| மருங்கு அணைந்து - இதுவரை சிறிது துரத்தே நின்றிருந்த இவர்கள் இப்போது அணுக வந்து. |
| இருள் கெட - வந்தருள் - இருள்கெட என்றதனால் முழுமதி போல என்று வருவிக்கப்பட்டது; "நிலத்திடை வானி னின்று நீளிரு ணீங்க வந்த, கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர்" (2649) என்று மன்னவன் காணும் நிலையினையும், "வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை" (2626) என்று அம்மையாரும் அமைச்சனாருங் காணும் நிலையினையும் உரைப்பது காண்க; அடியார்களது சுழலார் துயர் வெயில் வெப்பம் நீக்கிக் குளிர்ச்சி தருதலின் மதியாகவே பின்னர் உருவகித்தார். அதுபற்றி ஈண்டும் முழுமதி என்று வருவிக்கப்பட்டது. இவ்வாறன்றி ஆதித்தன் போல என்று வருவித்துரைப்பர் ஆறுமுகத் தம்பிரானார்; அதன் பொருத்தம் ஆராயத்தக்கது; அரசனது முன்பு, முதலில் அமணர்கள் கண்டு சினந்து சூழ்ந்தபோது "காலை எழுங் கதிரவனைப் புடைசூழுங் கருமுகில்போல்" (2654) என்பது ஈண்டுக் கருதத்தக்கது; ஆனால் பகைவரைக் காயும் தன்மையால் ஆண்டு அவ்வாறு வேறு திறம்பட உருவாக்கப்பட்டது என்க; அவ்விடத்தும் கதிரவன் என்று வாளா கூறினால் கடும் வெயிற் காய்பவன் என்ன வருமாதலின், பிள்ளையார் தன்மையிடத்து அவ்வாறு கொள்ளல் தகுதியன்றென்று கருதுவார் போன்று ஆசிரியர் "காலை எழுங் கதிரவனை" என்று சிறப்பித்தமையும் கருதுக. - அடியார்க்குத் தண் நிழல்செய்யும் மதி போலவும் அல்லார்க்கு அழல் போலவும் உள்ளவன் இறைவன்; "அழல் தான்" "நிழல் தான்" (தேவா - பிள் - நெல்லிக்கா). அத்தன்மையே பிள்ளையார்பாலும் உளதாம். (திரு.வ.சு.செ. அவர்கள் குறிப்பு). |
| எடுத்திசைத்தல் - வரவேற்கும் முறையாற் போற்றுதல். |
| 675 |
| 2574. (வி-ரை) அருள்முகம் - அருளிப்பாடாகிய நன்மொழி; இது வருவித்துரைக்கப்பட்டுள்ளது. அருள்முகம் - அளியுடைய பார்வை என்றலுமாம். |
| புறத்தினில் - திருவாலவாய்த் திருக்கோயிலின் புறத்தே; |
| சித்தம் இன்புறும் - மனத்துள் இன்பம் மிகப்பெற்ற. பலகாலம் எண்ணியிருந்த கருத்துமுற்றி நிறைவேறும் நிலை கண்டமையால் மனத்துள் இன்பமுற்றார்; |
| அமைச்சனார் திருமடங்காட்ட - இத்திருமடம் குலச்சிறையார் பிள்ளையாருக்காக அமைதி செய்த மடம்; இதன் வழக்காய் வழிவழி வந்து நிலவுவது இப்போது திருஞான சம்பந்தராதீனம் என வழங்கும் ஆதீனத்தின் திருமடம் என்ற வரலாறு கேட்கப்படுகின்றது; இத்திருமடம் தெற்காவணிமூலத் திருவீதியில் உள்ளது; பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுள் வாகீசர் போன்ற ஒரு பெரியார் தமது மடத்தினில் வருக என்று பிள்ளையாரைப் பரிசனங்களுடன் வேண்டி அழைத்துச் சென்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது; பெரும் பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலுள் அது வாகீச சுவாமிமடம் என்று பெயராற் கட்டப்படுகின்றது; இவற்றின் பொருத்தம் ஆராயத் தக்கது; அரசியாரும் அமைச்சனாரும் செய்த விண்ணப்பத்தின்படி எழுந்தருளிய பிள்ளையாருக்கும் உடன் வந்தாருக்கும் அமைச்சனாரே திருமடம் முதலிய குறைவறுப்புக்கள் அமைத்தல்முறை; மேல்வரும் பாட்டில் "பாண்டிமா தேவியாரருளால் குலச்சிறையார் விருந்தளிப்ப" என்பது காண்க; அன்றியும், வாகீசர் என்பது திருநாவுக்கரசு சுவாமிகளைக் குறிப்பதாக, அவர் பெயரால் திருவாலவாயில் மடம் அமைவதற்கு இயைபில்லை; அரசுகள் இதன் பின்னரே இங்கு எழுந்தருளுதல் காண்க; முன்கூறிய திருவிளையாடற் புராண வரலாறுகள் வடமொழிப் புராணங்களைப் பின்பற்றி எழுந்தன போலும்! |