[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்849

2594
மானியார் தாமு மஞ்சி "வஞ்சரிப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார்; செய்வ தென் னா"மென் றெண்ணி,
"ஞானசம் பந்தர் தம்பா னன்மையல் லாது செய்யும்
ஊனம்வந் தடையி னாமு முயிர்துறந் தொழிவ" தென்றார்.
 

696

  (இ-ள்) மானியார் தாமும் அஞ்சி - அரச மாதேவியாரும் அஞ்சி; வஞ்சரிப் புலையர்...எண்ணி - வஞ்சகர்களேயாய் இவ்வாறு ஈனமான செயல்களையே செய்ய வல்லவர்; அதற்கு நாம் என்ன செய்வது; என்று எண்ணமிட்டு; ஞானசம்பந்தர்....என்றார் - திருஞானசம்பந்தரிடம் நன்மையல்லாத செயல்களை இவர்கள் செய்து அதன் மூலம் கெடுதி வந்து சேருமாயின் நாமும் உயிர் துறப்போம் என்று கூறினார்.
  (வி-ரை) இது மந்தியார் கருதிக் கூறிய எச்சரிக்கையின் மேல்விளைவைப் பற்றி அம்மையார் சிந்தித் தறிந்து சொல்லியது.
  வஞ்சர்...வல்லார் - செய்வதென்? மந்திரியார் - மற்றினி, அமணர் செய்யும் வஞ்சனை அறியோம் - என்றதனை உட்கொண்டு, அற்றன்று; அவர் செய்வது ஈனமே யாம் என்பதனை அறிவோம்; ஆனால் அதற்குமாறாக நாம் செய்யக்கிடந்த தென்னையோ? என்று எண்ணமிட்ட அம்மையார், அவர் வஞ்சச் சூழ்ச்சியே புரிகுவர்; புரியினும் அதன் கேடு ஒன்றும் பிள்ளையார்பாற் சாரவலியிலது; ஒரு வேளை அவ்வாறன்றி என மேற் கூறுகின்றார். (செய்வது) என்னாம் - எதுவோ என்றலுமாம்.
  நன்மையல்லாது செய்யும் ஈனம் வந்தடையின் - அடையின் - வந்து அடையாது என்பதுறுதியே. ஆயினும் ஒரு வேளைவரின்; என்றார்; நன்மையல்லாது - தீமை சொல்லலாகா மரபு பற்றி இவ்வாறு கூறுவது பெரியோர்கள் வழக்கு. "ஒழுக்க முடையார்கட் கொல்லாவே தீய, வழுக்கியும் வாயாற் சொலல்"(குறள்); பிள்ளையார்பால் வேறொன்று புகுமாயின் என வாக்காற் சொல்லவும் நடுங்கி அஞ்சியது அம்மையாரின் அன்பு நிறைந்த மனநிலை.
  யாமும் உயிர் துறந்தொழிவது - "செய்வதென்" என்று எண்ணமிட்டு அம்மையார் துணிந்த முடிவு; தாம் உயிர் துறப்பதே அதற்கு முடிவு என்பது; முயற்சியின்றி உயிர் தானாகவே நீங்கும் என்பதும் குறிப்பு; அம்மையார் தலையன்புடையாராதல் காண்க.
  நன்மையல்லாத செய்ய - என்பதும் பாடம்.
 

696

2595
இவர்நிலை யிதுவே யாக; விலங்குவேற் றென்ன னான
அவனிலை யதுவா; மந்நா ளருகர்தந் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார் தங்கண்மந் திரந்தாற் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்;
 

697

 

வேறு

2596
ஆதி மந்திர மஞ்செழுத் தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினு மற்றைமந் திரவிதி வருமே!
பூதி சாதனர் மடத்திற்றாம் புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண் குண்டர்க டளர்ந்தார்.
 

698