| வீசனார் முனிவு மென்றும்" (சித்தி - 2 - 106). எனவே ஈண்டுப் பிள்ளையார் மேற்கொண்டது ஆணவக் குணமாகிய முனிவு அன்று எனவும், இறைமைக் குணமாகிய கருணையின் விளைவு எனவும் கண்டு கொள்க. |
| முத்தமிழ் விரகர் - பிள்ளையாரது தமிழின் மூலம் கோபமும் பிரசாதமும் இனி வர வுள்ளமையால் இங்கு இத்தன்மையாற் கூறினார்; சுடர், பையவே சென்று பாண்டியற் காகவே" "வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக், கொப்ப ஞான சம்பந்த னுரை பத்தும்" என்ற பதிகக் குறிப்புக்கள் காண்க. |
| மன்புரக்கு மெய் முறை வழுவென மனங்கொண்டார் - குடிகளுக்கும், தன்நாட்டில் வருவோர்க்கும், தன்னாலும் தன்பரிசனத்தாலும் கள்வர், பகைவர்களாலும் வேறுயிர்களாலும் வரக்கூடிய ஐந்து பயங்களையும் காத்து அறத்தைக் காவல் புரிவது அரசன் கடமை. இதன் தன்மை முன்(121) விளக்கப்பட்டது. ஈண்டு அமணரால் விளைந்த தீமைக்கு அரசனே பொறுப்பாளி என்பது அறநூலின் வழியும் துணியப்படும். மன் - அரசன்; புரக்கும் முறை - அரசன் நாடு காவல்புரியும் நீதிமுறை வழு - வழுவியதனால் விளைந்தது; மெய்ம்முறை - வெறும் மேற்பார்வைக்காக அன்றி உண்மையாகச் செலுத்தும் நீதி; "மாதவர் நோன்பும் மடவார் கற்புங் காவலன் காவலின்றித் தங்கா" என்பது (மணிமே); மூர்த்திநாயனார் புராணத்தினுள் வடுகக் கருநாடகர் மன்னன் சமண் சார்பினால் அடியாரை வன்மை செய்து பட்ட வரலாற்றின் பகுதிகளும், ஆளுடைய அரசுகளின் வரலாற்றுப் பகுதிகளும், தண்டியடிகள் வரலாறும், பிறவும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. |
| மன்புரக்கு மெய்முறை வழு - என மனங்கொண்டார் - ஈண்டு அமணர்களே இத்தீச்செயல் செய்தோர் என்றறிந்த பிள்ளையார் இத்தீங்குக்கு அமணர் முதற் காரணராயினும் அது வாராமற் காவல் புரியும் முறையில் அரசன் வழுவியது மேலும் துணைக் காரணமாம் என்று திருவுள்ளத்திற் துணிபு கொண்டனர்; இஃது அடியார் பால் செய்த அபசாரத்திற்குப் பொறுப்பு யாவர் என்று துணிந்தபடியாம்; பரிவும் அச்சமும் முனிவும் உற்ற நிலையில் ஏனை மக்கள் போலத் துளங்குதலின்றி நேர்மையில் மனம் வைத்துத் துணியும் பெரியோர் நிலையாம். இத்துணிபினால் இக்குற்றத்திற்காகச் செய்யப்படும் தண்டம் முதற்கண் அரசனையே சாரத் தக்கதென்பதை மேல்வரும் பாட்டிற் கூறுவார். மனங் கொள்ளுதல் - மனத்தினுள் ஆய்ந்து கொள்ளுதல். |
| 703 |
| 2602. (வி-ரை) "வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று" எனும் விதி முறையால் - அரசனது நாடு காவல் முறையின் வழுவே இதற்குக் காரணம் என்ற துணிபின்மேல் அரசனும் அங்கமும் என்ற இரண்டில் அமைச்சுத்திறம் நேர்பட நிகழ்வது தெரிதலின், பாரிசேட அளவையால், இது வேந்தன் மேற்று எனத் துணிவது விதி எனப்பட்டது; மன்புரக்கு மெய்ம்முறை வழு என மனங் கொண்டது அரசநீதி வழுவாதாயின் இது நிகழாது; அரசநீதி வழுவாமையும் தீங்கு நிகழாமையும் நியதமான காரண காரியமாகி வரும் உடனிகழ்ச்சிகள்; ஆதலின் தீங்கு நிகழக் காண்டலின் நீதி வழுவிற்று என முன் துணிவது எதிர்மறைக் கருதலளவையான் வரும் விதி; மேற்று - மேலது; பொறுப்பு அவன்மேல் நின்றது; விதி - உலகியல் நீதி; முறை - இறைவர் நியதி; விதியும் முறையும் என்க; பிள்ளையார் இவ்வாறு தமது சிவத்தன்மையால் உணர்ந்தாராயினும் உலகியல் நீதி விதியினும் வைத்துத் துணிபு கண்ட நேர்மை காண்க.அதனை விரித்து எடுத்துக் காட்டி அமணர் கொளுவிய தீயினை அரசனிடம் பையச் சென்று பாண்டியற்கு ஆக! எனப் பணித்த அருளிப்பாட்டின் காரணத்தை உலகறிய வைத்த ஆசிரியரது தெய்வக் கவிமாண்பும், பிள்ளையார்பால் உலகம் அபசாரப்படாமற் காக்கும் கருணை மாண்பும் காண்க. |