| இயல்பாதலின் வினைபற்றி வந்தவுவமுமாம்; கழுதுபோல் என்றதும் இவ்வாறே உருவும், பிறரைப்பற்றி அலைத்தலாகிய வினையும் பற்றி வந்தவுவமம்; கழுதுபோல் வரும் என்றது இரவிற் பேய் போன்று என அவர்தம்மியல்பு பற்றியும், இருளென ஒருபால் ஈண்டினர் என்று பகலில் இருள் போன்று எனப் பிள்ளையார் முன் அவர்தம் நிலைபற்றியும் தெரிவிக்க இரண்டு வகையால் உவமை கூறினார் ; " இருட் குழாஞ் செல்வது போல" (1349)-ல் உரைத்தவையும், "அவ்விருளன்னவர்" (1387) முதலியவையும் பார்க்க. |
| பகல்வரக் கண்ட இருளென ஒருபால் ஈண்டினர் - பகலில் வந்தபோது இருள் செயலின்றி ஒருபுடை ஒதுங்கும் இயல்பும் குறித்தது; |
| ஒருபால் ஈண்டினர் - வஞ்சகச் சூழ்ச்சி புரிவார் வெளிப்படையானன்றி ஒருபுடை மறைவிடத்துக் கூடுதல் இயல்பாம் என்ற குறிப்பு. |
| இழுகு மெய்யிருட்கிருள் - என்று பாடங் கொள்வாரு முண்டு; இப் பொருட்கு, மெய்யிருட்கு இவர்களின் உடலின் இருளி (கருமை) னுக்கு; இருள் இழுகும் - பூத இருளும் பின்னடையும் என்றுரைக்க; இழுகுதல் - பின்னடைதல்; |
| 678 |
2577 | அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையா ரமர்ந்த துங்க மாமடந் தன்னிடைத் தொண்டர்தங் குழாங்கள் எங்கு மோதிய திருப்பதி கத்திசை யெடுத்த பொங்கு பேரொலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய், | |
| 679 |
2578 | "மற்றிவ் வான்பழி மன்னவன் மாறனை யெய்திச் சொற்று" மென்றுதஞ் சூழ்ச்சியு மொருபடி துணிவார் கொற்ற வன்கடைக் காவலர் முன்சென்று குறுகி "வெற்றி வேலவற் கெங்களை விளம்புவீ" ரென்றார். | |
| 680 |
| 2577. (இ-ள்) அங்கண் மேவிய சமணர்கள் அவ்விடத்துப் பொருந்திய சமணர்கள்; பிள்ளையார்....புக்கிட - பிள்ளையார் எழுந்தருளிய பெருந்திரு மடத்தின் கண்ணே திருத்தொண்டர் கூட்டங்கள்எவ்விடத்தும் கூடிப்பெருக ஓதிய திருப்பதிகத்தின் இசை ஓங்கி மேலெழும் பேரொலியானது தமது செவிப்புலங்களிற் புகுத; பொறாராய் - பொறுக்கலாற்றாதவர்களாகி, |
| 679 |
| 2578. (இ-ள்) "மற்று...சொற்றும்" என்று - "மற்று இந்தப்பெரும் பழியினை மன்னவனாகிய பாண்டியனை யடைந்து சொல்வோம்" என்று கொண்டு; தம் சூழ்ச்சியும்...துணிவார் - தமது சூழ்ச்சியினையும் ஒரு படியாகத் துணிவு கொள்வாராகி; கொற்றவன்...குறுகி - அரசனது அரண்மனை வாயில் காப்போர்முன் போய்க் குறுகி; வெற்றி...விளம்புவீர்" என்றார் - வெற்றியுடைய வேலேந்திய அரசனிடம் நாங்கள் வந்த செய்தியினை அறிவியுங்கள் என்று கூறினார். |
| 680 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 2577. (வி-ரை) அங்கண் மேவிய - முன்பாட்டிற் கூறியபடி கண்டு கலங்கி ஒரு பால் ஈண்டிய. |
| துங்க மா மடம் - துங்கம் - உயர்வு; மா - சிறப்பு; துங்கம் மா என்பவை பொருளானும் அருளானும் பெருமை குறித்தன. ஒரு பொருட் பன்மொழி மிகப் பெரிய என்று மிகுதி குறித்ததென்றலுமாம் "செல்வப் பெருமடம்" (2507) என்பது காண்க. தக்கயாகப் பரணியிலும் இதனைப் பெருமடம் என்பதும் காண்க. |