[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்821

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம்

  என்னும்
   
  (இ-ள்) நீல...மொழிந்து - "நீல மாமிடற் றால வாயிலான்" என்று தொடங்கி நிலவுகின்ற மூலமாகிய திருஇருக்குக் குறட் பதிகத்தினை அருளிச் செய்து; சாலும்...தம்முன் - பொருந்திய மேன்மையினையுடைய தலைச்சங்கப் புலவனாராகிய சோமசுந்தரமூர்த்தியின் திருமுன்பு; சீல...திளைத்தார் - ஒழுக்கத்தான் மிகுந்த மாதவமுடைய திருத்தொண்டராகிய குலச்சிறையாருடனே கூட அன்பினுள் அழுந்தி மகிழ்ந்தனர்.
 

(வி-ரை) "நீலமாமிடற் றாலவாயான்" என - இது பதிகத் தொடக்கம்; நிலவுதல் - நிலை பெறுதல்.

 

நிலவும் மூலமாகிய திருவிருக்குக் குறள் இருக்குக்குறள் - பதிகப்பாட்டின் யாப்பு வகை; மூலம் - சிறிய அளவில் ஒடுங்கிப் பெரிதினைத் தோற்றுவிக்கும் தன்மையுடைய பொருள்; வித்தும் அங்குரமும்போல; மேல்வரும் நிகழ்ச்சிகளின் காரணமாக நின்ற திருவாக்குக்களை அடக்கிப் பின்னர்த் தோற்றுவிக்கும் நிலை குறிப்பு; யாப்பிலக்கணத்துள், அடி இருசீரளவிற்கொண்ட குறட்பாவே ஏனை எல்லாப் பாக்களுக்கும் பாவினங்கட்கும் தொடக்கமாம் என்ற சொல்வகைக் கருத்தும், அதுபோலவே முன்கூறிய பொருள் வகைக் கருத்தும் புலப்பட இவ்வாறு மூலமாகிய என்றார்; மேல்வரும் நிகழ்ச்சிகளின் குறிப்பினையே திருவுளத்துக் கொண்ட அருளால் இப்பதிகம் போந்த தென்பது "ஆல வாயிலான் பால தாயினார் ஞால மாள்வரே" என்று பின்னர் பாண்டியன் சிவநெறி சாரும் நிலை குறித்ததனால் அறியப்படும். "முடிவிலின்றமிழ் செடிக ணீக்குமே" என்ற திருக்கடைக்காப்பும் காண்க. மூலம் - மூல இலக்கியம் என்றலுமாம்.

 
சாலு மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன் - திளைத்தார் - என்க.
  மேன்மையின் தலைச்சங்கப் புலவனார் - மேன்மையின் - மேன்மையினையுடைய, இரண்டனுருபும் பொருளும் உடன்றொக்கன. மேன்மையில் - திளைத்தார் என்று கூட்டி உரைத்தலுமாம். சாலுதல் - பொருந்துதல்; அமைதல்.
 

தலைச்சங்கப் புலவனார் தம்முன் - திருவாலவாயுடையாரைத் தமிழ்ச் சங்கப் புலவர் தலைவர் என்ற தன்மையைக் குறிப்பினாலே கண்டும், திருவுளத்துட் கொண்டும் வணங்கினார்; அரசுகளும் "சென்றணைந்து மதுரையினிற் றிருந்திய நூற்சங்கத்து' ளன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கண"ராகவே(1668) கண்டு வழிபட்டதனையும் காண்க; ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவுகூர்த; "தமிழ்நாடு பழிநாடும் படிபரந்த மானமிலா வமணென்னும் வல்லிருள்போய் மாய்வதனுக்கு"(2550) என்று முன் கூறிய குறிப்புக்களும் கருதுக; புலவனார் - திருவாலவாயுடையார். பிள்ளையாரது தமிழருமையறியும் பெருமான் என்பதும் குறிப்பு. இவரைத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் என்பது முதலாகப் பழந்தமிழ் நூல்கள் பேசும்.

 சீலமாதவத்திருத்தொண்டர் - குலச்சிறையார்; பிள்ளையாருடன் போந்த ஏனைத் தொண்டர்கள் என்றலுமாம்.
 

667