| என்றார்; எனவே இவ்விருந்தோம்பல் முதலியவை அரசகாரியமாகாது அரச குடும்பத்தின் இல்வாழ்க்கை நிலையின் கடமையாகிய இல்லறங்களுள் ஒன்றாய் இயற்றப் பெற்றது என்றறிவித்த கவிநயம் காண்க;
Royal guest - State guest என்பன வாதி நவீன வழக்குக்கள் காண்க. |
| அருளால் - அன்பின் மேம்பட்ட நிலையின் எழும் செயல் என்பது குறிப்பு ; விருந்தோம்பும் செயல்கள் இல்லக்கிழத்தியாருக்கு உரியன என்பதும், பெண்பாலாரின் சிறப்புக் கடமைகளுள் ஒன்றென்பதும் குறிப்பாலுணர்த்தப்பட்டன; "மத்தக் கரியுரியோன்றில்லை யூரன் வரவெனலுந், தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேன் மிளிர்ந்து, முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங், கித்தக் கருங்குவ ளைச்செவ்வி யோடிக் கெழுமினவே" (திருக்கோவை. 388) என்று மணிவாசகப் பெருமானார் இதன் இயல்பினைச்சுவைபடக் கூறியருளிய சிறப்புக் காண்க; அம்மையார் அரண்மனையினின்றவாறே இவையெல்லாம் திருந்த ஏவியமைத்தனர் என்பதாம். |
| பரவு காதலின் - போற்றிப் பாராட்டும் அன்பின் மிகுதியினாலே; |
| விரவு நண்பு - காதலுடன் பொருந்திய நண்பு. இது விருந்தோம்புவாரிடத்தும் இயற்றுவோரிடத்தும் இன்றியமையாது வேண்டப் படுவன. |
| செல்வர் - அரச விருந்துக்கும் மேற்பட்ட அருட்செல்வம் உடையவர் என்பது குறிப்பு; அங்கு - அமைச்சனார் காட்டிய அத்திருமடத்தில். |
| எல்லி வந்தணைய - எல்லி - இரவு ; அணைய - அணையும் போது ; அணைய - ஈண்டினர் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க; அணைய - அணையும்படி. |
| 2576. (வி-ரை) வழுதி மாநகர் - பாண்டியர்களது தலைநகரமாகிய மதுரை; மாநகர் - தலைநகர்; |
| பகல்வரக் கண்ட - குண்டர்கள் என்று கூட்டுக; பகல் - பகலில் அரசன் அமண் சார்பினிருப்பவும் அஞ்சாது மறைவாயன்றி வெளிப்படையாக வர என்றதும் குறிப்பு ; பகல் - ஞாயிறு என்று கொண்டு ஞாயிறுவரக் கண்ட என்றலுமாம்; பிள்ளையாரும் அடியாரும் கூடிய கூட்டத்தில் விளக்கம் ஞாயிற்றினை ஒத்தது என்பதாம். |
| அடியாருடன் வரப் பகல் கண்ட கழுதுபோல் - கலங்கி - என்று கூட்டி உரைத்தலுமொன்று ; கழுது - பேய் ; பேய்கள் இரவில் வெளியிற் சரிந்து உலவும் தன்மையும் பகல் கண்டவுடன் கலங்கி ஒரிடத்து ஒதுங்குந் தன்மையு முடையன; "வாதுசெய் சமணும் சாக்கியப் பேய்கள்" (பிள் - தேவா - அச்சிறு பாக்கம்). |
| காரமண் குண்டர்கள் - கார் - கரிய நிறமுடைய ; உடல் போலவே அகமும் கருமையுடையார் என்ற குறிப்புப் பெறக் காரமண் என்றார், அகத்துட் கருமையாவது பொய், சினம், வஞ்சனை,பொறாமை முதலிய தீக்குணங்கள் நிறைதல்; குண்டர் - கீழ்மக்கள்; இருட்கிருள் - புற இருளும் அக இருளும் குறித்தது. |
| இழுது மை இருட்டு இருள் என - இழுது - குழம்பு; மையிழுது என்க. மைக்குழம்பு. |
| மைஇருட்கு இருளாம் என - மைக்குழம்பு போன்ற திணிந்த இருளுக்கும் மேம்பட்ட இருள்; கு என்ற நான்கனுருபு எல்லைப் பொருளில் வரும் ஐந்தனுருபின் பொருளில் வந்தது; "வண்ண நீடிய மைக்குழம் பாமென, நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து" (455) "கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட், டுருகுகின்றது போன்றது" (454) என்ற கருத்துக்கள் காண்க; |
| இருளென - கரிய அமணரை இருளுக்கு உவமித்தார்; உருப்பற்றி வந்த உவமம். இருளென ஒருபால் ஈண்டினர் - பகல் வந்தபோது இருள் ஒருபுடை ஒதுங்குதல் |