[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்873

  2616. (வி-ரை.) கொற்றவ னமைச்சனாராம் குலச்சிறையார் - அமைச்சுத் திறத்தின் நிலைபற்றி விடையளிக்கின்றார் என்று மேலும் கூறுதல் காண்க.
  மற்றிதன் கொடுமை....முற்றியது - இது அம்மையார் வினவிய ஐயத்துக்கு அமைச்சனார் துணிந்து விடை கூறியது.
 

வஞ்சகர் - செய்த தீங்கு - அரசன் பாங்கு முற்றியது....முடிந்ததோ? என்ற வினாவுக்கு இனி அரசன் பாங்கு வரக்கடவ தொன்று மின்று - என்று கூறியபடி; அரசன் பாங்கு முற்றிய தென்றமையால், அமணர் பாங்கில் முற்றாது பெரிதும் பின்னர் வர எஞ்சியுள்ளது என்றதும் குறிப்பு. செய்தது ஈங்கு - என்று பிரித்து, ஈங்கு - பாண்டியனிடம் என்றலுமாம்.

  இவர்கள் தீர்க்கின் முதிர்வதேயாவது - மேல் விளைவதாகிய வருங்கால நிகழ்ச்சியை அமைச்சுத் திறத்தால் ஓர்ந்து சொல்லியது; தீர்க்கின் - தீர்வு தேட முயன்றால்; அவர்கள் அவ்வாறு முயல்வது கருதலளவையால் தெரிந்தாராதலின் அதனால் தீராது மேலும் நோய் மிகச் செய்வதேயாகி முடியும் அதனை எடுத்துக்காட்டியபடி; மேல் (2661) உரைப்பது பார்க்க; இவ்வாறு துணிந்தமை நோய்க்குக் காரணமாய் நின்ற பொருளே பின்னரும் உடலுட் சேர்ந்தால் நோயினை மிகச் செய்யும் என்ற மருத்து நூற்றுணிபும், உலக நூற்றுணியும் பற்றி என்க. ஒப்புமுறை மருத்துவமென்று (Homeopathy) ஒன்று உளதேயெனின் அது வினை பற்றியனவற்றுக் கேலாமையுணர்க.
  தீர்க்கின் - அரசன்பால் தமது செல்வாக்கினால் தாமே முந்திக்கொண்டு தீர்க்க முற்பட்டு முயல்வார்களென்று அறிந்து கூறியது அமைச்சுத்திறன்.
  முதிர்வதே - மூண்டு பெருகும் நிலையடைவதே.
  மதில்கள் மூன்றும் செற்றவரன்பர் - ஆண்டவனது தன்மை அடியார்களிடம் விளங்குமாதலின் அம்முறையால் இவ்வன்பரும் பகைவர்களைச்செற்று நீக்குவர் என்பது குறிக்க இத்தன்மையாற் கூறினார்.
 

718

  2617. (வி-ரை.) இருதிறத்தவர் - இத்திறத்தில் நின்ற இருவரும்; அம்மையாரும் அமைச்சனாரும்;
  மன்னனெதிர் - மன்னவன் முன்பு - மன்னவன் கருத்தொழிந்து உரை மறந்து கிடந்தனனாதலின் (2611) மன்னவனைப் பணிந்து என்னாது எதிர் என்றார். ஆயின் பணிதல் எற்றுக்கெனின் மரபுபற்றி என்க; அற்றேல் அஃதாக; கருத்தொழிந்து கிடந்தவன்பால் அறிவுறுத்தல் எவ்வாறு நிகழுமெனின், அது மேல்வரும் (2619) பாட்டில் கூறுவது காண்க.
  இருதிறத்தவர் - அம்மையார் சைவத்திறம் பற்றியேயன்றிக், கணவன் என்ற தன்மையானும் ஈண்டு ஆவன செய்தற் கடப்பாடுடையராதலின், சைவத் திறமும் அமைச்சுரிமையும் பூண்ட அமைச்சரினும் திறமுடையார் என்று குறிக்க, இருவர் என்னாது இருதிறத்தவர் என்றார்.
  "இந்த வெப்பு......அருளே" என்றதும் மேல் "காயமும்....தீரும்" என்பதும் இருதிறத்தவரும் மன்னனுக்கு உரைத்தவை.
  வருதிறம் - வந்து புகுந்த விதம்; அதனால் வந்து - அது காரணமாக - அதன் மூலமாக - விளைந்தது; இது நோயின் மூலமாம்; பெருகுதல் - மூளுதல்; பெருகிய தன்மைகள் முன் (2609 - 2610 - 2611) பாட்டுக்களில் உரைக்கப்பட்டன.
  வள்ளலார் - வள்ளற்றன்மை. பாண்டி நாட்டவர்க்கருளும் பொருட்டுத் தாமே மதுரை நண்ணியருளியமையாலும், அமணர்கள் தீக்கொளுவிய போதும் செம்மையிற்