| சென்று - வாயிற் புறத்து நின்ற அடிகண்மார்களிடம் போய்; |
| பாயினால் உடல் மூடுதல் - பாயுடுத்தல் அமண குருமார் வழக்கு; |
| பதைப்புடன் புக்கார் - பதைப்பு - 2576ல் கூறிய மனக்கலக்கத்தாலும், பொறாமையை மறைத்து அதனை அரசனிடம் மிகுதிப்படுத்திக் காட்டும் சூழ்ச்சியாலும் நிகழ்ந்தது; இது உலகியல் வழக்கிலும் காணப்படும்; |
| பாயினால் உடன் மூடுவார் பதைப்புடன் புக்கார் - உடலைப் பாயினால் மூடுதல் போல உள்ளத்தில் மூண்டு வந்த கலக்கத்தையும் பொறாமை காரணமாக மூண்ட வஞ்சச் செயலையும் மேற்கொண்ட பதைப்பினால் மூடினார் என்ற குறிப்பும் காண்க. |
| ஏயினாரணைவா ரென - என்பதும் பாடம். |
| 681 |
2580 | புக்க போதவ ரழிபுறு மனத்திடைப் புலர்ச்சி மிக்க தன்மையை வேந்தனுங் கண்டெதிர் வினவி "ஒக்க நீர்திரண் டணைவதற் குற்றதென்?" னென்னத் "தக்க தல்லதீங் கடுத்தது சாற்றுதற்" கென்றார்; | |
| 682 |
| (இ-ள்) புக்கபோது...கண்டு - அவ்வாறு அவர்கள் தன் முன்பு புகுந்தபோது அவர்களது அழிவுறும் மனத்தின்கண் வாட்டம் மிகுந்திருந்த தன்மையினை அரசனும் கண்டு; எதிர்வினவி...என்ன - அதனை முன் வினவி "நீர் ஒக்கத்திரண்டு கூடி வந்து இங்கு அணைவதற்குப் பொருந்திய காரணம் யாது?" என்று கேட்க; தக்கதல்ல...என்றார் - சொல்லத்தக்கதல்லாத தீமை நேர்ந்தது என்று சொன்னார்கள். |
| (வி-ரை) அழிவுறும் மனத்திடைப் புலர்ச்சி மிக்க தன்மை மனம் அழிவுறுத லாவது கவலையினாலும் கலக்கத்தாலும் மனமுடைதல்; புலர்ச்சி - வாட்டம். |
| மனத்திடைப் புலர்ச்சி மிக்க தன்மையைக்கண்டு - மனம் வாடிய நிகழ்ச்சியை முகம் புலர்தல் முதலிய நியதமாகிய புற நிகழ்ச்சிகளால் அறிந்து; அனுமான அளவையாலறிந்து; "அகத்தினழகு முகத்திற் றெரியும்" என்பது பழமொழி. "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம், கடுத்தது காட்டு முகம்" (குறள்). |
| வேந்தனும் - ஒத்த மனப்பண்புடைய வேந்தனும் அப்பண்பினால் கண்டு என உம்மை எச்சவும்மை. |
| எதிர்...வினவி என்ன - காரணம் வினவும் தம்மையால்; புறக்குறிகளால் மனவாட்டத்தைக் கண்டனன்; அதன் காரணம் அறிய வேண்டினன்; அதனை அவர் அனைவர்பாலும் கண்டனன்; அதுவே அவர் அனைவரும் ஒப்பத் திரண்டணையவும் செய்தது என்றும் கண்டனன்; அடிகண்மார் மனம் வாடியதென்னை என வினவுதல் மரபன்றாதலின் அவ்வாறு திரண்டணையச் செய்ததென்னை என வினவினன். "கடிதணைவா னவர்க்குற்ற தென்கொல்என"(1351). |
| சாற்றுதற்குத் தக்கதல்ல தீங்கு அடுத்தது - என்க; அல்ல தீங்கு - அல்லலாகிய தீங்குகளின் தொகுதி; மரபு பற்றி அரசன் வினவியபடியே அவர்களும் அவ்வாறே அது வாயாற் சொல்லத்தகாததும் நீர் கேட்கத் தகாததுமாகிய தீங்கு அடுத்த காரணம் என்ற நயம் காண்க. மொழி முறை பிறழ வைத்தது மனக்கலக்கம் காட்டற்கு என்க. இவ்வாறு மறைத்துக் கூறியது அரசனது ஆதரவை மிகுவித்தலும் கருத்து. மேல் "பரிந்து" என்பது காண்க. இரட்டுற மொழிதலால் தக்க தல்லது ஈங்கு அடுத்தது என்று பிரித்துரைத்தலுமாம்; இந்நகரில் வரத்தகாதது என்ற குறிப்புப்பட விடயத்தை ஒருவாறு உணர்த்திய நயமும் காண்க. இதனையே தொடர்ந்து அரசன் மேல் வினவுதலும் காண்க. |
| 682 |