[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்885

  முதலாகக் கண்டு கொள்க. கொழுந்து - இளமையும், இனி 16 கலையளவும் நிறைந்தது மாறாத நிறைவு பெறும் தன்மையும் குறிப்பு. மதிதரும் ஊன வொளிபோலன்றி ஞானவொளியும் ஞானவெற்றியும் ஈண்டுக் கருதப்பட்டன. மேல் "நிலத்திடை வானினின்று நீளிரு ணீங்க வந்த கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர்"(2649) என்பதனாலும் காண்க. "கண்ணிறை கதிரே கலைவளர் மதியே"(1990) என்று தொடக்கத்திற் றொண்டர்களும் தோணிபுரத்தவர்களும் கண்டு துதித்ததும் இக்குறிப்பு.
  தேன்நக்க....எழுபிறப்பை - தேன்நக்க - தேன் துளித்து விரிகின்ற; நகுதல் - விரிதல் என்னும் பொருட்டு; அரும்பு விரியும் பருவம் நகைத்தல் போன்றிருத்தலின் இவ்வாறு கூறுதல் வழக்கு; இறைவரது திருமேனியில் அணியப் பெறுதலால் மகிழ்கின்ற என்பதும் குறிப்பு; "முருகுயிர்க்க நகைக்கும் பதத்தினுடன் பறித்த அலகின் மலர்கள்"(1023); "நல்ல கமழ்முகை யலரும் வேலைத், தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம்"(559); என்றவை காண்க. திருமுடியிற் சாத்தும் போது தேன்பிலிற்ற மலர்கின்ற என்பது.
  கொன்றை - சடையார் - சீர் - தொடுக்கும் கானம் - சடையார் சீர் என்றதனால் சடை சிவபெருமானுக்கே யுரிய சிறப்படையாளமாதலும், கொன்றையும் அவ்வாறே குறித்தலானும், சிவபெருமானது சிறப்புக்களையே யன்றிப் பிறிதொன்றும் பேசாத தொடையின் கானம் என்றவாறாயிற்று; "மதுமலர் நற்கொன்றையா னடியலாற் பேணா" "கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்து"(தேவாரம்) என்றற்றொடக்கத்த திருவாக்குக்கள் காண்க. கொன்றை மலர் - பிரணவத்தினைக் குறித்தலால் "ஓமெனும் பதத்தில் வேத மாதியுற்பவிக்கு மாலவித்தினுதிக்கு மாபோல்" என்றபடி பிள்ளையார் தொடுத்த கானம் வேதமேயாதல் குறிக்கப்பட்டது.
  கானத்தின் எழுபிறப்பு - கானம் எழுவகைப்பட்ட சுரங்களிற் பிறந்து விரிவதாதலின் எழுபிறப்பு என்றார்; "பாலையீரேழு கோத்த பண்" என்பது முதலாக அறியப்படும் முதற் பண்களும், இவற்றின் வழிப்பிறந்து வருவனவாகிய பண்களின் பேதங்களும் அடக்கக் கானத்தின் எழுபிறப்பு என்றார்; இவற்றை மேளகர்த்தா இராகங்கள் என்றும் சன்னிய ராகங்கள் என்றும் கூறுதல் நவீன வழக்கு; கானம் என்பது காந்தர்வ வேதம் என உபவேதங்கள் நான்கனுள் வைத்து எண்ணப்படும். இது எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச்செய்யும் என்ப; சிவனை யல்லாத பிறதெய்வங்களையும், மக்களையும், ஏனையுயிர்களையும் பாடி வரும் பாட்டுக்களுக்குப் பயன் பட்டுத் தான் பயன் பெறாது வருந்தித் தவங்கிடந்த கானம் என்ற தெய்வம் ஏழு பிறவியும் பிறந்து இறுதியில், "கொன்றையா னடியலாற் பேணா" - வெம்பிரானாராய திருஞானசம்பந்த நாயனாரது திருவாக்கினின்றும் போந்த திருப்பதிகங்களுட் பொருந்தி உறுதிபெற்றதென்ற குறிப்பும், கானத்தினெழுபிறப்பு என்றதனாலும், எழு என்றதனாலும், "கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்" என்று உடம்பொடு புணர்த்தியோதிய குறிப்பினாலும், பெறப்படும்; எழு - இங்குத் தீவினை தீர்த்து எழுவிக்கும் என்ற குறிப்புமாம்; சீரினையே என்ற பிரிநிலை யேகாரம் தொக்கது.
  தேனக்க மலர்க் கொன்றை என்றும் - தேனக்க கானம் - என்றும் இரட்டுற மொழிந்துகொள்க; எழுபிறப்புக் கானத்தின் - என்று மாற்றியு ரைக்கவும் நின்றது.
  கண்களிப்பக் கண்டார்கள் - கண்களிப்ப - களித்தல் - உயிரின் உணர்வு நிகழ்ச்சி. கண்ணாகிய புற இந்திரியமும் மனமும் ஆகிய இவற்றுடன் ஆன்மா இயைந்து கண்ட காட்சியினால் உயிர் களிப்பையடைந்தது என்க; "அவற்றி