| |
| கற்பனை - (1 - 100) பாட்டுக்களின் கற்பனைகள் முன் 21 சஞ்சிகையிற் றரபட்டன. அதனைத் தொடர்ந்து கொள்ளப்பட்டது. |
| (18) மக்கள் தம் வாழ்நாளில் என்றும் சிவாலயங்களைச் சென்று தொழுதலையே மேம்பட்ட கடனாககொண் டொழுகுதல் வேண்டும்; "ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" (போதம் - 12சூத்) என்றபடி சிவாலயத்தைச் சிவனெனவே கண்டு வழிபடுவது சீவன் முத்தர்களுக்கும் இவ்வுடலுள்ள வரை வாசனாமலம் நீக்கற் பொருட்டுச் சிவாகமங்களுள் விதிக்கப்பட்டுள்ளது என்பதனால், ஏனையோர்க்கு அது மிக இன்றியமையாத ஞானசாதனம் என்பது விளங்கும். (1998) |
| (19) பசுபோத மற்ற சிவஞானிக்கு வேண்டுவனவற்றை அரன்றானே மேற்கொண்டு இயற்றுவன். (2001), (2092), (2290) |
| (20) சிவஞானிகளைக் காணும் காட்சியே பெரும் பயன் தருவதாம். (2006) |
| (21) சிவஞானிகளைச் சிவஞானத் தொடர்புபற்றே வணங்கி வழிபடுதல் சிறப்பு. அஃதன்றி அவரது குல நலம்பற்றி வழிபடுவோரு முண்டு. அவருள் தாயர் மரபுத் தொடர்பு பற்றி வருவோர் மிகப் பற்றுடையோர்; (2008) |
| (22) ஆளுடையபிள்ளையார் தலயாத்திரையில் தரையிற் காலினால் நடந்து செல்வதும் அவரைப் பிறரொருவர் தாங்கிச் செல்வதும் பொறாது, தந்தையார் தமது பியலின் மேல்வைத்துச் சுமந்து சென்றார்; இது தலையாய தந்தை யன்பின் றிறமேயன்றி அருந்தவஞ் செய்து பெற்றெடுத்த தலைமைம் பாடும் பற்றியது. (2011) |
| (23) சிவஞானிகளது திருவாக்கின் வழியே உருக்கொள்வது உலகம்; அவர்களே தமது ஆணையிட்டு அருள வல்லவர். |
| (24) இறைவரைப் போற்றுவார் மண்புகார்; |
| (25) அன்பின்றிறத்தான் வரும் நிகழ்ச்சிகளிற் குலநல உயர்வு தாழ்வு குறுக்கிடாது; (2031) ஆயின், சிவாலய வழிபாட்டு முறைகள் சிவாகம விதிகளுக்குட்பட்டு நிகழத் தக்கன. (2032) |
| (27) பிள்ளையார், பாணனாரைத் திருக்கோயிற் புறத் திருமுற்றத்திற் கொண்டுபுக்கு அங்கு நின்று யாழியற்றிச் செய்தருளினர். உலக நிலையில் மக்கள் தங்கும் உறைவிடங்கள் முந்தையோர் கண்ட சமூகநிலை ஒழுக்கநூல் விதிப்படி அமைவுபடுத்தற்பாலன; சமூக ஒழுங்கு நடைமுறைக்கு இஃது இன்றியாதது. இவ்வாறன்றி இற்றை நாட் பேசப்படும் தகாத சமரசங்கள் போலியாம். அவ்வாறு வரும் சமூகநிலை அமைப்புக்களால் அன்பினியலுக்கு இழுக்கில்லை. |
| (28) ஒரு தலத்தைக் குறித்து யாத்திரை செல்பவர்கள் இடையில் வரும் பதிகளையும் வணங்கிச் செல்லுதல் மரபு. (2043) |
| (29) பெரியோர்களது வரவு கண்ட சரம் அசரமாகிய எல்லாம் மகிழ்ச்சிக் குறிகாட்டி மலர்தல் இயல்பு. (2040 - 2050) |
| (30) சிவனுக்குரிய திருநந்தனவனங்கள் பணிதற்குரியன. (2051) |
| (31) அண்ணலார் வெளியே அருட்கூத் தியற்றும் திருவம்பல் சிவஞானமேயாம். (2058) |