| இவையிரண்டும் நிகழ்ந்த தன்மைகளுள், வெல்லுதல் பின்னர்ச் சுரத்தினிலும் தீயினிலும் நீரினிலும் அரசன்முன் சமணரை வென்றதனாலும், அருளுதல் தீருநீறு தந்து ஆட்கொண்டு சிவாகம மந்திரோபதேசமாகிய திருப்பாசுரத்தினை உபதேசித்த வகையாலும் அறியப்படும்; சரித நிகழ்ச்சிகளுட் கண்டுகொள்க. |
| வென்றருளில் உய்யும் - என்றதனால் அது செய்தருளாவிடில் உய்தி பெறாது அழிவுறுவோம் என்பதும் குறிப்பு. |
| மதியாண்மைகளால் - என்பதும் பாடம். |
| 733 |
| வே று |
2632 | என்றவ ருரைத்த போதி லெழில்கொள்பூம் புகலி வேந்தர் "ஒன்றுநீ ரஞ்ச வேண்டா; வுணர்விலா வமணர் தம்மை யின்றுநீ ருவகை யெய்த யாவருங் காண வாதில் வென்றுமீ னவனை வெண்ணீ றணிவிப்பன் விதியா"லென்றார். | |
| 734 |
| (இ-ள்) வெளிப்படை. முன் பாட்டுக்களிற் கூறியபடி அவர்கள் சொன்னபோது அழகிய பூப்போன்ற புகலியின் தலைவராகிய பிள்ளையார் "நீங்கள் ஒன்றும் அஞ்ச வேண்டா; உணர்வில்லாத சமணர்களை இன்று நீவிர் மகிழ்ச்சியடையும்படி எல்லாரும் காணுமாறு வென்று பாண்டியனைத் திருநீறணையும்படி இறைவனாணையிலே செய்வேன்" என்று கூறியருளினார். |
| (வி-ரை) இப்பாட்டினால் அம்மையார் அமைச்சர் இவர்கள் கூறியதற்குப் பிள்ளையார் கூறியவிடை அறிவிக்கப்பட்டது. |
| எழில்கொள் என்பது பூவுக்கு அடைமொழி; பூம்புகலி - அழகிய சீகாழிப்பதி; எழிலில்லாத பூக்களும் உளவாதலின் அவற்றை நீக்க எழில்கொள் பூ என்றார்; பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; பூ - தாமரையைக் குறித்தது. |
| ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா என்றது அஞ்சி வந்தவர்க்கு அஞ்சற்க என்று முதலில் அபயம் கொடுத்தபடி. |
| வென்று...அணிவிப்பன் - வென்று அருளில் என முன்பாட்டிற் கூறியதற்கு அவ்விரண்டினையும் செய்வோம் என்றுறுதி கூறியபடி. |
| விதியால் - விதியால் அணிவிப்பன் என்க. விதியால் - விதிப்படி; ஊழின் நியதிப்படி என்ற குறிப்புமாம். மேல் "ஆவது மழிவு மெல்லாம் அவர் செயல்...திருவுள்ளம் அறிவேன்" (2634) என்று கூறுதலானும், ஈண்டுத் திருவருளினைப் பற்றாது தாமே துணிந்து செய்வேன் என்று கூறுதலானும், முன்னர்ப் பிள்ளையார் கூறிய கருத்துக்கு மாறுபடுதலானும், பிறவாற்றானும் இங்குக் கூறும் விடை பிள்ளையாரது திருவுள்ளக் கிடைக்கு மாறாகக் காணப்படுகின்றது. செய்யுணடையாலும், முன்னரும் மேலும் கூறிச் செல்லும் யாப்பின் தொடர்ச்சி இடைப்பட்டு மாறுதலாலும் இப்பாட்டு ஐயப்பாட்டுக்கு இடம் தருகின்றது; மேலும் இவ்விரண்டு பாட்டுக்களையு மின்றியே சரிதத் தொடர்பு செம்மையாய் நிகழ்வதும் காணப்பெறும். மேல்வரும் (2633) பாட்டும் இவ்வாறே காண்க.(எனது சேக்கிழார் 218 -219 பக்கங்கள் பார்க்க). |
| ஒன்றும் - ஒன்றுக்கும் - ஒன்றினாலும்; உணர்வு - நல்லுணர்வு. |
| 734 |