தீமையைப் போக்கிச் சைவம் விளங்கவென்றே வந்தருளிய திருஞான சம்பந்தப் பிள்ளையார்; நாதன்...புகுவார் - இறைவரது அழகியதாகிய வளர்ந்தெழுகின்ற சிவச் சோதியினை அணைந்து அதனுள்ளே புகுவாராய்; போத நிலை...உடனானார் - போதம் தழுவும்நிலை முடிந்தமையினாலே உள்புகுந்து ஒன்றாகச் சேர்ந்தது சிவானந்தாத்துவிதமாகிய உடனாற் தன்மையிற் பரமுத்தியைத் தலைக்கூடியருளினார். |
| 1253 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3150. (வி-ரை) ஆறுவகைச் சமயத்தி லருந்தவர் - இவர்கள் அகச்சமயத்தினர் என்று சைவ சோபான முறையில் வகுக்கப்படுவர். இவர்களியல்பு முன் "அறுவகை...தவத்தி னுள்ளோர்"(3101) என்ற இடத்தில் விரிக்கப்பட்டது. "எத்தவத்தோர்க்கு மிலக்காய் நின்ற வெம்பெருமான்" - பிள் - தேவா - புகலி - விழி - நட்டபாடை (10). |
| அடியவரும் - இவர்களியல்பும் முன் (3201) "மறுவறு...தொண்டர்" என்று உரைக்கப்பட்டமை காண்க. |
| கூறு மறை முனிவர்கள் - மறை முனிவர்கள் - மறைவயர்களுள்ளே சிறந்த வைதிக நெறி ஒழுகும் நால்வகை ஆச்சிரமங்களில் நின்ற பெரியோர்கள். |
| கும்பிட வந்து அணைந்தார் - இங்கு முன்கூறிய மூவகைப் பாகுபாட்டினுள் அமையாது கும்பிடுதற் கென்றெண்ணி மணச் சிறப்பில் வந்து கூடி அணைந்தவர்கள்; இவர்கள் பிள்ளையாரது மண எழுச்சியில் சீகாழியினின்றும் உடன்கூடிப் போந்தவர்களும், வழி இடையிலும் திருநல்லூரிலுமாக வந்து கூடியவர்களுமாம். முன்சொன்ன மூவகையினரும் கும்பிட வந்தவர்களேயாவர்; அவர்களோடு அவ்வகையுட் பாகுபாடு பெறாதவர் என்பார் இவ்வகையை இறுதியில்வைத் தருளினார். |
| வேறு திருவருளினால் வீடுபெற வந்தோர் - வேறு - முன் இரண்டு பாட்டுக்களினும், இப்பாட்டினில் முன்னரும் கூறிய வகைகளில் அல்லாது வேறாகியவர்கள். இவர்கள் அங்கு வந்து சேர்தற்குரிய காரணம் வேறு ஒன்றும் வெளிப்படையாகக் காண்பதற்கில்லை; ஆயினும் அவர்களும் வந்தணைந்து முன்கூறிய ஏனையோர்களுடன் சோதியினுட் புகுந்து வீடு பெற்றனர். ஆதலின் இறைவர் திருவருளே அவர்களை வரச் செய்து வீடு பெறுவித்தது என்பார் திருவருளினால் வீடுபெற வந்தோர் என்றார். |