884திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  யாப்பினை மாற்றி, நாற்சீரடிச் கொச்சகக் கலிப்பாவினால் மேல் வரலாறு கூறத் தொடங்கும் ஆசிரியரது திருவுற்றக் கருத்தும் கருதுக.
  இனி, ஞானத்தின் றிருவுரு முதலாக சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பு என்றது வரை நான்கும் முறையே ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் சைவ நன்னெறி நான்கினையும் குறிப்பினாலுணர்த்தி நிற்கும் வகையான் இந்நான்கு நெறிகளால் இறைவனையடையும் வழிகாட்டியருளும் மெய்க் குரவராகிப் பிள்ளையார் நின்ற நிலை குறித்தலும் காண்க.
  இன்னும் இவ்வாறு பற்பல அரிய குறிப்புக்களும் பெறவைத்த இத்திருப்பாட்டினருமை அனுபவமுடைய தேசிகர்வாய்க் கேட்டறிந்து சிந்திக்கத் தக்கது.
  ஞானத்தின் திருவுரு - சிவஞானத்தினாலமைந்த திருமேனியை உடையவர். "உணர்வரிய மெய்ஞ்ஞானம்"(1967) தாமுணர்ந்த தவமுதல்வராதலின் ஏனையோர் போலப் பசுபாச ஞானங்களாலன்றிப் பதிஞானத்தானே திருவடியை எப்போதும் மறவாது கண்டு கொண்டிருப்பவர் என்பது; அத்திருவடி நிறைவாகிய மெய்ஞ்ஞானத்தாலே பிள்ளையார் முற்று முணர்ந்த நிலையுடையார் என்பது முன்னர் "வேயுறு தோளிபங்கன்" என்ற பதிகக் கருத்தானும், அதனுட் "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ண றிருநீறு செம்மை திடமே" என்றதனாற் சிறப்பாகவும், மற்றும் பலவாற்றானும் விளக்கமாகவும் அறியக் கிடத்தல் காண்க; இவ்வாறு காலங்கடந்த முற்றுணர்வாகிய சிவமெய்ஞ்ஞானமே எல்லாம்வல்ல பேராற்றலுடைய தாதலின் அது தமது வலிய இடர்களை யெல்லாம் நீக்கி யுய்விக்க வல்லதாம் என்பதும் குறிப்பாகக் கண்டனர் என்க. "உணர்வரிய, காலங்கள் செல்லாத காத லுடனிருத்தி, காலங்கண் மூன்றினையுங் கண்டு"(களிற்றுப்படி. 31). இக்கருத்தினைப் பின்னர் "ஓடுநீ ருடன்செ லாது நிற்குமோ வோலை யென்பார், நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்ல ரென்பார்"(2705) என்று பிள்ளையாரை இவ்வாறே காட்சிபெற்ற ஆலவாய் மக்களது வாக்கில் வைத்து ஆசிரியர் உணர்த்துதலும், "ஏகமாஞ் சிவமெய்ஞ்ஞான மிசைந்தவர்" (புரா - 1237); "அலகின்மெய்ஞ் ஞானத் தெல்லை யடைவுறுங் குறியால்" (புரா - 1234), "ஞானமெய்ந் நெறிதான்....நமச்சிவா யச்சொ லமென்று....அருள்செய்து"(புரா - 1247); என்பனவற்றாலுணர்த்துதலுமாம் "போதநிலை முடிந்தவழி" (புரா - 1253) என்று முடித்துக் காட்டுதலும் காண்க.
  நான் மறையின் தனித் துணையை - சிவஞானத்தின் துணையானே மறை வழக்கினையும் சைவ நெறியினையும் சமணர் வஞ்சனையினின்றும் மீட்டு ஒங்கத் துணை செய்தலே ஈண்டு இவர்கள் வேண்டியதாதலின், அதனை அடுத்து நான்மறையின் றனித்துணையாகக் கண்டனர்: "வேத வேள்வியை நிந்தனை செய்துழல், ஆத மில்லியமண்", "மறைவ ழக்கமிலாத மாபாவிகள்" "ஓதி யோத்தறி யாவமண்" "அழலதோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர்" "நீற்று மேனிய ராயினர் மேலுற்ற, காற்றுக்கொள்ளவு நில்லாவமணர்" முதலாக வரும் திருவாக்குக்கள் காண்க. தனி - ஒப்பற்ற; தனி முதலாகிய; துணை செய்வாரைத் துணை என்று உபசரித்தார்.
  வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை - மிசையன்றி - மிசை உள்ள மதிபோலன்றி; அதற்குள்ள குறைபாடுகள் இன்றி என்பது குறிப்பு. மேல் வளர் என்ற குறிப்புமது; வான்மதியானது வளர்தல் குறைதல் உள்ளது - இது என்றும் வளர்வது; அது பௌதிக ஒளி தருவது - இது ஞான ஒளி தருவது என்பன