[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்863

  வெளிப்படும்போது விளக்கு எனப் பெயர்பெறுவது போலக் காண்க. அரசனாணையானது நீதிமன்றத் தலைவர் பால் வெளிப்படும்போது நீதிமுறை என்றும், தண்டத் தலைவர்பால் விளங்கும்போது தண்டம் என்றும் பெயர்பெறுமா போலவும் காண்க. இவ்வாறு வரும் பிறவும் காண்க.
  அன்றே - அப்போதே; அருளாணை சென்று சேரும் விரைவு குறித்தது.
  சண்பை மன்னவர் - மன்னவனை மறுத்துத் திருத்துதல் பிறிதொரு மன்னவனாலன்றி யியலாதென்ற இயல்புக் குறிப்பு,
 

706

2605
செய்ய மேனியர் திருமக னாருறை மடத்தில்
நையு முள்ளத்த ராயமண் கையர்தர நணுகிக்
கையி னாலெரி யிடவுடன் படுமெல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை யெழுந்தனன் மீது.
 

707

  (இ-ள்) செய்ய....மடத்தில் - சிவந்த திருமேனியினையுடைய இறைவருடைய திருமகனாராகிய பிள்ளையார் எழுந்தருளிய திருமடத்தில்; நையும்...எரியிட - கவலையினால் வாடும் உள்ளத்தையுடையவர்களாக அமணராகிய கீழ்மக்கள் பக்கத்தில் வந்து கையினால் கொண்டுபோய்த் தீக்கொளுவ; உடன்படும் எல்லி கரப்ப - உடனிருந்து சம்மதித்த இராப்போது மறைய; வெய்யவன்...மீது - சூரியன் கீழ்கடலின்மீது வந்து எழுந்தனன்.
  (வி-ரை) செய்ய மேனியர் - "எரிபோன் மேனிப்பிரான் றிறம்" (தேவா). "செய்யனே" என்ற பதிகக் குறிப்புப்பட நின்றது.
  திருமகனார் - அத்தனே, ஐயனே, அப்பன், என்ற பதிகக்குறிப்புக் காண்க; மகனார் - பாலூட்டியதனால் மகன்மை முறைமை கொண்டவர். இதுபற்றி முன் உரைத்தவை பார்க்க.
  நையும் உள்ளம் - நைதல் - கவலையினால் இது கைகூடுமோ என்று வருந்துதல்;
  நணுகிக் கையினால் எரியிட - விஞ்சை மந்திரத்தொழில் செய்த இடத்தினின்றும் பிள்ளையாரது திருமடத்தை அணுகி; மந்திரத் தொழில் வாய்த்திலதாயினமையாற் கையினாலே எரிகொண்டு கொளுவினர் என்ற சரிதக் கருத்து.
  உடன்படும் எல்லி - எல்லி - இராப்பொழுது; உடன்படும் - தற்குறிப்பேற்ற அணி; கரப்ப என்றதும் அது; தீவினை செய்தலைக் கவனித்தும் உடன் வாளாவிருந்த மையால் உடன்படும் என்றார்.
  வெய்யவன் - எழுந்தனன் - குற்றஞ்செய்த அரசனை வெதுப்ப உள்ளவனாதலின் வெய்யவன் என்றார்.
  மீது எழுந்தனன் - விண்ணின்மீது எழுந்தான்; இதுவும் தற்குறிப்பேற்றம். கடலிடை - இடையினின்றும் . இப்பாட்டினால் சமணர் எரிகொளுவிய இரவு போய்ப் பகல் வந்தமை கூறப்பட்டது. அம்மையார் கருத்துமுற்றி மேலெழுதல் குறிப்பு என மேல்வரும் பாட்டுக் காண்க.
 

707

2606
இரவு பாதகர் செய்ததீங் கிரவிதன் மரபிற்
குரவ வோதியார் குலச்சிறை யாருடன் கேட்டுச்
"சிரபு ரப்பிள்ளை யாரையித் தீயவர் நாட்டு
வரவ ழைத்தநா மாய்வதே!" எனமன மயங்கி,
 

708