| மெய்யுணர் வளிப்போர் தன்செவியுனூடு கூறுதலின் அது மெய்யுணர்வே விளைத்து மறைச் சிறுவர் - அன்னவர் என்றும், அருளால் என்றும் பன்மையின் ஓதச் செய்தது ; அதுவேயுமன்றி அமணர் சொல்லுக் கெல்லாம் அடிமைப் பட்டுக் கிடந்த அவனது மன மயக்கத்தை நீக்கி நன்மைதீமை நாடியறியும் ஞானத்தையும் கொடுத்தது. |
| அகலுமேல் அறிவேன் - என்றது, அம்மையாரையும், குலச்சிறையாரையும் நோக்கிக் கூறியது; இஃது அவர்கள் "ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் - பிணியேயன்றிப் பிறவியும் தீரும்" என்று தனது செவியினூடு கூறியதற்கு விடையாகவும், தான் மனத்துள் அமணர்களைப் பற்றி எண்ணிய கருதலளவைத் துணிபுக்கு முடிபு காட்டுவதாயும் அமைந்தது காண்க. |
| இந்நோயகலுமேல் - அவர் பிணி தீர்த்தலே யன்றிப் பிறவி தீர்க்கவும் வல்லார் என்பதனையும் அறிவேன் என்ற குறிப்புமாம்; அகலுமேல் - நீங்குமாயின். |
| மாமறைத் தலைவர் - என்பதும் பாடம். |
| 722 |
| 2621. (வி-ரை.) என்று முன்கூறிப் பின்னும்.....அழையும் என்ன - முன் கூறியது தனது உள்ளத்துணிபினை அம்மையார் அமைச்சனார் கூறியதற்கு விடை கூறுமுகத்தால் அறிவித்தது; மேற் பின்னும் அழையும் என்றது அவர்கட்கு உத்தரவுதந்து ஆணையிட்டது; அரசன் கருத்தொழிந் துரைமறந்து கிடந்த நிலையில் தீர்வுதேடுதற்கு அவனது ஆணையின்றியே செயல் செய்தல் அமைச்சர் கடனன்றோ? எனின்: முழுதும் உணர்ச்சி நீங்கிய நிலையன்றாதலானும், (2590) அமணர் சார்பு பற்றிக் கண்டுமுட்டு கேட்டுமுட்டு என்ற நிலையில் அரசன் நின்றமையானும் அது கடனாகாது என்க. |
| வென்றவர் பக்கம் சேர்வன் - என்றது இன்னமும் ஒரு படித்தான துணிவு பெறானாயும் அமணர் சார்பின் பற்றுவிடத் தொடங்கிய நிலையில் இருசார்பும் பற்றாது பொதுப்பட நின்ற மனநிலை குறித்தது. |
| விரகு உண்டேல் - மாமறைச் சிறுவரை அழைத்தற்கு உரிய உபாயம் உண்டானால்; விரகு - உபாயம்; வழி. விரகு - உபாயம் வேண்டப்படுவ தென்னையோ?, எனின், அரசர் செல்வத்தைப் பொருட் படுத்தி வரும் நிலையினரல்ல ராதலின் தான் சென்று கண்டு வேண்டாது அழைக்க வருவரோ என்றும், சிவசிந்தை பேசுவோர் முதலிய "பிணக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே" என்றபடியுள்ள நிலையில் இங்கு வருவரோ என்றும், அவர்பால் அனுசிதம் செய்த இவர்கள் சூழலினுள் இங்கு வருவரோ என்றும் இன்னோரன்ன ஐயப்பாடுகளால் அழைத்து வருதற்கு உபாயம் தேடவேண்டியதாம் என்பது அரசன் கருத்து; பின்னர், அழைத்த பின்னரும் பிள்ளையார் நேரே அங்கு அரசனிடம் எழுந்தருளிவாராது ஆலவாய்ப் பெருமானிடம் சென்று வேண்டித் திருவுள்ள மறிந்த பின்பே எழுந்தருளிய நிகழ்ச்சியும் கருதுக. |
| அழையும் - அழைத்து வாருங்கள் என்று "ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் பிணியே யன்றிப் பிறவியும் தீரும்" என்று உறுதி கூறிய மாதேவியாரையும் அமைச்சனாரையும் நோக்கிக் கூறியது. |
| அன்று அவர் உவகைபொங்கி - அன்றுவரை முன் பல காலமும் ஏங்கி அரசனையும் நாட்டினையும் சிவநெறிப்படுத்தும் கவலை கொண்டதனால் உவகையின்றியிருந்த அவர்கள், அன்று உவகை பெற்றனராதலின் அது திருவருள் பெற வருங்கால நன்மையினை நோக்கி மேன் மேலும் பொங்குவதாயிற்று. |
| ஆர்வத்தால்.....காதல் வெள்ளத்தில் செல்வார் - உவகை பொங்கியதால் அது ஆர்வமாக விளைய, அது மேலும் முதிர்வதனால் காதல் வெள்ளமாயிற்று; உவகை - ஆர்வம் - காதல். ஒன்றற்கொன்று மீதூரும் அன்பு நிலைகள். |